சித்திரை தந்த நல்ல சிந்தனை/செ.புனிதஜோதி

இன்றைய அதிகாலை
அழகாய் மலர்ந்தது
மலரைப்போன்றே

எதிர்பாராதக் கணத்தில்
உதிரும் சிறகாய்
உடைந்து சிதறியது
முகம் பார்க்கும் கண்ணாடி

அத்தனை துண்டுகளாய்
இதயமும் உடைந்தது
அதுவே சாட்சி

யாரோ விதைத்த
மூடநம்பிக்கை வார்த்தைகள்
முள்ளாய் குத்த

ஒன்றுக்கூடியது
மேகக்கூட்டங்கள்
என் விழிவானத்தில்

சன்னலில் எட்டிப்பார்த்த
வானமும்,பறவையும்
கைநீட்டிக் காட்டியது
அழகாய்
மணம் பரப்பும் மலர்கள்
பசியாற்றக் காத்திருந்த கனிகள்
நல்லதை விதை
நல்லதே கிடைக்கும்
என்பதைப்போல் இருந்தது.