(விருட்சம் கவியரங்கில் இன்று வாசித்த முதல் கவிதை)

இருக்காதா பின்னே
என்று புறம் பேசுபவர்கள்
இயேசு காலந்தொட்டு
இருக்கத்தான் செய்கிறார்கள்
இவர்கள் அசைபோடுவதற்கென்றே
அக்கப்போர் இருக்கத்தான்
செய்கிறது
இவர்களொன்றும்
கலாச்சாரத்தைக் காக்கும்
காவலர்கள் அல்ல
வாய்ப்பும், வசதியும்
அமையப் பெறாதவர்கள்
புகையட்டும் பார்க்கலாம்
என்று இவர்களின் பேச்சினை
அலட்சியப்படுத்திவிட முடியாதுதான்
விஷயம் இவர்களின்
வாய்க்குள் புகுந்ததால் தான்
சீதையே தீக்குளிக்க நேர்ந்தது
மன்னர்பிரான், சக்கரவர்த்திகள்,
ராஜதந்திரிகள், கவிஞர்கள்,
படைத்தலைவர்கள் இவர்களின்
அந்தப்புர விஷயமெல்லாம்
இவர்களுக்கு அத்துப்படி
டீ கடை பெஞ்சில்
அமர்ந்து பேசுபவர்கள்
வலது சாரிகளுமல்ல
இடது சாரிகளுமல்ல
சாதாரண வழிப்போக்கர்கள்
இங்கிருந்து தான்
உருவாகிறது
இந்தியாவின் ஜனநாயகம்!
