பதிவுத் திருமணம்/அழகியசிங்கர்

இந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் வனிதா.

வனிதா அவள் அலுவலகத்தில் பணிபுரியும் பார்த்தசாரதியுடன் ஓடிப் போகப் போகிறாள்.

அவள் கள்ளக் காதலை அம்மாவிடம் சொல்லவில்லை. அம்மா விரும்ப மாட்டாள். அப்பாவிடம் சொல்லவில்லை. அப்பா விரும்ப மாட்டார். அம்மாவும் அப்பா பக்கம்.

இரண்டு மூன்று ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி வனிதாவிடம் சொல்லிவிட்டான் இனிமேல் காத்திருக்க முடியாது என்று.

வேறு வழியில்லை வனிதா அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறாள்.

சைதாப்பேட்டையில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் காலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வடபழனி கோயிலில் தாலி கட்டுவதாக தீர்மானம்.

பார்த்தசாரதி வீட்டிற்கும் வனிதா வீட்டிற்கும் இருவரும் சொல்லவில்லை. ஆனால் நண்பர்கள்தான் நடத்தி வைக்கிறார்கள்.

சரியான நேரத்திற்கு பாரத்தசாரதியும் வனிதாவும் வந்து விட்டார்கள். நண்பர்கள் புடைசூழ ரிஜிஸ்டர் முன் நின்று கொண்டிருந்தார்கள். ரிஜிஸ்டர் அவர்களைப் பார்த்துக் கேட்டார் : “உங்கள் பெற்றோர்கள் யாரும் வரவில்லையா ?”
“இல்லை” என்றார்கள் இருவரும்.
நிரம்ப மகிழ்ச்சியுடன் இருவரும் ரிஜிஸ்டர் முன் கையெழுத்து போட்டார்கள். கூடி இருந்த நண்பர்கள் கைத் தட்டினார்கள்.
நிறுத்தாமல் கைத் தட்டல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

யார் அப்படி கைத்தட்டுகிறார்கள் என்று அவர்கள் பார்த்தார்கள். அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் பெற்றவர்கள்தான் நின்றுகொண்டு கைத்தட்டிக் கொண்டிருந்தார்கள்.