செடி போட்ட கவுன்/நாகேந்திர பாரதி

செடி வளர்ப்பதில் அவ்வளவு ஆசை சுசிக்கு . போடற கவுனிலே கூட செடி டிசைனிங் இருக்கணும் அவளுக்கு . போதீசுக்கு அம்மாவுடன் சேர்ந்து போய் பார்த்து எடுத்து வருவாள் .
‘ ஏண்டி இந்த டிசைனிங் போரடிக்கலியா உனக்கு . இத்தோட இது பத்தாவது ‘ என்று திட்டினாலும் கேட்க மாட்டாள் .

அப்பாவுடன் சேர்ந்து போய்ப் பார்த்துப் பார்த்து செடிகளை வாங்கி வருவாள் . பூக்களில் ரோஜா , மல்லிகை , மற்றும் துளசி , கற்பூரவல்லி என்று மருந்துச் செடிகள் , மற்றும் கற்றாழைச் செடி இத்யாதி . அந்த அபார்ட்மெண்டில் மொட்டை மாடியில் பாதி இடத்தை ஆக்கிரமித்து இருந்தன இவள் வைத்த தொட்டிகள்

‘அம்மா , இனிமேல் உனக்கு இருமல் வந்தா டாக்டரிடம் போக வேண்டாம் . இந்தக் கற்பூர வல்லி இலைகளைக் கொஞ்சம் கிள்ளி வாயிலே போட்டு கடிச்சு சாறைக் குடி , சரியாயிடும் . ‘

‘அப்பா , வாக்கிங் போயிட்டு அங்கே விக்கிற கண்ட ஜுஸைக் குடிக்காதீங்க . நம்ம கற்றாழைக் கீற்று ஒண்ணை நறுக்கி தோலைச் சீவி மிக்சியில் அடிச்சு மோர் சேர்த்துக் குடிச்சா சூடு தணியும் இந்த சம்மருக்கு . ‘

ஆச்சு . ஒரு வருஷம் ஆகி விட்டது மொட்டை மாடியில் தோட்டம் போட்டு . ஸ்கூல் விட்டு வந்தவுடன் மேலே ஓடி விடுவாள் , அந்தச் செடிகளிடம் கொஞ்ச நேரம் செல்லம் கொஞ்சி விட்டு தான் வருவாள் . அவள் சொல்வதுதான் சட்டம் அந்த வீட்டில் .ஒரே பெண் . புத்திசாலி . படிப்பில் மட்டும் அல்ல , மற்றவர் மேல் காட்டும் அக்கறையிலும் , அடுத்தவரைப் புரிந்து கொள்ளும் அறிவிலும் தான் .

அன்று அஸோஸியேஷன் செக்ரெட்டரி கூட மீட்டிங்குக்கு கீழே போய் விட்டு வந்த சுந்தர் சுரத்தே இல்லாமல் இருந்தான் .

‘என்னங்க என்ன ஆச்சு ‘
‘நம்ம மொட்டை மாடிக்குக் கீழே உள்ள அபார்ட்மெண்ட் ஓனர்கள் , அஸோஸியேஷன் லே கம்பிளைன்ட் பண்ணியிருக்காங்க . அவங்க வீட்டு மேல் சுவர் எல்லாம் தண்ணீர் ஒழுகுதாம் . காரணம் நம்ம மொட்டை மாடியிலே வச்சிருக்கிற செடித் தொட்டிகளால் தானாம் . ‘

‘நம்ம பில்டிங் கட்டி பல வருஷம் ஆயிட்டதாலே , மேலே தரை இளகி நம்ம தொட்டியிலே ஊத்தற தண்ணி தொட்டி வழி கீழிறங்கி தரை ஊறி கீழே அவங்க வீட்டு மேல் சுவரெல்லாம் திட்டு திட்டா தேங்குது . விட்டா அப்புறம் ஒழுக ஆரம்பிச்சிடும் . ‘

‘அதனாலே தொட்டியை எல்லாம் எடுத்துறணுமாம் . செக்ரெட்டரி கண்டிப்பா சொல்லிட்டாரு .வீட்டுக்குளே வைக்கவும் இடம் இல்லே . என்ன செய்யிறது . வாடகை வீடா , காலி பண்ணி வேற வீடு பார்க்க , சொந்த வீடு , லோன் இன்னமும் முடியலே . ம் , சுசி கிட்டே எப்படி சொல்றது . ‘ என்று வருத்தப்பட்டான் சுந்தர் .

அப்போதுதான் பள்ளிக்கூடம் விட்டு வந்த சுசீ ‘ யூனிபோர்ம் கழட்டாமலே ‘ அம்மா வா , போத்தீஸ் போய் கவுன் வாங்கணும் , உனக்குப் பிடிச்ச டிசைனில் ‘ என்றாள் . சுந்தரும் ரத்னாவும் முழித்தார்கள் .

அவர்களுக்குத் தெரியாது , கீழே செக்ரெட்டரி அந்த மாடி வீட்டுக்காரர்களை சமாதானப் படுத்திக் கொண்டிருந்த போது சொன்னது ஸ்கூல் விட்டு வந்த சுசீ காதிலும் கேட்டது .
‘இனிமே உங்க வீட்டு சுவருக்குப் பாதிப்பு வராது . நாளைக்கே எல்லா தொட்டிகளையும் மொட்டை மாடியிலே இருந்து எடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு . ‘