சித்திரம்/பி.ஆர்.கிரிஜா

படம் வரைவதில் எப்பொழுதுமே அதிக நாட்டம் உள்ளவள் ப்ரியா. அவள் தோழி மாலாவும் ஃபோன் செய்து நகரின் ஒரு முக்கியமான அரங்கில் மாடர்ன் ஆர்ட் எக்சிபிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள். அதை எப்படியாவது போய் பார்த்து விட வேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசை. மாலாவை உடனே வரச் சொல்லி இருவரும் போவது என்று முடிவு செய்தார்கள்.


அடுத்த நாள் காலை ப்ரியாவும் மாலாவும் அந்த ஆர்ட் கேலரியில் நுழைந்தபோது காலை மணி 11. உள்ளே நுழைந்தவுடன் அங்குள்ள ரிஜிஸ்டரில் ஸைன் செய்துவிட்டு நேராக கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்தார்கள். பிரியா தான் மிகவும் ஆர்வமுடன் பார்க்கத் தொடங்கினாள். ஒரு யானையும், பாகனும், கோட்டோவியத்தில். அதைத் தாண்டி திரும்ப நினைத்தவள் ஒரு பூச்செண்டு அருகில் இரு குதிரைவால் சடையுடன் ஒரு 13 வயது பெண்ணின் ஓவியம் அவளின் கவனத்தைக் கவர்ந்தது. அந்த ஓவியத்தின் முன் அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்து விட்டாள் பிரியா. அந்த ஓவியத்தில் உபயோகித்திருந்த நிறம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றே வித்தியாசமாக இருந்ததால் அவளுக்கு அது மிகவும் பிடித்தது.

“என்ன ப்ரியா…? எனக்கு இது ஒன்னும் பெரிய ஓவியமா தெரியல…” என்றாள் மாலா.
அந்தப் பெண்ணின் முகவெட்டு ஒரு வித்தியாசமாக உள்ளது. உடனே, “அட, போ ப்ரியா….உனக்கு ஆனாலும் கற்பனை வளம் அதிகம், இது ஒரு சாதாரண ஓவியம்….. சரி வா, என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தாள் மாலா.


இது மாடர்ன் ஆர்ட்டும் இல்லை, கோட்டோவியமும் இல்லை, புது மாதிரியாக இருக்கிறதே இதை வரைந்தவர் யார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் என்றாள் ப்ரியா. யோசித்துக் கொண்டே நடக்கும்போது, ஒரு நிமிடம் அந்த இடத்தில் சிலையாக நின்று விட்டாள் ப்ரியா.


“ஹலோ மேடம்…. என்ன அந்த ஆர்ட் பீஸ் மிகவும் பிடித்திருக்கிறதா ? நான் தான் அதை
வரைந்தேன் என்று ஒரு 13 வயது பெண் அவளை தொட்டுப் பேசினாள். அந்த ஓவியத்தில்
உள்ள பெண்ணே அவள் அருகில் நின்று பேசினால் எப்படி இருக்கும் ? அந்த ஓவியத்திலிருந்து உயிரோடு எழுந்து வந்து இவளுடன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தாள் அந்தப் பெண். பிரியாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எவ்வாறு கற்றுக் கொண்டாய் என்று அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ள அவளுக்கு மிகவும் ஆவல். ஏற்கனவே அவளுக்கு வரைவதில் நாட்டம் அதிகம் உள்ளதால் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள். அவளும் விளக்கமாக கூறிக் கொண்டே வந்தாள்.

ப்ரியாவும், மாலாவும் அவளுடன் வெளியே வந்தார்கள்.. உடனே மாடர்ன் ஆர்ட் க்ளாஸில் சேர்ந்து விட வேண்டும் என்று மாலாவிடம் கூறினாள். மாலாவும் தலையில் அடித்துக் கொண்டு அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

ப்ரியா தான் ஒரு பெரிய ஆர்ட் கேலரி வைத்து எக்சிபிஷன் நடத்துவது மாதிரியும்,
எல்லோரும் அவளிடம் ஆட்டோக்ராஃப் வாங்குவது மாதிரியும் கற்பனை செய்தாள். மாலா அவளை உலுக்கினாள். சிரித்துக் கொண்டே தன்னுடைய காரை நோக்கி நடந்தாள் ப்ரியா.