புதுவையின் புரட்சிக்கவி /♦அனங்கன்.

புதியதோர் உலகம் செய்வோம்…
புறப்படு தமிழா என்றாய்…
உனக்குப்பின் இங்கு யாரும் இல்லை…
நீ தமிழ்த்தாய் தொலைத்த பிள்ளை.

தமிழை அமுதென்று சொன்னாய்…
அதை உயிருக்கு நிகராகக் கொண்டாய்…
பிழையான தமிழ்பேசி நாங்கள்…
உன்னைச் சிலையாக்கிப் போற்றுகின்றோம்.

குடும்பவிளக்கில் எண்ணெய் இல்லை…
இருண்டவீடும் விடியவில்லை..
இருள் அகற்ற வந்தோரெல்லாம்…
தனக்கு மட்டும் வெளிச்சம் கண்டார்.

உன்கவிதைகள் எல்லாம் பாடி
கைதட்டுப்பெறுவார் விளம்பரம் தேடி…
தமிழனின் வாழ்வும்…வளமும் எங்கே…?
முழங்கிட எச்சங்குமில்லை.

இதுவா நீபாடிய தமிழ்மானப்பண்பு…
பாவம் நீயென்ன செய்வாய்
சிலையான பின்பு…
மீண்டும் பிறந்துவா
மொழியார்வம் கொண்டு…
தமிழ் இறவாமல் வாழட்டும்
அதுபோதும் நன்று.