
என்னை அடையாளம் தெரிகிறதா?
தெரியவில்லையா, சரி… சொல்கிறேன்.
வாரப் பத்திரிகைகளில் சிறுவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருப்பீர்கள், அலட்சியமாக..
நான் வரைந்த ஓவியங்களை – ஓவியங்களா? இல்லையில்லை கோணல் கோட்டுச் சித்திரங்கள் – ஒரு ‘சிறுவர் மலரி’லும் போட மாட்டார்கள்! அதற்கு எனக்குத் தெரியாத அல்லது புரியாத வேறு காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை என் ஓவியங்களே சுமார்தானோ…
யானை, பூனை, நாலு இதழ்ப் பூ, பூச்சாடி, மலை, ஆறு, மரம், காந்தி எல்லாம் வரைந்தேன். ஒருமுறை மலையிலிருக்கும் பெருமாள் முகம் கூட வரைந்த ஞாபகம்.
வாரம் வரும்; சிறுவர் மலரும் வரும்; ஆனால் என் சித்திரங்கள் இருக்காது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வருத்தமாய் இருக்குமா என்று தெரியாது, எனக்கு இருக்கும்.
“சரி, பரவாயில்ல.. அடுத்த வாரம் வரும் இல்லைன்னா அதற்கு அடுத்த வாரம்… அப்படியும் இல்லைன்னா வேற படம் நல்லா போடு” – இவ்வகைப் பொறுப்பில்லா சமாதானங்கள் எனக்கு அலுத்துவிட்டன. ஆனாலும், நான் வரைவதை நிறுத்த மாட்டேன்.
குச்சி குச்சியாய்க் கைகள், கோணலாய் ஒரு நீள முகம், கருப்பு சட்டை, நீல ஜீன்ஸ், குட்டை முடி… அருகிலிருந்த ஃப்ளவர் வேஸிலிருந்து பூக்களைப் பிய்த்து மூக்கு, கண், வாய், சட்டை ஜீன்ஸில் டிசைன் என்று ஒட்டினேன்! பிய்க்க, பிய்க்க பூச்சட்டியின் செடியிலிருந்து பூக்கள் வந்து கொண்டே இருந்தன… அதை விட விநோதம், அந்த குச்சி ஓவியம் என்னையே அச்சடித்தாற்போல இருந்ததுதான்!
இப்போது என்னை அடையாளம் தெரிகிறதா? இன்னுமொரு முறை இந்த ஓவியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!
இந்த வாரம் அனுப்பிவிடலாமா? வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வித்தியாசமான சித்திரமல்லவா?
வியர்க்கிறது; மின்விசிறியைச் சுழல விட்டேன்…
ஒட்டிய பூக்கள் சிறகடித்துப் பறந்தன. தலை முடி கலைந்து முகத்தின் மீது புரண்டது. மூக்கு, கண், தாடை, சட்டை, ஜீன்ஸில் பூக்கள் மறைந்து, குச்சிக் கைகளும், கால்களும், முகமும் கோடுகளாய்… சித்திரம் இருந்த இடத்தில் நானும் இல்லை!
