
(21/04/23 அன்று விருட்சம் நடத்திய 53 வது கதைஞர்கள் கூட்டத்தில் பேசியதன் பதிவு)
கன்ஷ்யாம் தேசாய் , குஜராத்தில்,05/06/1934ல் பிறந்தவர். குஜராத்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர். சமர்ப்பண் என்ற இதழில் முதலில் இணையாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், அது நவ்னீத் என்ற பத்திரிகையில் இணைந்த போது, நவ நீத சமர்ப்பண் என்ற பெயரில் வெளியானது. அதில் ஓய்வு பெறும் வரை ஆசிரியராக இருந்தார். இவரது தோலு என்ற சிறுகதைத் தொகுப்பு குஜராத் அரசின் பரிசைப் பெற்றது. குழந்தைகளுக்கான மௌலிக் கதாமாலா சாகித்ய அகெடெமி பரிசு பெற்றது. தன்னிலையிலும், நவீன பரிசோதனை முறைகளிலும் கதை எழுதியவர்.
கூட்டம் என்ற சிறுகதையைப் பற்றிப் பார்ப்போம்.
அதிகாரத்தை, படிமங்களின் உதவியுடன் இதில் அவர் கேள்வி கேட்கிறார்.
பின்னர் அலறிக் கொண்டிருந்த அந்தக் கூட்டம் வடமேற்கில் நகர்ந்தது; தூசு படலம் ஒன்று உயர்ந்து உடனே அடங்கியது; நானும் கூட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்டேன் என்று தொடங்குகிறது கதை.
ஓடிக்கொண்டே இருப்பது எங்கள் வாழ்க்கை. சிலர் இருமினார்கள் எனக்கு மூச்சு இரைத்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானோம் கூட்டத்தின் ஒரு புறத்தில் நான் இருந்தேன் எங்கெங்கும் மனித மயம். மனித ஆணிகளால் அறையப்பட்டவன் போல நான் இருந்தேன். விஷயம் தெரிந்த சிலர் மலைச்சரிவுகளில், மலைமுகடுகளில் சமவெளியில், கடற்கரையில், பள்ளத்தாக்குகளில் மூங்கில் காடுகளில், நெல் வயல்களில், தென்னந்தோப்புகளில் எங்கும் மனித மயம் என்றார்கள். கட்டளைக்குக் கீழ்ப்படியும் மனிதர்களின் நெருக்கடி இங்கே பேசப்படுகிறது
சில நேரம் அசைவின்றி ஆழ்ந்த மோனநிலையில் இருப்பார்கள் பிறகு குறிப்பிட்ட திசையை நோக்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் தள்ளிக் கொண்டும் நெருக்கி அடித்துக் கொண்டு ஓடுவார்கள்.
வடகிழக்கு பிராந்திய கூட்டத்தினர் ஒரே குரலில் ஹோ ஹோ என்று படிப்படியாக உச்சஸ்தாயியில் கூச்சலாகக் கத்தி பின்னர் அதை நிறுத்துவார்கள். (வட கிழக்கு என்பதை கவனியுங்கள்.) இரவு நேரத்தில் அடர்ந்த காட்டில் அதிரும் ஆப்பிரிக்கர்களின் பறை ஒலி போல அந்தக் கூச்சல் எல்லா திசைகளிலும் காற்றில் கலந்து சூழலில் தீப்பிடித்து விடும் கட்டியவர்கள் தொண்டையும் கேட்பவர்களின் செவிப்பறையும் பல நாட்களுக்கு செயல் இழந்து போய்விடும்
இந்தக் கூட்டத்தின் பரப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. மேலிருந்து பார்க்கையில் ஒன்றாகவே தோன்றும் திரள் இப்போது அருகில் பார்க்கும் போது சிலருக்கு மூக்கின் அடியில் மச்சம் இருக்கிறது, கண் இமைகள் நரைத்து இருக்கின்றன, பள்ளமான வாயால் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. (மேம்பட்ட பார்வை யாவரும் கேளிர் எனக் காட்டுகிறது.) அலறிக்கொண்டு பல்வேறு உருவங்களில் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த வியர்வை, தள்ளல் இழுத்தல், கூச்சல் என்னை (கதை சொல்லியை) என்னவோ செய்கிறது.
நாங்கள் முதலை வடிவில் நிற்க வேண்டும் என்று தென்மேற்கு திசையில் இருந்து ஒரு கட்டளை வந்தது. யார் இட்ட கட்டளையோ தெரியாது. தூரத்து மலையில் மனிதர்கள் மிகுதியாய் எதிர் திசைகளில் ஓடினார்கள். ஆயினும், முதலை வடிவ வகுப்பு அமைப்பில் தம்மை இணைத்துக் கொள்ளும் முயற்சியிலேயே பலர் இருந்தார்கள்.
(இங்கே வடமேற்கு, தென்மேற்கு என்று குறிப்பால் அவர் உணர்த்துவதைக் கவனிக்க வேண்டும்)
தென்மேற்கு திசையில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் இருந்து யாரோ ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, பல சௌகரியங்களை அனுபவித்துக் கொண்டு மனதில் தோன்றியதையெல்லாம் கட்டளையாக பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரை தாம் பார்த்திருப்பதாக சிலர் சொன்ன போதிலும் அவையெல்லாம் இட்டுக்கட்டுக் கதைகள் என்று வெளியாயிற்று.
அரண்மனைக்கு செல்லும் வழியைக் காட்டுகின்ற வரைபடம் கூட இருப்பதாக சிலர் சொன்னார்கள் ஆனால் அந்த எழுத்துக்கள் காலக்கிரமத்தில் அழிந்து போய்விட்டதால் அதன் வழிகாட்டுக் குறிப்புகளை கண்டுபிடிக்க இயலாது போயிற்று என்றார்கள். தன்னால் படிக்கும் முடியும் என்று சிலர் பெருமை அடித்துக் கொள்வார்கள். அப்படிச் சொல்பவர்களை மக்கள் மதித்து மரியாதை செய்வார்கள் . ( அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, மத அதிகாரம் இங்கே சொல்லப்ப்டுகிறது.)
அரண்மனைக்கு செல்லும் வழி அபாயகரமானது செங்குத்தான மலைகள், வெள்ளம் வரும் ஆறுகள் கொடிய மிருகங்கள் இவை இருக்கும் என்று கூறியிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட அணிவகுப்பை உருவாக்க ஓடும் வேளையில் மிகுதியான மக்கள் தம் கைகளை உயர்த்தியவர்களாய் நாங்கள் அரண்மனையை நோக்கி ஓடுகிறோம் ஓடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஓடுவார்கள். ஆட்டம் பாட்டம் எல்லாம் இருக்கும்; ஆர்வம், உற்சாகம் இருக்கும். ஆனால்,எனக்கு வருத்தமாக இருந்தது .
மனம் போன போக்கில் யாரோ ஒருவர் இப்படிப்பட்ட ஆணைகளை பிறப்பிப்பது சரிதானா? இந்த மக்கள் மீதும் எனக்கு கோபம் வந்தது.
அசையாது நின்ற போதிலும் தெற்கிலிருந்து பலவித சப்தங்கள் வந்து கொண்டிருந்தன அங்கே கொந்தளிப்பு இன்னும் தீரவில்லை ஒவ்வொருவரும் ஆசுவாச பெருமூச்சும் விட்டுக் கொண்டிருந்தனர். கட்டளைகள் எப்படி வருகின்றன, கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு திரண்டு ஒரு குறிப்பிட்ட உருவில் அணிவகுகிறார்கள், முந்தைய நாட்களில் எவ்விதம் வேறு வேறு அணிகள் இருந்தன, இனி வரும் நாட்களில் என்னென்ன உருக்களில் அணிகள் அமைக்க நேரலாம் என்பது குறித்தும், காற்று வீசும் விதம் பற்றியும் கட்டளைகள் எப்படி எல்லாம் காற்றில் பரவின என்பது பற்றியும் செய்திகள் பலரிடமும் சென்றன அவ்வாறு சென்றதில் தங்களின் பங்கு பற்றியும் அதற்கான சன்மானங்கள் பற்றியும் அவர்கள் தம்முடன் கலந்து பேசினார்கள் வாயடைத்துப் போய் அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இதற்கு அப்பால் என்ன நேரும் என்பதை அறிய முயன்றேன்.
இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர் நடுங்கினர். பிறகு எச்சரித்துக் கொண்டு ஓடி மலை மீது ஏற முயன்றனர். மேலே ஏறும்போது ஆழ்ந்த அமைதி என்னை முழுமையாக ஆட்கொள்ளும் வினோதத்தை நான் உணர்ந்தேன். (எத்தனைத் துயரத்திலும் மனித மனம் நாடும் ஆனந்தம் இதில் காட்டப்படுகிறது.)
கொடுமுடியில் இருந்து பார்க்கும்போது கூட்டம் உருவ அமைதிகளை மாற்றிக்கொண்டு முன்னேறி சென்று கொண்டிருந்தது; ஒரு மண்புழுவைப் போல இந்த கூட்டம் ஓலமிட்டு ஓடத் தொடங்கும். பிறகு உறைந்து நிற்பார்கள் அல்லது மந்திரத்தினால் தூங்கவைக்கப்பட்டவர்களைப் போல அவர்களும் அவர்களைச் சூழ்ந்துள்ள இடத்தில் உள்ள புதர்களோடு மரங்களோடு பாறைகளோடு மலைகளோடு ஒன்றி விடுவார்கள் நகர மாட்டார்கள், நகர நினைத்திருக்கவும் மாட்டார்கள் இவர்கள். ( உயிரும், உணர்வும் உள்ள மனிதன் அவையில்லாத பொருளாகி சுயத்தைத் தொலைப்பதைச் சொல்கிறார்)
திடீரென்று ஒரு சத்தம் கேட்கும்; பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு நெருக்கி முன்னேறும் கூட்டத்தினால் இன்னமும் குழப்பம் அதிகரிக்கும்.
மலை மீது ஏறத் தொடங்கியதும் மனிதர்கள் இடையே இருந்த தூரம் குறையத் தொடங்கியது எல்லோருமே கருங் கடலில் மூழ்கியவரைப் போலத் தோன்றலாம் எங்கும் நுரை மயம். இந்த நீர்க்குமிழிகள், தமக்குள்ளே வெடித்துக்கொண்டு நடம் புரிந்து கொண்டு. ஒளிர்ந்து, விரிந்து குறுகி…. ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் புற வடிவக் கோடுகள் எப்படி பூமியின் வருவரை முன் மாதிரியாக இருக்கிறதோ அதைப்போல இந்த மனிதர்களும் வெவ்வேறு இடங்களில் நின்று கொண்டு முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள் அவர்கள் நகர்ந்து கொண்டே இருப்பதால் வடிவங்கள் மாறுகின்றன. நானும் கூட ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன்; ஒரு குறிப்பிட்ட திசை எனக்கென விதிக்கப்பட்டிருக்கிறது ஒரு பெரிய சித்திர திரைச் சீலையில் இருந்து ஒரு மிகச்சிறிய கருப்பு அல்லது நீல நிறப் புள்ளியை நீங்கள் இடம் மாற்றம் செய்தால் அல்லது நீக்கினால் படம் முழுமையாக வேறுபட்டு விடும், மாறிவிடும், ஒரு புதிய படமே.
ஒரு பெரிய சித்திர திரைச் சீலையில் இருந்து ஒரு மிகச்சிறிய கருப்பு அல்லது நீல நிறப் புள்ளியை நீங்கள் இடம் மாற்றம் செய்தால் அல்லது நீக்கினால் படம் முழுமையாக வேறுபட்டு விடும், மாறிவிடும், ஒரு புதிய படமே உருவாகிவிடும். நான் கூட அந்த பெரிய திரைச் சீலையில் ஒரு சிறிய கரும்புள்ளி; நான் என்னுடைய இடத்தில் இருந்து கூட்டத்தினர் செல்லும் பாதையை விட்டு விலகி வேறு திசையில் நகர்ந்து எனக்கென ஒரு தனித்தன்மை உடைய இயக்கத்தை ஏற்படுத்துவேன் என்றால் அப்போது மொத்த அமைப்பும் உரு மாறிவிடும். ஒரு புதிய வடிவம் தோன்றும். நான் அந்தப் புதிய வடிவத்தின் படைப்பாளி ஆகி விடுவேன். அப்படி என்றால் இந்தப் பெருங்கூட்டத்தின் படைப்பாளி நான். இனிமேல் என் ஏக்கத்தையும் இந்த கூட்டத்தின் திசையையும் நானே தீர்மானிப்பேன். என்னை திடப்படுத்திக் கொண்டேன்.
இப்போது நாங்கள் மலையின் தட்டையான பகுதிக்கு வந்திருந்தோம். நாங்கள் நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு குரல் ஒலித்தது பாம்பு வடிவத்தில் அணிவகுத்து நில்லுங்கள் என்று சொன்னது அந்தக் குரல். எனது நேரம் இப்போது வந்துவிட்டது எனத் தீர்மானித்தேன். வலப்புறம் இடப்புறமாக எங்களை நகரும்படி கட்டளையிட்டார்கள். சிறு சிறு வளைவுகளாக வட்ட வட்டமாக நாங்கள் நகர வேண்டி இருந்தது. நான் என்னை ஆக்ரோஷப்படுத்திக் கொண்டேன் நேராகவே நடப்பேன் என்று தீர்மானித்தேன் ஒரு சில காலடிகளாவது நான் இவ்வாறு செய்யக்கூடும் என்றால்…
ஆனால் புயலால் தாக்குண்டவன் போல தூக்கி எறியப்பட்டேன் என் முன்னால் சென்றவர்களின் நகர்வுகளைப் புறக்கணித்துவிட்டு பகீரத பிரயத்தனமாக நேராக நடக்க முயன்றேன்; எனக்குப் பின்னால் வந்தவர்களை தடுக்க முடியவில்லை மொத்த கூட்டமும் பெரும் வேகத்துடனும் விசையுடனும் சுழன்று அடிக்கத் தொடங்கியது அந்த மிருக இயக்கதிற்கு முன்னால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
முன்னால் தள்ளப்பட்டேன்; இழுத்துச் செல்லப்பட்டேன் கூட்டத்தோடு. நான் முன்பு நின்ற இடத்தை வெறுப்புணர்ச்சியோடு பார்த்தேன் நம்பிக்கை இல்லாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது ஒரு சில காலடிகளாவது வித்தியாசமாக நடந்திருப்பேன் என்றால் இந்த கூட்டத்தின் அமைப்பையே மாற்றி இருக்க முடியுமே? ஆனால் இப்போது இயலாத ஒன்று இது.
நகரும் போது, வளையங்கள் உருவாக்கும் போது, கூட்டத்தோடு வளைவுகளில் திரும்பும்போது, அந்த அமைப்பை மாற்ற இன்னொரு வழி கூட இருப்பதாகத் தோன்றியது. நான் அந்தப் புள்ளியை அழித்துவிடலாம்; துணிச்சலான புதிய உலகத்தைப் படைத்தவன் என்ற பெருமை என்னைச் சாரலாம் ஆனால் நான் நிராதரவாய் நிற்கிறேன். அந்தப் புள்ளியை அழிக்க என்றால் முடியவில்லை. இப்போது என் மீதே எனக்குக் கோபம் வருகிறது அனைவரையும் சபிக்கிறேன்; குறிக்கோள் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் இந்தப் புள்ளியை அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால்…….?
கட்டுரையைப் போன்ற ஒரு கதை. அதிகாரத்தின் மீது அவருக்கு இருக்கும் கோபமும் வெறுப்பும் வெளியாகிறது. பொதுவாக அதிகாரங்கள் நிறுவனமயமானவை .அரசியல் சமூகம், பொருளாதாரம், குடும்பம், மனித இனம், ஜாதி, மதம் எல்லாமே நுணுக்கமாகப் பார்த்தால் குவிந்த அதிகாரத்தின் வெவ்வேறு வடிவங்கள் தான். முதலையாக இருக்கலாம், பாம்பாக இருக்கலாம் அந்த உருவ அமைப்பிற்குள் மனிதன் வாழ்க்கை கட்டுப்படுகிறது கட்டவும் படுகிறது. சடலங்கள் ,வடகிழக்கு பிராந்தியத்தின் கூக்குரல், ஆதி மனிதனைச் சொல்லும் ஆப்பிரிக்கா கண்டம், செவ்விந்தியர் நிலை, என்று அரசியலை பேசுகிறது இந்தக் கதை.
அதே நேரம் காணாத அரண்மனையில் இருந்து யாரோ சொன்ன கட்டளைகள், மதத்தை அதன் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது அதற்கான வரைபட எழுத்துக்கள் அழிந்து விட்டன, அந்த வகை எனக்குத் தெரியும் ,நான் கூட்டிப் போகிறேன் என்று சொல்லும் மத குருமார்களைப் பற்றி மெல்லிய கசப்பு நகைச்சுவையுடன் சொல்கிறது.
அனைத்தைம் மீறி குழு மனப்பான்மை பெரும்பான்மை பலம் மனித சமுதாயத்தை வழி நடத்துகிறது என்றும் இந்த அமைப்புகளை மாற்ற முயல்வது மிகக் கடினம் என்றும் கதை சொல்கிறது
கவிதைகளில் வரும் படிவங்கள் உணர்ச்சியை கடத்தல்லவை; இந்தக் கதையில் உருவகமாக வரும் வானம் தொட்டு பூமி வரை மனித கூட்டத்தின் மீது ஒரு சிறு அதிகாரம் செல்லுபடியாவதையும் பல மனிதர்கள் அதற்கு கீழ்ப்படிவதையும் அதன் மூலம் ஆதாயம் பெறுவதையும், எதிர்க்க நினைப்பவர்களின் எண்ணம் கூட செயலாக்கு முடியாத இயலாமையும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன.
