ம் / ஆர். வத்ஸலா

ம்..

என வீட்டுள் நுழைவார் அப்பா
அலுவலகத்திலிருந்து
அம்மா, அண்ணன், நான்
இல்லாதவராய் ஆகிவிடுவோம்
அப்பா அநாதையாய் அரசாளுவார்
இன்னமும் அப்படியே

ம்..

என கம்பீரமாய் கோபம் கொள்வார்
பாட்டு வாத்தியார்
சுருதி சற்றே விலகினால்
மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்க
வருமானமும் முகமும் சுருங்க
இன்று அவர் குரல்
சுருதி குறைந்தொலிக்கிறது

ம்..

‘வாடி கண்ணா’ என
மடியிலமர்த்தி கதை சொல்லுவாள்
அடுத்த வீட்டுப் பாட்டி

இன்றும்
இவரின் அன்பு சொட்டும்
’ம்’மில் திளைக்கையில்
இவர் எனக்கு பாட்டியாகிறார்