ம் ம்./மதுவந்தி

  1. தன் நினைவின்றி
    படுத்திருக்கிறார் தாத்தா,
    ஒரு மாதத்திற்கும் மேலாய்.
    செய்தித் தாளில்
    படித்துச் சொல்கிறேன்,
    ” இன்று மகாகவி நினைவு தினம்”.
    உரக்கப் படிக்கிறேன்.
    ” ம் …ம் ” மெலிதாகக் கேட்கிறது.
    என் நப்பாசையின் பிரமையா?
    மீண்டும் ஒரு முறை
    படிக்கிறேன்.
    இம்முறை சற்றே
    உரத்த குரலில்.
    “ம்….. ம்” சப்தம்
    தெளிவாய்க் கேட்கிறது.
    கண்ணில் நீர் வழிய
    மேலும் படிக்கிறேன்,
    நம்பிக்கையோடு .

2.

ஞாயிறு மாலையில்
காஃபியருந்தி
உற்சாகமாயிருந்த
அப்பாவிடம்,
முன்னரே இருமுறை
மறுக்கப்பட்ட,
பள்ளிச் சுற்றுலாவுக்கு,
பணத்தோடு அனுமதி
கெஞ்சி நின்றான்.

ஏக்கமும், ஆவலும் சேர
பதிலுக்குக் காத்திருந்தான்.
யோசித்து, மேலே சுவர் பார்த்து,
மெதுவான குரலில்,
அப்பாவின் “ம்… ம்”.
உற்சாகம் கரைபுரள
துள்ளிக் குதித்து,
விளையாட ஓடினான்.