
இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற போதும், ஷேக்ஸ்பியரின் பிறந்த மண்ணான இங்கிலாந்தில் ஒவ்வோராண்டும் மார்ச் மாத முதல் வாரத்தில் வரும் வியாழக்கிழமையே தேசியப் புத்தக நாளாக அனுசரிக்கப்படுகிறது. விந்தைதான்.
புத்தகநாளை ஒட்டி முகநூலில் பலரும் கருத்துகளைத் தெரிவித்த வண்ணமும், பகிர்ந்த வண்ணமும் இருக்கிறார்கள். ‘தமிழினி’ மின்னிதழின் ஆசிரியர் கோகுல் பிரசாத் இன்று காலையில் இட்டிருந்த பதிவொன்று என்னைச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தது. குன்றெனக் குவிந்து கிடக்கும் நூல்களின் முன்பாக மலைத்துப் போய் அமர்ந்து ‘புத்தகக் கடலை நீந்திக் கடந்திட முடியுமா’ என்று பதிந்திருந்தார். உண்மைதான். படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் ஒவ்வோராண்டும் எத்தனையோ புத்தகங்களை வாங்குகிறேன். அவற்றை அலமாரிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டு அனுதினமும் பூஜை செய்கிறேனேயல்லாது அவற்றை எடுத்து வாசிப்பதில்லை எனும் குற்ற உணர்வு என்னையும் நெருடுவதுண்டு. என்னைப் போன்றே இன்னும் சிலரும் இருக்கிறார்கள் என்று தெரிய வரும் பொழுது மனம் ஆறுதல் கொள்கிறது.
‘நீங்கள் படித்தேயிராத நூல்களைப் பற்றிப் பேசுவதெப்படி’ என்றொரு நூலை பியரி பயர்ட் என்பவர் எழுதியிருக்கிறார் (How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard). “நீங்கள் ஒரு எழுத்தாளரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்து, அவருடைய படைப்பு எதையும் வாசித்திராத நிலையில், அவருடைய நூல்களைப் பற்றித் துணிச்சலாகப் பாராட்டி விடுங்கள். தன்னுடைய நூலைப் பற்றிய சாரத்தையோ, அல்லது கூர்மையான விமர்சனத்தையோ எந்த எழுத்தாளரும் எதிர்பார்க்கப் போவதில்லை. அவர் அதை விரும்புவார் என்பதும் நிச்சயமில்லை. அவர் எழுதியிருப்பது உங்கள் ரசனைக்கு உகந்ததாக இருப்பதே அவருக்குப் போதுமானது.” இதைப் போன்ற நகைச்சுவையான ஆலோசனைகளை இந்நூலில் அள்ளித் தெளித்திருக்கின்றார் பியரி பயர்ட். நானும் அவருடைய அறிவுரையைப் பின்பற்றி இந்நூலின் முகவுரையை மட்டுமே படித்து விட்டு வைத்து விட்டேன்.
வாசிப்பு என்பது படைப்பாளி அடைந்த அனுபவத்தை நாமும் பெற யத்தனிப்பது. வயது கூடக் கூட வாசிப்பனுபவம் பல்வேறு கிளைகளை, வேர்களை, இலைகளை, மலர்களை, கனிகளை வாசகனுக்குக் கொடுக்கும். சிறுவனாக இருந்த காலத்தில் குழந்தைப் பேறு இல்லாத என் பெரியம்மா வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்கப் போய் விடுவேன். அங்கே வயதொத்த விளையாட்டுத் தோழர்கள் இருந்ததில்லை. நேரத்தைக் கழிக்க, பெரியம்மாவின் சின்னஞ்சிறு நூலகமே கை கொடுக்கும். குமுதம் பத்திரிகையில் வெளிவரும் தொடர்களைப் பிரித்தெடுத்து பைன்ட் செய்து பெரியம்மா பாதுகாத்து வந்தார். அவற்றைப் படித்துதான் வாசிப்பின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
பிறகு, வாலிப வயதில், கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தின் பால் சிறு சபலம் ஏற்பட்டு அதையே பாடமாக எடுத்து படிக்கத் துணிந்தேன். என்றாலும் அசுரத்தனமான வாசிப்பு என்பது என்னிடம் படியவே இல்லை. இன்று வரையிலும் இதே நிலைதான். இலக்கியப் படைப்புகளே எண்ணற்ற அளவில் படிப்பதற்கு இருக்க, இப்பொழுது என் நாட்டம் இலக்கியத்தை விட்டு ஒதுங்கி மெய்யியலின் பால் திரும்பி விட்டது. மூப்புதான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
நல்ல, நவீன நூல்களை அறிமுகம் செய்யும் காணொளிகள் இன்று ஏராளமாய் யு ட்யூபில் விரவிக் கிடக்கின்றன. தமிழில் இவை போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது நிறைவளிக்கிறது. ஆங்கிலத்தில் Michael Shermer என்பவர் யு ட்யூபில் அளிக்கும் நூல் அறிமுகங்கள் எனக்கு விருப்பமானவை. Skeptic எனும் பத்திரிகையையும், Skeptics Society எனும் அமைப்பையும் நிறுவி நடத்தி வருபவர் Michael Shermer. இவர் அறிவியல் எழுத்தாளராகவும் அறிவியல் வரலாற்றாசிரியராகவும் அறியப்படுபவர். இவருடைய காணொளிகளை எனக்குப் பரிந்துரைத்தவர் அன்பு நண்பர் M. ராஜாராம்.
அண்மைக் காலத்தில் மைக்கேல் ஷெர்மர் அறிமுகப்படுத்திய நூல்களில் ஆஸ்திரேலிய மெய்யியலாளர் டேவிட் சாமர்ஸ் (David Chalmers) எழுதியிருக்கும் ‘உபரி மெய்ம்மை’ (Reality+: Virtual Worlds and the Problems of Philosophy) எனும் நூல் என்னை மிகவும் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒன்று. ‘உணர்வெனும் கடுஞ்சிக்கல்’ (hard problem of consciousness) எனும் சிந்தனையை முன்வைத்ததன் மூலம் பிரபலமானவர் சாமர்ஸ். மெய்நிகர் உண்மை எனப்படும் virtual reality (VR) , மற்றும் மிகுதியாக்கப்பட்ட மெய்ம்மை எனப்படும் augmented reality (AR) ஆகிய தொழில்நுட்பங்களில் எட்டப்பட்டு வரும் முன்னேற்றங்களும் மேம்பாடுகளும் எவ்வாறான வாழ்க்கைச் சிக்கல்களையெல்லாம் எதிர்காலத்தில் உருவாக்கக் கூடும் என்பதைத் தத்துவார்த்தமாக அலசும் நூல்தான் ‘உபரி மெய்ம்மை’.
இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனைகளை ஜேன் மெக் காநிங்கல் (Jane McGonigal) எனும் பெண்மணி மிக அண்மையில் எழுதியிருக்கும் ‘கற்பனைக்கு சாத்தியமான’ (Imaginable: How to See the Future Coming and be Ready for Anything) எனும் நூல் வழங்குகிறது. ஜேன் மெக் காநிங்கல் மெய்நிகர் உண்மை விளையாட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்ப வினைஞர். 2008 ஆம் ஆண்டில் இவர் உருவாக்கி உலவ விட்டிருந்த Superstruct எனப்படும் எதிர்காலக் கணிப்பு பயன்பாட்டு மென்பொருளானது பெருந்தொற்று புவியைப் பாதித்தால் மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதிலிருந்து பெறப்பட்ட பதில்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது, எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்க முடிந்தாலும் அதற்கான தயார் நிலைக்கு மானுட மனத்தைப் பக்குவப்படுத்துவதே நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரும் சவால் என்பது விளங்குகிறது. Imaginable நூல் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக விளக்குகிறது.
இவை போன்ற புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியான கையோடு தமிழிலும் படிக்கக் கிடைக்க வேண்டும் என்பதே இவ்வாண்டின் புத்தக நாளில் என்னுடைய அவா.
