குழந்தை!/ஜெ.பாஸ்கரன்

“ஆண் குழந்தைதாம்மா!”

மாலாவிடம் குழந்தையின் இடுப்புக்குக் கீழே காண்பித்துவிட்டு, குளிப்பாட்ட எடுத்துச் சென்றுவிட்டாள் நர்ஸ். மாலாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றம், பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாள்!

மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?

கிஷோர் தாயில்லாத பிள்ளை. அவன் அப்பா பெரிய பணக்காரர், ஏழெட்டு மில்கள், பங்குச் சந்தை வியாபாரம் என பல வழிகளிலும் சம்பாதிப்பவர். ஒரே பிள்ளையானாலும், கண்டிப்பாக இருப்பவர். கிஷோருக்கு அவன் அப்பாவிடம், பாசத்தை விட பயமே அதிகம். அவர் கிழித்த கோட்டை அவன் தாண்டியதே இல்லை. மாலாவை அவன் திருமணம் செய்து கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனாலும் கிஷோர் ஒரே மகன் என்பதாலும், அவன் இதுவரை எதையுமே கேட்டதில்லை என்பதாலும் சம்மதித்தார். மேலும் மாலாவும் விடாமல் அவருடன் பேசிப் பேசி, மல்லுக்கு நின்று பிடிவாதமாக இந்தத் திருமணத்தை நடத்திக்கொண்டாள்!

ஆறடி உயரம், வளைந்த மூக்கு, அகன்ற நெற்றி என கிஷோரின் அப்பா பார்ப்பதற்கே ஒரு மிலிட்டரி ஆபீசர் போல இருப்பார். காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும்வரை எல்லாம் திட்டமிட்டபடி, நேரப்படி நடக்க வேண்டும் அவருக்கு. வீட்டில் எப்போதும் ஒரு ராணுவ ஆட்சி நடப்பது போல இருக்கும்.

மாலாவுக்கும், மாமனாருக்கும் எப்போதும் வாக்குவாதம்தான். ஒருவர் சொன்னதை மற்றொருவர் கேட்பது கிடையாது, விதண்டாவாதம்தான்! கோபம் எல்லை மீறிப் போய் ஒவ்வொரு சமயம், மாலா பொறுமை இழந்து, குரலை உயர்த்திக் கத்திவிடுவதும் உண்டு. போட்டோவில் இருக்கும் கிஷோரின் அம்மாவைப் பார்த்து, ‘இந்த மனுஷனுடன் எப்படித்தான் இவங்க குடித்தனம் நடத்தினாங்களோ.. பாவம்’ என்று வருந்துவாள். ஒரு தகறாரில், மாலா, ‘உங்க முகத்தைப் பார்க்கவே பிடிக்கல’ என்று மாமனாரிடம் கூறிவிட்டு, கிஷோருடன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்து, பிடிவாதமாக அதை நிறைவேற்றியும் விட்டாள். அவருக்கும் தன்மானம் தடுக்கவே, பிள்ளையைத் தனிக்குடித்தனம் போகச் சொல்லிவிட்டார். இவர்கள் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தார். மகன் கிஷோரை மட்டும் ஆபீஸ், ஓட்டல் என்று சந்தித்துப் பேசிப் போவார். உலகின் எல்லாக் கணவர்களையும் போல, வீட்டில் அப்பாவையும், வெளியில் மனைவியையும் விட்டுக்கொடுக்காமல் பேசி, இருவரிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருந்தான் கிஷோர்! குழந்தை பிறந்து விட்ட செய்தியை இனிமேல்தான் அப்பாவிடம் சொல்ல வேண்டும்.

மாலாவுக்கு, மயக்கம் தெளிய சிறிது நேரமாகியது. லேபர் வார்டின் வாடை மூக்கைத் துளைத்தது. உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. நர்ஸ் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள்!

மாலா யோசித்தாள். தன் குழந்தை எப்படி இருக்கிறது? தன் வீட்டுச் சொந்தங்கள் போல நீள தாடை, கூரான மூக்கு, கொஞ்சம் உள்ளடங்கிய வாய் என்றிருக்கிறதா அல்லது அவர்கள் வீட்டு முக ஜாடையாக – அகன்ற நெற்றி, வளைந்த மூக்கு, சின்ன கண்கள் – என்றிருக்கிறதா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். முகத்திலும் நிறத்திலும் என்ன இருக்கிறது, ஆரோக்கியமாக, நல்லவனாக இருந்தால் போதும்.

மிருதுவான வெள்ளை டர்கி டவலில் சுருட்டி, அப்போதுத்தான் மலர்ந்த ரோஜா நிறத்தில் குழந்தையைக் கொண்டுவந்தாள் நர்ஸ். ‘பொல்லாதும்மா இது. பொறந்த உடனேயே கைய கால உதைக்குது. என்னாக் கத்து கத்துது, எல்லாரையும் ஆட்டி வைக்கும் போல..’ என்ற நர்ஸைக் கோபமாகப் பார்த்தாள் மாலா.

கையில் குழந்தையை வாங்கிக் கொண்டு, டவலை விலக்கி ஆவலுடன் குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். அகன்ற நெற்றி, வளைந்த மூக்கு, சின்னக் கண்கள் – அப்படியே கிஷோரின் அப்பா முகம்!

குழந்தை, தன்னைப் பார்த்துக் கண் சிமிட்டுவதைப் போலத் தோன்றியது மாலாவுக்கு. பிறந்த குழந்தை அப்படிச் செய்யுமா என்ன?