விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?/அழகியசிங்கர்

ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது.  இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,  பிப்ரவரி மாதமே கொண்டு வரவேண்டும்.  கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் மார்ச்சு மாதம் ஓடிவிட்டது. சரி மார்ச்சு மாதம் கொண்டு வரலாமென்று நினைத்தேன். ஆனால் 

ஏப்ரல் மாதம் கடைசி வரை வந்து விட்டது. கொஞ்சம் இழுவைதான்.
ஜெகன் : உங்களால் ஏன் உடனே கொண்டு வர முடியவில்லை.
அழகியசிங்கர் : அதுதான் தெரியவில்லை. சரியான காரணம் அவநம்பிக்கை. என் மீது எனக்கே உண்டாகிற அவநம்பிக்கைதான் காலதாமதத்திற்குக் காரணம்.
ஜெகன் : இன்னும் இதழ் பிரதிகளை அனுப்புவதற்குள் மே மாதம் வந்து விடும்.
அழகியசிங்கர் : எப்போதும் எனக்கென்று சில படைப்பாள நண்பர்கள் இருக்கிறார்கள். வழக்கம்போல் அவர்கள் அனுப்பிய படைப்புகளைப் பிரசுரம் செய்திருக்கிறேன்.
ஜெகன் : எல்லோருக்கும் அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.
அழகியசிங்கர் : 30ஆம் தேதி குடும்ப விஷயமாக பங்களூர் செல்கிறேன். அங்கு பத்துநாட்கள் இருப்பேன். நான் எப்படியாவது 30 தேதிக்குள் விருட்சத்தை அனுப்பி விட்டுத்தான் போகவேண்டும்.
ஜெகன் : யார் யார் எழுதியிருக்கிறார்கள்?
அழகியசிங்கர் : இந்த முறை ராம் ஆனந்த்தின் இழப்பு என்ற கவிதையை அட்டைப்படக் கவிதையாகப் பிரசுரம் செய்திருக்கிறேன். இக் கவிதை 03.03.2023இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
ஜெகன் : அப்புறம்.
அழகியசிங்கர் : இந்த முறை வழக்கம்போல் தமிழவன் கட்டுரை எழுதி உள்ளார். தமிழில் இருக்கும் நாவல் வாசகர்கள் என்ற அவருடைய கட்டுரை சிறப்பான கட்டுரை. இந்திரா பார்த்தசாரதிக்குப் பதில் நீல பத்மநாபன். முபீன் சாதிகா ஜூடித் பட்லரை அறிமுகம் செய்திருக்கிறார். என்பா என்பாதான் என்ற என் புதுவகை கவிதைகளை விமர்சனம் செய்துள்ளார் முபீன். சீனு ராமசாமியின் மாயப் பூனை என்ற கவிதைப் புத்தகத்தை நிஜந்தன் விமர்சனம் செய்துள்ளார். வழக்கம்போல் ஸிந்துஜா, ஜெ.பாஸ்கரன் கதைகளைத் தவிர, வேலு ராஜகோபல் என்ற புதியவரின் கதை இந்த இதழை அலங்காரம் செய்கிறது. வழக்கம்போல் கவிதைகள் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் நெல்லை க சோமசுந்தரி, பிரதீபன், எஸ்.வி வேணுகோபாலன்.எழுத்தாளர் சிவசங்கரியைப் பாராட்டி ஜெ.பாஸ்கரன் கட்டுரை. நாட்டுப்புறக் கதைகளை அறிமுகப்படுத்தி உள்ளார் அதங்கோடு அனிஷ்குமார். பாஷோவின் ஹைக்கூ கவிதைகளை எம்.டி.முத்துக்குமாரசாமி மொழி பெயர்த்துள்ளார். இவர்களுடன் நானும் எழுதியிருக்கிறேன். சமீபத்தில் உமா பாலு ஓவியங்கள் அதிகமாக வரைந்து தள்ளுகிறார். அவருடைய சிறப்பான ஓவியம் அட்டையில். மொத்தத்தில் திருப்திகரமான இதழ்.
ஜெகன் : எஸ்ஆர் சி 121வது விருட்சம் இதழைக் குறித்து எழுதிய கட்டுரை முக்கியப் பங்கு வகிக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம்.