பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்/ப.மதியழகன்

1)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!

2)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
கங்கையில் முங்கினால் பாவம் தொலையும்
காவி உடுத்தினால் பந்தம் விலகும்
பசியெனும் எமனின் பாசக்கயிறு!

3)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இரப்பதற்கு கண்டிப்பாக கருணை வேண்டும்
பசியென்றால் என்னவென்று உனக்குத் தெரிந்திருந்தால்
கையேந்துபவன் கடவுளாகத் தெரிவான்!

4)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
யாவும் அறிந்தவன் யாவும் துறந்தவன்
அகமே தந்திரம் புறமே எந்திரம்
வானமே கூரையாக வாழ்பவன்!

5) பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
கலைந்த கோலம் வானமே விதானம்
கையேந்த கோவிலுக்குள் செல்பவர்களுக்குத் தெரியாது
கையேந்துபவர்களே கடவுள் என்று!

6)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
வீதியில் வாழ்வு உலகமே வீடு
தன்னை மறந்து சிவனுடன் கலந்தவர்கள்
மாயப் பித்தனல்லவோ மகேசன்!

7)பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
அவனுக்கு எல்லா ஊரும் காசிதான்
மனிதர்கள் எல்லாம் பிணங்கள் தான்
சிந்தை எங்கும் சிவம்!

8) பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
எங்கும் அவனே எல்லாம் சிவனே
ஜீவன் யாத்திரை ஞான முத்திரை
சாவுக்கு முன் சமானம்!