பரிசின் அடையாளமே/மதுவந்தி

பரிசு
கோப்பைகள்,
கேடயங்கள்,
பதக்கங்கள்,
இன்னபிறவெல்லாம்
பரிசல்ல,
பரிசின் அடையாளமே!.

சுலபமாய் எவரையும்
பாராட்டாத சுகுணா டீச்சர்
வகுப்பு முடிந்தபின்,நின்று
தோள் தட்டி, “நல்ல கட்டுரை
நிறைய எழுது” எனச்
சொன்ன சொல்.

சிறுகிராமக் கோவில்
திருவிழாவில் நாடகம் நிகழ்த்த
தயக்கத்தோடு போன வேளை,
மனைவி, குடும்பத்தைக்
கொடுமைப் படுத்துகிற
பாத்திரமாய் வாழ்ந்த போது,
பறந்து வந்து விழுந்த
தண்ணீர் பாட்டில்.

முப்பதாண்டுகளுக்கும் மேலாய்
பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து
ஓய்வு பெற்ற நாள்.
மாலை, வாழ்த்துரை முடிந்து,
மின்தூக்கியில் இறங்கும் வேளை,
கைபிடித்து,” எங்கள ஞாபகம்
வைச்சிக்குங்க’ என நெகிழவாய்ச்
சொன்ன பணியாளரின்
விழியோரம் கசிந்த கண்ணீர்த்துளி.
இது போல சிலவே
பரிசெனப் பொக்கிஷமாய்
மனசுக்குள் பத்திரமாய்.