
சிக்காகோ தொழிலாளி
தொடங்கிப் போராடிப் பெற்றது
எட்டுமணி உழைப்பு
ஐடி தொழில் வந்தது
இருபத்தி நாலு மணியும் வேலை.
விடுப்பில்லை
கிடுப்பில்லை
மொத்தமாய்ப் போனது எல்லாம்
முதலாளிகள் கொட்டிக் கொள்கிறார்கள் மொத்தமாய்.
ஈ எம் அய்க்கும் வயிற்றுப்பாட்டுக்கும்
மானத்தோடு ஜீவிப்பதற்கும்
வேண்டுமே ஒரு வேலை
அடிமையாகிச் சிரிக்கிறான்
அவன் டை கட்டிக்கொண்டு .
ஆங்கிலமே பேசுகிறான் அழகாய்.
தங்கக் கோவணம் தருகிறது நிர்வாகம்.
எட்டுமணி வேலையை
பன்னிரெண்டாக்கி
சட்டம் வந்தது சமீபமாய்
தொழிற்சங்கங்களும் இடதுசாரிகளும் மனசாட்சி உள்ளோரும்
போட்டனர் பெருங்கூச்சல்.
சட்டம் ஓரம் போனது நல்ல சேதி.
வெள்ளையயாய்க் கேட்கிறார்கள்
தொழிலாளி விருப்பம் தருகிறான்
வேலை செய்கிறான்
உனக்கென்ன? முளைக்கிறது கேள்வி.
விருப்பம் தராதோர் மொத்தமாய் முச்சந்திக்கு வருவார்கள் நிஜம்.
பூனையில் சைவப்பூனை
கண்டதுண்டோ நாம்.
