
பூவொன்று வானம் பார்த்துப்
பூரித்தல் கண்டேன்; நெஞ்சைத்
தாவென்று திறவு கோலாய்த்
தளிர்க்கரம் நீட்டல் கண்டேன்!
‘ஓ! ‘வென்று வியப்பைக் கூட்டும்
ஒலியினில், காற்றின் வேகம்
நாவென்று நிற்றல் கண்டேன்;
நயமது பொங்கக் கண்டேன்!
நிறங்களின் அடுக்க கங்கள்
நீலவான் மறைத்த போதும்,
திறங்கள்தம் சூழல் வென்று
திண்ணமாய் வெளிப்பட் டாற்போல்,
முறங்களில் சிதறும் நீல
மணிகளாய் அங்கங் கேத் தம்
மறுவிலா நீலம் காட்டி
மணத்தது விரிந்த வானம்!
பூவதன் பார்வைக் குள்ளே
புகுந்தயிவ் வழகுக் கோலம்
நாவதன் உதிர்ப்பாய் வீழ்ந்து
நலுங்கொலி தராவிட் டாலும்,
பாவதன் சொற்க ளுக்குள்
பதிபொருள் மௌனம் போல
ஆவதன் தன்மை கண்டேன்!
அழகியல்(பு) இதுவோ? ஆழ்ந்தேன்!
*
