இழந்து பெறுவது/ந.பானுமதி

அறுத்து விட்டு விட்டார்கள் தும்பை

தடுமாறி ஓடிய கன்று
எந்தக் காட்டிலோ,எந்த நாட்டிலோ?

இரையைத் தேடுமோ?
இரையாகவே ஆகுமோ?

திமில் உயர ஊர்வலம் வரலாம்
நீர்த் திவிலையாக அடங்கியும் விடலாம்.

மேய்ந்து திரும்பிய பசு
கொட்டிலில் மீண்டும்

கவனமாய் இரட்டைக் கயிறும்
சற்று அதிகத் தீனியும்

புரண்டு படுத்த கவிதா
வெற்றுத் தொட்டிலைப் பார்த்து
பெரும் பெரும் மூச்சாய் விட்டாள்.

மீண்டும் அவள் சினையுருவாள்

இந்தக் கன்றும் பறி போகும்

அதனாலென்ன?
வீடும் காரும் நல்கும்
கருப்பை எல்லோரிடமும் இருக்கிறதா?

One Comment on “இழந்து பெறுவது/ந.பானுமதி”

Comments are closed.