
என் வீட்டு ஜன்னலில் தான்
புறாக்கள்
அதிகமாக காதல் செய்கின்றன
தேனீக்கள்
என் வீட்டு சாவி துவாரங்களில்
கூடு கட்டுகின்றன
வரிசையாக
பல்லிகள்
வயிறு பெருப்பதும்
அதை தொடர்ந்து
குட்டிப் பல்லிகள்
தரையில் ஓடிப் பிடித்து விளையாடுவதும்
என் வீட்டில் நடக்கும் அளவுக்கு
வேறெங்கும் நடக்கவில்லை
ஜன்னலருகே இருக்கும்
என் வீட்டு காற்று பதனியில்
அணில் போட்ட குட்டி
கைகால் கூட முளைக்காத நிலையில்
கண்டெடுக்கப் பட்டு
நாங்கள் தொட்டால் அதன் அம்மா
அதை அழைத்துச் செல்லாது என்று
எல்லோரும் கதைக்க
தொடாமல் அதை கூட்டோடு
பால்கனியில் வைத்து விட்டு
அந்த பக்கம் ஒரு மணி நேரம் போகாமல்
ஹனுமான் சாலிசா சொல்லி
அதனை
ஒரு வழியாக அனுப்பி வைத்தேன்
எல்லாவற்றிற்கும் மேலாக
வெயிலுக்காக பால்கனியில் போட்டிருந்த
பாய் தட்டியை மூன்று மாதங்கள்
மேலே சுருட்டியபடி வைத்திருந்து விட்டு பிரிக்கையில்
அதிலிருந்து விழுந்தது
அசிங்கமாக
ஒரு வௌவால் குட்டி
அலறியடித்துக் கொண்டு
அடுத்த வீட்டுக்காரரின் தயவால்
அதை பழையபடி தட்டியில் சுகமாக சுற்றி
அது வளர்ந்து பறக்கும் வரை
தினமும் இரவு
அதன் அம்மா
பால்கனியில் செய்த லூட்டிகளை பொறுத்தேன்
அனைத்து ஜீவராசிகளும்
ஏன் என் வீட்டை தேர்ந்தெடுக்கின்றன
இனப்பெருக்கத்திற்கு?
தனியே வசிக்கும் மூதாட்டியின் வீடு
ஒரு நல்ல பிரசவ மருத்துவமனையாகும்
எனும் கணிப்பிலா?

அருமை அருமை