இந்தியா – பாகிஸ்தான். போரும் விளைவும்/ஜெ.பாஸ்கரன்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், தனது எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சியில், திருமதி ஸரோஜா சகாதேவன் எழுதிய ‘இந்தியா-பாகிஸ்தான், போரும் விளைவும்’ புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டு, நாட்டுக்கும், இந்திய ராணுவத்துக்கும், எழுத்துக்கும் உண்மையிலேயே மரியாதை செய்துள்ளது! வீடு, சொந்தங்கள், பந்தங்கள், சொத்து, சுகம் அனைத்தையும் விட்டு, நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராய் எல்லையில் பணி புரியும் நம் ராணுவத்தினருக்கு, உழைப்பாளர் தினத்தில் இப்புத்தகத்தை வெளியிட்டது பொருத்தமானதே!

கறுப்புக் கண்ணாடியுடன் விழாவைத் தொகுத்து வழங்கிய உரத்த சிந்தனை உதயம்ராம் (கேடராக்ட் ஆபரேஷன் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியவர் பாராட்டுக்குரியவர்!) எல்லோரையும் வரவேற்றார். ’எல்லாவற்றையும் இவரே சொல்லிவிடுவார்’ என யாரோ பின் வரிசையிலிருந்து முணுமுணுத்தார். வந்திருந்த விருந்தினர்களை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து, மேடையேற்றினார். டாக்டர் H.V. ஹண்டே, Lt. Col திரு. N.தியாகராஜன், Wing Commander முனைவர் கணேஷ் குமார், புதுகை மு.தருமராசன், முனைவர் ரவி தமிழ்வாணன் மற்றும் நூலாசிரியர் திருமதி ஸரோஜா சகாதேவன் ஆகியோர் மேடையை அலங்கரிக்க, வரவேற்புரை வழங்கியவர் திரு ஜி. சுப்பிரமணியன் (இணைச் செயலாளர், உ.சி). உதயம் ராம் கூறியவற்றை மீண்டும் தன் உரையில் சொல்லியதைத் தவிர்த்திருந்தால், வரவேற்புரை இன்னும் க்ரிஸ்ப்பாக இருந்திருக்கும். பொன்னாடை, நினைவுப் பரிசுகள் எல்லாம் வழக்கமான முறையில் கொடுக்கப்பட, புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது.

டாக்டர் ஹண்டே அவர்கள் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர் Lt. Col தியாகராஜன் அவர்கள் மற்றும் மேடையிலிருந்த விருந்தினர். மேலும் திரு பா.மேகநாதன், திரு எஸ்.வி.ராஜசேகர், திரு அங்குராஜ் முரளி, ஆடிட்டர் ஏ.ஜெயக்குமார், திருமதி அர்ச்சனா சுந்தர், டாக்டர் சி.அன்பரசு, டாக்டர்.எம் ஆர் விஷ்ணு ஆகியோரும் மேடையில் நுல்களைப் பெற்றுக்கொண்டனர்.

தலைமை உரை வழங்கிய டாக்டர் ஹண்டே, தன் குடும்பத்தாரின் ராணுவப் பணிகளைக் குறிப்பிட்டு, காஷ்மீரில் நடந்த போர் பற்றியும், மேற்கு வங்காளத்தில் ஒன்றாகப் படித்த இரண்டு இராணுவ கமாண்டர்கள் எதிர் எதிர் அணிகளில் நின்று போரிட்ட கதையையும் சொன்னார். சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த ஐந்து போர்களில் இவரது சகோதரர்கள் ஐந்து பேர் போரிட்டதையும், அதில் மூவர் அமரராகிவிட்டதையும் குறிப்பிட்டார். அதனால் அப்போர்களில் நிகழ்ந்த சம்பவங்களையும் உண்மைகளையும் தான் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டார். வல்லபாய் படேல் உடனுக்குடன் எடுத்த போர்க்கால முடிவுகளைப் பற்றி சிலாகித்தார். 93 வயதில், அவரது நினைவாற்றலும், பேச்சாற்றலும், தேசப்பற்றும் உண்மையிலேயே வியக்கவைப்பவை!

திரு தியாகராஜன், ராணுவத்தின் தியாகத்தையும், அதனை நம்ம ஊர்களில் தெரிந்து கொள்ளாமல் மக்கள் இருப்பதையும் பற்றி வருத்தத்துடன் சொன்னார். இந்த மாதிரியான புத்தகங்கள் நம் இளைஞர்களுக்கு இராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்றார்.

முனைவர் எஸ். கணேஷ் குமார் மிகச் சிறப்பானதொரு உரையை – தூய தமிழில் – பேசுவதுபோல வாசித்தார். பல வரிகள் கவிதைகளைப்போல சந்தங்களுடன் வந்து விழுந்தன. மைனஸ் 50 டிகிரி குளிரில் வேலை பார்த்த அனுபவங்கள், ஜோசியர் சொன்னது போல் வாழ்க்கையில் மிக உயரத்தில் – உயரமான டவரில் – இருந்ததை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சியில் இவரது பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்ல, ராணுவ சேவையின் மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

திரு தருமராசன், திரு ரவி தமிழ்வாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணிமேகலைப் பிரசுரத்தின் 256 பெண் எழுத்தாளர்களில், ஸரோஜா சகாதேவனின் புத்தகம் முதன்மையானது என்றார் திரு ரவி.

புத்தக மதிப்புரை வழங்கிய பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ராணுவத்தைப் பின்னணியாகக் கொண்டு தான் எழுதிய இரண்டு கதைகளை மிகச் சிறப்பாகச் சொன்னார். பின்னர் இந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு, மூன்று செய்திகளை அழகாக, சுவாரஸ்யமாக விவரித்தது, புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுவதாக அமைந்தது. எல்லையில் ராணுவ வீரார்கள் படும் சிரமங்களையும், அவர்களது தியாகங்களையும் தெரிந்து கொள்ளாமல், இங்கு நாம் நிம்மதியாக பிளாக்கில் டிக்கட் வாங்கி ஐ பி எல் மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று வருந்தினார். இந்தப் புத்தகத்தைப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக வைக்க பரிந்துரை செய்தார். ஆங்கிலத்திலும் பொழிபெயர்க்க வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார். ஆக்கபூர்வமான பேச்சு!

ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கிய திருமதி ஸரோஜா சகாதேவன், தொடராக எழுதியபோது, இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை என்றார். புத்தக ஆக்கத்தில் உதவியவர்களுக்கு நன்றி சொன்னார். எழுதும் போது சில இடங்களில் மனம் இறுகிப் போனதையும், கோபப் பட்டதையும், வருந்திக் கண்ணீர் விட்டதையும் சொன்னார். ஆத்மார்த்தமான பேச்சு!

ஸரோஜா அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் சிலாகித்து, வந்திருந்த எல்லா குடும்ப உறுப்பினர்களுடனும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்து வாழ்த்தியது உரத்த சிந்தனை.
அரங்கு முழுதும் வி ஐ பி க்கள் – நல்லி செட்டியார், திருப்பூர் கிருஷ்ணன், டெல்லி கணேஷ், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என அரங்கு நிறைந்திருந்தது.

தேசீய கீதம் பாடி, இரவு உணவுக்குப் பிறகு கூட்டம் இனிதே முடிந்தது!

புத்தகம் பற்றி…..

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த நேரடியான, மறைமுகமான போர்களைத் தக்க தரவுகளுடன், சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 1947, 1965, 1971, 1984, 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களின் பின்னணி, அதில் நமது ராணுவத்தின் வீர சாகசங்கள், மனிதாபிமானம், அரசியல் பின்னணி என நாம் அறிந்திராத பலசெய்திகளை, நாவல் போல எழுதியுள்ளார். நாடாளுமன்றத் தாக்குதல்(2001), மும்பை தாக்குதல் (2008), எல்லை மோதல்கள் (2013, 2014), சர்ஜிகல் ஸ்ட்ரைக் (2016, 2019), புல்வாமா தாக்குதல் (2019) என மிக சிறப்பான தொகுப்பு. காஷ்மீர் பற்றிய தகவல்கள், இன்றைய காஷ்மீர் அடைந்து வரும் பாஸிடிவ் மாறுதல்களைப் பற்றிப் பேசுகிறது.

இந்திய ராணுவத்தின் பத்து பொன்மொழிகளை கடைசி அத்தியாயத்தில் சேர்த்துள்ளார். அதில் ஒன்று:

“நான் மூவர்ணக் கொடியை ஏந்திக்கொண்டு ….. அல்லது மூவர்ணக் கொடியைப் போர்த்திக்கொண்டு வருவேன்…. கண்டிப்பாக வருவேன்.” – கேப்டன் விக்ரம் பத்ரா, இறுதி வீர சக்கரம்.

அருமையான புத்தகத்தை எழுதியுள்ள ஸரோஜா சகாதேவன் அவர்களுக்கும், சிறப்பாக வெளியிட்ட உரத்த சிந்தனைக்கும் பாராட்டுகள்!

அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம், குறிப்பாக இன்றைய இளைஞர்கள்! (மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600017).

.