அவளின்  பிரார்த்தனை/பிரதீபன்

வழிபாட்டுத் தலம் அது;

காலை வழிபாடுகள் முடிந்து

கதவுகளை மூடியாயிற்று;

இனி மாலையில்தான் திறப்பார்கள்;

அதன் வாசலில் இருக்கிறாள்

அந்த மூதாட்டி;

மெலிந்த உடலில்

கந்தையை உடுத்தியிருக்கிறாள்;

கலைந்த கூந்தல்

வறண்டு கிடக்கிறது;

உள்ளே நோக்கி

உட்கார்ந்துகொண்டு

முணுமுணுத்து ஏதோ 

பிரார்த்தனை செய்கிறாள்;

அவளுக்கு உள்ளே

அனுமதி இல்லையா?

கூச்சம் கொண்டு அவள்தான்

உள்ளே நுழைவதில்லையா?

நாள் பலவாக நடந்துகொண்டிருக்கிறது

அவளின் பிரார்த்தனை.