கம்பனைக் காண்போம் -73/வளவ. துரையன்

மசக்கை நோய்

தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்
பொருவரு திருமுகம் அன்றிப் பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினர் [280]
[வயா=கருக்கொண்டவர்களுக்குச் சில பொருள்களின் மீது வரும் விருப்பம்; -மசக்கை என்பர்] பொருவரு=ஒப்பில்லாத; பொற்பு=அழகு]

கருக்கொண்ட பெண்கள் சில நாள்களில் உடல் வெளுத்துக் காணப்படுவார்கள். கருவுற்ற பெண்களுக்குக் குறிப்பிட்ட சில பொருள்களின் மீது திடீரென விருப்பம் தோன்றுவது இயல்பு. அவற்றைக் காண வேண்டும் எனவும் சிலவற்றை உண்ண வேண்டும் என்றும் அக்காலத்தில் தோன்றும். இதை மசக்கை  என்பர். இதை மயக்கை என்பதன் திரிபு என்பர். அதாவது பொருள்களின் மீது வரும் ஒரு மயக்கமாகும். சில காலம் கழித்து தானாகவே இது நீங்கிவிடுகிறது. எனவேதான் இதை மயக்கம் என்பர். கோசலை, கைகேயி, சுமித்திரை  ஆகிய மூவரும் கருவுறுகின்றனர். அவர்களுக்கு இந்த மசக்கை நோய் வந்ததாகக் கம்பன் அறிந்து குறிப்பிடுவது வியப்பாக உள்ளது.
”தயரதனின் தேவியர் மூவரும் சிலநாள் கழித்துப் பொருந்திய [வயா] மசக்கையுடனே தம் கருப்பத்தைத் தாங்குவதால் வருத்தத்தையும் அனுபவிக்கின்றனர். அவர்தம் முகம் மட்டுமன்றி உடல் முழுதுமே சந்திரனுடன் ஒப்பாகக் கூறும் அளவிற்கு வெளுத்துக் காணப்பட்டார்கள்” என்பது பாடலின் பொருளாகும்.