தனிமைச் சிறை/பிரேமா பிரபா

இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே தேர்ந்தெடுத்துக்கொண்ட தனிமைச் சிறைச் சாலை. எட்டிற்கு ஆறடி நீள அகலம். உயரம் குறைந்தது எட்டடிக்கு மேல் இருக்கும். என் உயரத்தை விட  தரையிலிருந்து ஓரடிக்குக் குறைவாக சுவற்றில் நீல நிற சலவைக் கல் பதிக்கப்பட்டிருக்கும். தென் கிழக்கு மூலையில் இருக்கும் கைகழுவும் பீங்கான் கோப்பைக்கு மேல் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல்  பாதரசம் போன ஒரு பெல்ஜியம் கண்ணாடி. அதற்கு மேல்  ஆஸ்ட்ரிச்சின் முட்டையைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு பெரிதான ஒரு வாட்டர் ஹீட்டர். அதன் மேல் சரி பாதி  புழுதி படிந்து மிகவும் அழுக்காகவும், கீழ் சரி பாதி அதை வாங்கும் போது இருந்த  வெண்மை நிறத்தில் ஒரு மட்டு குறைவாகவும் இருக்கும். 

வட கிழக்கு மூலையில் பருத்தி வெள்ளை நிறத்தில் மேற்கத்திய டாய்லெட். அதில் உட்காருவதற்கு ஏதுவாக அடர் நீல நிறத்தில் மிருதுவான   இருக்கை. என் கை எட்டும் உயரத்தில் தங்க நிறத்தில் ஐம்பத்தி இரண்டு சிறு துளைகள் கொண்ட வட்டமான   ஷவர் ஹெட். ஒன்றிற்கு பல தடவை நான் எண்ணிப் பார்த்துவிட்டேன். நிச்சயம் ஐம்பத்தி இரண்டு துளைகள்தான். சில சமயம் ஐந்து அல்லது ஆறு துளைகள் அடைபட்டுப் போனாலும் எந்த சமயத்திலும் என் சுகமான குளியலிற்கு ஆகப் பெரிய எந்த ஒரு   பெரிய இடைஞ்சலும் இருந்ததே இல்லை. என் உயரத்திற்கு அரை அடிக்கு மேல் ஒரு  சிறிய வெண்டிலேட்டர்.   ஒரு சமயம் நான்   அதிக விசையுடனும் வெறுப்புடனும்  காரித் துப்பிய பப்புள்கம் வெண்டிலேட்டரின்  மேல் கம்பியில் ஒட்டிகொண்டு வழிந்து கீழ் கம்பியியைத் தொட முயற்சி செய்ய தினமும் போராடிக் கொண்டிருந்தது. இந்தக்  கனவு அறையில்தான் எனக்கு மிகவும் பிடித்த போனி எம்மின் ரஷ்புட்டீன் பாட்டையும், செகுவாராவின் ஸ்பானியப் பாடலான “ஹஸ்தா சியம்பரே கோமண்டாண்டே” வையும்  அடிக்கடி உரத்த குரலில் பாடியிருக்கிறேன். “வீடா என்ன இது, இப்படிக் காட்டுக் கத்தலா இருக்கே” என்ற என் மனைவின் பேரிரைச்சலை என் தொடர் இசை சுவடின்றி அழித்துவிடும்.