எல்லே இளங்கிளியே/தங்கேஸ்

இன்னும் உறங்குதியோ !

உறங்கும் என் பூனைக்குட்டியை
அப்படியே இரு கைகளாலும் எடுத்து
அனைத்துக்
கொள்ளலாம்
ஒரு மென் முத்தமிட்டு
உச்சி முகர்ந்து நீவி விடலாம்
ஆனாலும் ஒரு தூக்கம் தரும்
பரவசத்தை நான் தரமுடியுமா?
வேண்டுமானால் உன் கனவுக்குள்
நான் ஒரு பூனையாக நுழையலாம்
ஆனால் என் நகங்களின் நீளம் கண்டு
நீ பயமுறக்கூடும்
 சொற்கள்  அணு ஆயுதம் தாங்கி 
போர் புரியும் வீட்டில்
 மென் துயிலை ஊதிக் கலைத்தால்
உன் உதட்டில் ஒட்டியிருக்கும்
கள்ளம் கபடமற்ற புன்னகையும்
களவு போய்விடுமென்று
சரம் சரமாய் பிரிந்து வரும்
மூச்சை எடுத்து
ஒரு அரூப ஓவியம் வரையும்
யோசனையில்
உன்னை பார்த்தபடியே 
நின்று கொண்டிருக்கிறேன்