ஆய்வும் முரண்பாடும்-லூச் இரிகரை/முபீன்

லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச் சிந்தனைக் கொண்டவர்கள் அவற்றைத் திரித்து தன்னைப் போன்ற பெண்ணியச் சிந்தனையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள் என்று அவர் நம்பினார்.

அவர் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதன் பின் அவர் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதனை மற்றொரு பெண்ணின் சுயபிரதிபலிப்பு என்ற தலைப்பில் நூலாக வெளியிட்ட போது பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இதற்குக் காரணம் அவர் ஃப்ராய்டையும் லக்கானையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் அப்போது பாரீஸில் லக்கான் உருவாக்கிய உளவியல் பள்ளியில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்த நூல் வெளிவந்தவுடன் அவர் பணியை இழக்க வேண்டியதாகிவிட்டது.

அதன் பின் அவர் மொழியியல் பேராசிரியராக பாரீஸில் வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தார். பாலியல் வேறுபாடு குறித்து இரிகரையின் கோட்பாடு மிகுந்த கவனம் பெற்றது. இதில் அவர் தன்னகம் அல்லது தன்னிலையில் பாலியல் சாராத அம்சம் மேற்கத்திய உளவியலில் ஆண்களைக் குறித்ததாகவும் பெண்களைத் தன்னிலையற்றவர்களாக, இயற்கையில் உள்ள உயிரிகள் போல் கையாளுவதாகவும் கூறுகிறார்.

பொதுவாக இரு பால் உறவு என்ற நிறுவனம் ஆண் தன்னிலையை மட்டுமே வளர்த்தெடுக்கிறது. பெண் தன்னிலையை அல்ல என்கிறார் இரிகரை. குறிப்பாக, சட்டம், மதம், அரசியல், தத்துவம், கலை போன்றவற்றில் பெண்ணின் பங்குப் பற்றி கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிறார் இரிகரை.
பண்பாட்டில் இரு பால் என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தி அறத்தையும் நீதியையும் இருவருக்கும் உரியதாக்கும் வளர்ச்சியைக் காண அவர் முனைப்பாக இருந்தார்.

அவருடைய கோட்பாடு மூன்று தளங்களைக் கொண்டது. 1.ஆண்மைய கோணத்தில் மேற்கத்திய சொல்லாடல் இருப்பதைச் சுட்டிக்காட்டுவது. (இது எல்லா சமூகத்திற்கும் பொருந்தக்கூடியதாக மாறிவிட்டது) 2.பெண் தன்னிலையைக் கட்டமைப்பது. 3.சமூக, சட்ட, நீதி நிலைகளை இரு பாலருக்கும் உரியதாக வளர்த்தெடுப்பது ஆகியவை ஆகும்.