நத்தையும் குதிரையும்/கதிர் வேல்

மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.

நாலடி அகலம். வழுக்காத நடை ஓடுகள் பதிக்கப்பட்ட பாதை. பட்டன் டைல்ஸ் என்கிறார்கள். காலணி இல்லாமல் நடந்தால் ரத்த ஓட்டம் சிறக்குமாம். 3 பேர் அதை நம்பினார்கள். என்னை சேர்த்து. ஒருவர் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து காதுகளை மூடிய ஹெட்போனில் லயித்து நடந்தார்.

ஒரு திருப்பம் வந்தபோது கவனித்தேன். பெரிய நத்தை குறுக்காக நகர்ந்து கொண்டிருந்தது. ரத்த ஓட்டம் பற்றி அறிந்திருக்க கூடும். பின்னால் வருபவர்கள் தெரியாமல் மிதித்து விட கூடாதே. லைட்டான பதட்டம். நத்தைக்கு பாதுகாப்பு சுவர் போல நின்று கொண்டேன்.

ஏன் நிற்கிறேன் என புருவம் உயர்த்திய பெரியவரிடம் நத்தையை காட்டினேன். ஓ சரி சரி என்பது போல தலை அசைத்து தாண்டி சென்றார். ஐந்தடியில் வந்து கொண்டிருந்தவர் கவனித்து விட்டார். திருப்தி புன்னகையுடன் கடந்தார்.

இசை ரசிகர் கவனம் சிதறவே இல்லை. தரையில் ஊர்வதையும் அரணாக நின்ற என்னையும் கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றார். நத்தையார் இதற்குள் பாதையின் விளிம்பை நெருங்கி விட்டார். அங்கிருந்து இறங்கு முகம். செடி கொடி புல் இருந்த மண் பகுதி.

லக்கேஜுடன் செங்குத்தாக இறங்குமுன் ஆன்டெனாவை அரை வட்டத்தில் சுற்றி அது சோதனையிட்ட அழகு வாவ். என்ன யோசனையோ அந்த இடத்தில் அசையாமல் நின்றது. ஓகே, நம்ம டூட்டி ஓவர் என்று டாட்டா சொல்லி நடையை தொடர்ந்தேன்.

45 அடி நடந்தால் அடுத்த திருப்பம். திரும்பியதும் நத்தை இருந்த இடத்தை நோக்கி திரும்பி பார்த்தேன். அதற்கு சில அடிகள் தள்ளி இசை ரசிகர் வந்து கொண்டிருந்தார். கவனிக்காமல் மிதித்து விடுவாரோ என்ற பதட்டம் மறுபடி தொற்றியது. நின்று விட்டேன்.

அதிர்ஷ்டவசமாக அவர் நத்தையை பார்த்து விட்டார். வேகம் குறைத்தார். அப்பாடா என்று பெருமூச்சு விடுவதற்குள் அது நடந்து விட்டது.

வலது கால் ஷூவால் நத்தையை பக்கவாட்டில் தட்டி விட்டு தொடர்ந்து நடந்தார். சரக்கென்று கோபம் வந்தது. என்ன மனுஷன்! இரக்கமே இல்லையா? சத்தமாக கேட்க வேண்டும் போலிருந்தது. சத்தம் வராமல் கண்டித்தேன். எப்போதும் போல. அ எல்லாரையும் போல.

க்ளாக்வைஸ் எல்லாரும் நடக்கும்போது ஒருத்தர் மட்டும் வலமிருந்து இடமாக நடப்பார். Anti clockwise. அவர்களை பிடிக்காது. சமூக ஒழுங்கை மீறுகிற எவரையும் பிடிக்காது. ஆகவே எதிர் திசையில் போகாமல், என் போக்கிலேயே வேகமாக நடந்து அந்த இடத்தை எட்டினேன்.

நடைபாதை சுவரை ஒட்டிய மண் தரையில் ஒட்டியபடி கிடந்தது நத்தையின் பெரிய கூடு. அதன் உடலாக இருக்கும் என நான் நினைத்த ஒன்று கூடின் அடியில் பிதுங்கி தெரிந்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டேன்.

கடவுளே இது என்ன சோதனை? காலையில் எழுந்ததுமே ஒரு உயிர் பலிக்கு காரணமாகி விட்டேனா? சங்கடமாக இருந்தது. பிராய சித்தம் உண்டா, அது என்ன, எதுவும் தெரியாது. நம்பிக்கையும் கிடையாது. ஆனால் தப்பு என் மீது தான். அதில் டவுட்டே இல்லை. இன்னும் ஒரே ஒரு நிமிடம் அந்த இடத்திலேயே நின்றிருந்தால், நத்தை பத்திரமாக இறங்கி போயிருக்கும். அதற்குள் என்ன அவசரம்?

இசை ரசிகர் 2 முறை என்னை கடந்து செல்லும் வரை அப்படியே நின்றேன். தொட்டு பார்க்க தைரியம் இல்லை. ஓடு கீறல் விழுந்திருந்து, நான் தொட்டதும் நொறுங்கி விழுந்து உயிரற்ற உடல் தெரிந்தால்..?

சிறு சைஸ் நத்தை என்றால் இவ்வளவு கலங்கி இருப்பேனா, தெரியாது. இது பெரிய நத்தை. குடும்பத்தில் மூத்த பாட்டி அ தாத்தா மாதிரி. எவ்வளவு ஆர்வமாக நடைபாதையை குறுக்காக கடந்தது? மனிதர்கள் மேல் நம்பிக்கை இருந்ததால் தானே அப்படி வந்தது? ஒருவேளை கர்ப்பிணி நத்தையாக இருக்குமோ, தெரியவில்லையே. அப்படி இருந்தால் பெரிய பாவம் ஆயிற்றே.

இசை ரசிகரை திட்டுவது குறைந்து என்னையே திட்டிக் கொள்வது அதிகமானது. ஒரு நத்தைக்கு இவ்வளவு சீன் போடுவியா? என்று ஒரு குரல். மனசுக்குள். என்ன இருந்தாலும் அது ஒரு உயிர் அல்லவா? என பதில் கேள்வி. அந்நியன் அம்பி மாதிரி யோசிக்காதே. இதென்ன மூன்றாம் குரல்? மனைவி மகன் சூட்டிய பெயர் நிலைத்து விடுமோ? OMG, I’m getting paranoid.

இல்லை இல்லை, நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நாம் எப்படி பொறுப்பாக முடியும்? இது விதி. அந்த நத்தையின் கர்மா. மணல் கடத்தலை தடுக்கும் டூட்டி போட்டால் தாசில்தார் என்ன செய்வார், பாவம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் சொல்லிட்டு உன் பாட்டுக்கு போய்ட்டு இரு! என்று உபந்யாசத்தில் கேட்டது ஞாபகம் வந்தது.

சின்ன வயசில் காதில் விழுந்தது எல்லாம் இப்போது எப்படி துல்லியமாக ஸ்க்ரோல் ஓடுகிறது? சூரியன் அப்போது தான் எட்டிப் பார்த்தான். ஒரு கும்பிடு போட்டு ச கி சொன்னேன். முகத்தை அழுந்த துடைத்து விட்டு நடையை தொடர்ந்தேன். ஒவ்வொரு சுற்று வரும்போதும் நத்தையை பார்த்தேன். நிற்காமல்.

இசை ரசிகர் அவர் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தார். ச்சே. மனசாட்சி உறுத்தாதா? ஒருவேளை அவர் நத்தையை கொல்ல வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார். லைட்டாக தட்டி விட்டால் அது கீழே ஈர மண்ணில் அல்லது புல் மீது விழுந்து பயண நேரத்தை மிச்சமாக்கட்டும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

ஹெட்போனுக்கு வெளியே கசிந்த பாடலை கேட்டபோது அவரும் நல்ல ரசிகனாக ஜீவராசிகளை மதிப்பவராக தெரிந்தாரே..

அட மனமே. குதிரையாக பாயாதே.

ஒருவேளை நத்தை இறந்திருக்காதோ? ஓரடி கீழே விழுந்த ஷாக்கில் மயங்கி இருக்குமோ? இந்த எண்ணம் வந்ததும் நடை வேகத்தை கூட்டினேன். எத்தனை சுற்று என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் உற்று உற்று பார்த்தேன்.

புதிதாக வந்த பெண்மணியையும் சேர்த்து ஒரு மாதிரி பார்த்தவாறு போனார்களே தவிர, என்ன எதையும் தொலைத்து விட்டு தேடுகிறீர்களா? என எவரும் விசாரிக்கவில்லை. சென்னையின் பண்பாட்டு சவுகரியங்களின் ஒன்று.

உடல் அங்கமாக இருக்கலாம் என்று சொன்னேன் இல்லையா, அது லேசாக இடம் மாறியது போல தெரிந்தது ஒரு சுற்றில். லேசான படபடப்புடன் நின்று கவனித்தேன். அட்ரா சக்க! ஆன்டெனா மெல்ல வெளிப்பட்டது.

மினியேச்சர் யானையின் தும்பிக்கை போல இரு பக்கமும் அசைந்து நின்றது. விசில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. 63ல் முடியாதது 23ல் சாத்தியப்படுமா?

தெரிந்த கடவுள் தெரியாத கடவுள் எல்லாருக்கும் மனசார தேங்ஸ் சொன்னேன். பழியும் பாவமும் மேல விழாம தப்பிக்கிறது ஒரு சுகம்.