பாலியலும் ஆண்,பெண் உடல்களும்: லூச் இரிகரை/முபீன்

ஆண் தன் பாலியலை நிறைவேற்றிக் கொள்ள பெண் உடல் தேவைப்படுகிறது. ஆனால் பெண் தனக்கான பாலியல் விருப்பமாக ஆண் உடல் இருக்கிறது என்ற கற்பிதத்தை உருவாக்கி வைக்க நிர்பந்திக்கப்படுகிறாள்.

ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை மீறினால் அவளுக்குத் தவறான பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறாள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பாலியல் முரண்பாடு குறித்து ஃப்ராய்டும் லக்கானும் குறிப்பிடவில்லை.
ஆணிடம் கிடைத்த பாலியல் நிறைவைத்தான் தனது பாலியல் கற்பனையாகப் பெண் உருவாக்க வேண்டியிருக்கிறது. இது வதைபடுதல் இன்பம் என்ற வகைமையைச் சார்ந்ததாக உள்ளது.

ஃப்ராய்ட் சிறுமிகளின் பாலியல் விருப்பத்துக்கான தொடக்கம் முளையிலேயே மறைந்து போவதாகக் கூறுகிறார். ஆனால் பெண் பாலியலின் ஆதி வடிவம் இப்போதிருப்பது போல் இருந்திருக்காது. மேலும் நாகரிகமயப்படுத்துதல் என்பது ஆண் மைய சிந்தனையிலிருந்து உருவான ஒன்றாக இருப்பதால் பெண் தன் உடல் குறித்த முழுமையான விழிப்புணர்வைப் பெற்றுவிடாமல் தடுப்பதாகவே பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதனால்தான் ஆண் பாலியல் செயலூக்கம் கொண்டும் பெண் பாலியல் முடக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. இந்தக் கருத்தே பெண் தன் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கருத்தாக்கத்தை உருவாக்கியது.

லூச்இரிகரை