சாக்லெட் கடவுள்/பிரேம பிரபா

அன்று எனக்குப் பிறந்த நாள். ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்திருந்த்து. அவைகளைப் பிரித்துப் பார்க்க பாட்டியும் எனக்கு உதவி செய்தாள். விதவிதமான சாக்லெட்டுகள், கலர் பென்சில்கள், ஓரிரு மை பேனாக்கள், என் நெருங்கிய நண்பன் சூரி கொடுத்த பொண் வண்டு, மற்றும் அரை அடி உயரத்தில் ஒரு கடவுள் சிலை. உடனே அதை என்னிடம் வாங்கி பாட்டி பக்தி சிரத்தையுடன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். அம்மாதான் சிரித்துக் கொண்டே பாட்டியிடம் “அம்மா, அது சாக்லெட். யாரு அனுப்பி இருக்காங்கன்னு பாரு?” என்றாள். கிழித்துப் போட்ட கலர் தாள்களையும், வாழ்த்து அட்டைகளையும்  தேடிப் பார்க்க ஒன்றும் கிடைக்கவில்லை. அது யாராயிருக்கும் என்ற யூகத்தில் அனைவரும் ஆளாளுக்கு ஒரு பெயரைக் கூறினோம். கடைசி வரை அந்தச் சிலையை அனுப்பியவர்  ஒரு மாயாவியாகவே தோற்றமளித்தார். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “எனக்கென்னவோ எங்கண்ணுக்கு அது சாமியாத்தாண்டி தெரியுது” என்று  அந்தச் சிலையை பத்திரமாக விளக்கு மாடத்திற்கு அருகில் இருக்கும் பலகையில் வைத்தாள். இதைப் பார்த்த அம்மாவிற்கு சிரிப்புதான் வந்தது. “ஒன்னு காத்து போகாத டப்பாவிலே வைச்சு அப்புறம் சாப்பிடு, இல்லை இப்பவே முழுக்க சாப்பிட்டிடு” என்று என்னிடம் கூற நான் அடுக்களையில் டப்பாவைத் தேடினேன். 

தினமும் அதை எடுத்துப்பார்த்து விட்டு மறுபடியும் அந்த  டப்பாவிலேயே வைத்து விடுவேன். காலையில் படுக்கையில் இருந்து எழுந்து வந்தவுடன், மற்றும்  பள்ளிக் கூடம் விட்டு வந்தவுடனும் என் முதல் வேலை அதுவாகத்தான் இருக்கும். அந்தச் சிலையை தொட்டு உள்ளங்கையை முகர்ந்தால் பாலின் மணமும், கொக்கோ மணமும் ஊரைத்தூக்கும். ஒரு சமயம் சிலையாகத் தெரிந்தாலும், பல சமயங்களில் அது சாக்லெட்டாகத்தான் எனக்குத் தெரிந்த்து. ஒரு தடவை அதை எப்படியும் சாப்பிட வேண்டும் என்ற தீர்மானத்தில் டப்பாவைத் திறக்க, பாட்டி “இங்கே வந்து அதைக் கொஞ்சம் என்னண்டே காட்டுடா? எவ்வளவு லட்சணமா இருக்கு இந்த சுவாமி சிலை” என்று சொல்ல, மீண்டும் அந்தச் சிலை எனக்குக் கடவுளானார். 

அம்மாவிடம் இது பற்றிக் கேட்க “உனக்கு எப்படி தோணுதோ, அப்படியே செய். ஆனா ஒன்னு, இந்தச் சிலையை ரொம்ப நாள் இப்படியே பத்திரமா எறும்புக கிட்டே இருந்து யாராலும் பாதுகாக்க  முடியாது. உனக்கு பிடிச்சா உடனே சாப்பிட்டிடு” என்று அவள் கருத்தைக் கூறினாள். ஏழு நாட்கள் எப்படியோ பல விதமான மனப் போராட்டங்களுடன் ஓடிவிட்டது. இந்தச் சிலையை பற்றி நண்பர்களிடம் கேட்க அனைவரும் ஓரே குரலில் “முடியலைன்னா எங்ககிட்டே கொடுத்துடுடா. சாக்லெட் சாப்பிட கூலியா” என்று கிண்டல் அடித்தார்கள்.

அன்று வார விடுமுறை நாள்.  வழக்கமாக எங்கள் வீட்டிற்கு வரும் வேலைக்காரம்மா அன்று அவளுடைய ஐந்து வயதுப் பையனுடன் வந்திருந்தாள். பொடியன் மகா துறு துறு. கொல்லைப் புறத்தில் அவன் அம்மா வேலை பார்க்க, அவன் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து “பசிக்குதுண்ணா” என்றான். இதை அடுக்களையில் இருந்து  கேட்ட பாட்டி சம்படத்திலிருந்து என் பிறந்த நாளிற்கு செய்த தட்டையை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள். அதற்குள்  நானும்  அந்தச் சிலையைக் டப்பாவிலிருந்து எடுத்து அவனிடம் ஆர்வத்துடன்  காட்டினேன். வாயைப் பிளந்தபடி  “எவ்வளவு பெரிய சாக்லெட்” என்றவன் கண்மூடித் திறப்பதற்குள் ஒரு கடி கடித்து விட்டான். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அம்மா சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே “முழுச் சாக்லெட்டையும்  அவன் கிட்டேயே கொடுத்துடுடா. ரொம்ப பசியிலே இருக்கான் போல” என்று   கூற என் ஒரு வாரப் போராட்டம் எப்படியோ ஒரு நல்ல   முடிவிற்கு வந்தது. 

“அன்று அந்தச் சிறுவனின் பசியை கடவுள்தான்  தீர்த்து வைத்தார்”. இப்படித்தான் பாட்டி எல்லோரிடமும் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தாள்..