ஆதிமூலத் தேரோட்டம்/மீ. விசுவநாதன்


உலகம் முழுவதும் அவன்ஊரு – அதை
உணர்த்த வருகிறான் தேர்மீது
நலமாய் உயிர்களைக் காக்கின்ற – நம்
மண்ணின் மைந்தனின் பேர்பாடு

வடத்தைப் பிடித்திட வாருங்கள் – அவன்
வழியைக் காட்டுவான் சேருங்கள்
குடத்துள் இருக்கிற விளக்கல்ல – நாம்
கோடி சூரியக் கதிராவோம்

மனத்தின் கவலையை பொசிக்கிடவே – அவன்
மகிழ்ந்து தேரினில் வருகின்றான்
சினத்தைக் கொல்கிற சிரிப்போடு – நம்
சினேகி தனருகில் வருகின்றான்

ஆதி மூலனாய் இருந்தாலும் – மிக
அடக்க மாகவே இருக்கின்றான்
சாதி பேதமே இல்லாத – குண
சாந்த முகத்துடன் வருகின்றான்

காலை கதிரவன் ஒளிப்பிழம்பாய் – அவன்
காட்சி தருவதைக் காணுங்கள்
மாலை மலரெனும் மனங்கொண்டு – தேர்
வடத்தைப் பிடிக்கலாம் கூடுங்கள்

ஒருவன் அவனெனும் உணர்வோடு – நம்
உயிராம் தேரினை இழுத்திடுவோம்
பெருமாள் நாமெனத் தெளிவாகும் – நம்
பெரிய ஆணவம் பலியாகும் .

(இன்று- 04.05.2023 – கல்யாணபுரி என்ற
கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின்
சித்திரைத் தேரோட்டம்)