அம்மாவுக்கு இன்று 94!/இசைக்கவி ரமணன்

இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்
கைகால் தளர்ந்த போதிலும்
என்றும் சிங்கம் சிங்கமே
எங்கள் வீட்டுத் தங்கமே!

காய்கறி நறுக்கும் விரல்களில்
காயம் இன்றும் பசுமைதான்
கட்டிய சேலை துளியுமே
கசங்கா திருப்பது புதுமைதான்
பேய்போல் உழைப்பாய் தினமுமே
பெருமை மிகவும் அதிகமே
பெண்கள் நால்வர் நடுவிலே
பேதை மகன்நான் ஒருவனே

அன்னை என்பவள் அதிசயம்
ஆண்டவன் வியக்கும் ரகசியம்
‘அம்மா’ என்றால் நிம்மதி
அதுவே இறைவன் சந்நிதி
அன்னையின் பார்வையில் என்றும்நாம்
அதே அறியாக் குழந்தைதான்
என்றும் அவளே மூத்தவள்
எனைத்தன் னுயிரால் யாத்தவள்!

வாழ்வின் மாலைப் போதிலும்
வண்ணக் கமலம் போலவே
வாசம் வீசும் தேவியை
வணங்கி நெகிழ்ந்து வாழ்கிறேன்
தாழ்ந்து மயக்கும் வாழ்விலே
தாங்கிப் பிடிப்பது தாய்மடி
தட்டை நிரப்பும் பூரணி! என்
தமிழில் மட்டும் சேயடி!


04.05.2023/வியாழன்/காலை 8.42