இறைவன் செய்வித்த என் மகளின் திருமணம்/கணபதி சுப்பிரமணியன்

🙏🙏🙏🙏🙏

என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.

என் மைத்துனரின் மாமனார் வீட்டுக் குடும்பத்தினர் வீட்டுப் பையன். அயல்நாட்டில் எம்டெக் படித்துத் திரும்பியவர்.

திருமணம் செய்ய என்னிடம் பணமே கிடையாது. ஏற்கனவே நிறைய க்ரெடிட் கார்டு கடன்கள் வேறு.

கவலையுடன் எனக்குத் தெரிந்த ஒரு இடத்துக்குச் சென்றோம். அந்த வீட்டுப் பெண்மணி நரசிம்மஸ்வாமி உபாசகர். அவர் பூஜை செய்யும் விக்ரஹம் அவருடன் பேசும்.

அங்கு சென்று பிரார்த்தித்த போது அந்த பெண்மணி பூஜித்து விட்டு, “ நரசிம்மர் தான் நிதிக்கு ஏற்பாடு செய்வதாகவும், நிச்சயம் திருமணம் நல்ல முறையில் நடக்கும் என்றும் ஆசியளித்துள்ளார் ” என்றார்.

நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் யாரிடமும் நிதி உதவி கேட்கவில்லை.

அன்று மாலை நாங்கள் வீட்டுக்கு வந்ததும் எங்கள் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த நண்பரின் மனைவி என் மனைவியைக் கூப்பிட்டு இருவருக்கும் தெரிந்த ஒரு நண்பரைக் குறிப்பிட்டு, அவர் எங்களைப் பார்க்க வந்தார் என்றார். நாங்கள் அவருக்கு ஃபோன் செய்து பேசும்போது அவர் இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாகக் கூறினார்.

அருட்செயல் -1

அரைமணி நேரத்தில் வந்த அவர் “சார் எனக்குத் திரும்பிவந்த இரண்டு லட்ச ரூபாய் பாங்கில போடலாம்னு நினைச்சதை என் மனைவி உங்கள் பெண் திருமணத்திற்காகக் கொடுக்கலாமே என்றதால், நான் அந்தப் பணத்தை அப்போதே எடுத்துவந்தேன்” என்று சொல்லி கையில் பணத்தைக் கொடுத்தார்.

அவர் அன்று முதலில் பணத்தோடு வந்த நேரம் சரியாக நாங்கள் நரசிம்மரின் வாக்கைப் பெற்ற நேரம். இது முதல் அதிசயம். நாங்கள் நம்பிக்கையுடன் நிச்சயதார்த்தம் செய்தோம்.

அருட்செயல் -2

இரண்டாம் அதிசயம் எதிர் வீட்டுக்கு வந்திருந்த ஒரு வயதான ஆன்மீகமான தம்பதிகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த அவர்களுக்கு அறிமுகம் ஆகாத என் மனைவியிடம் ஒரு பாக்கெட் மஞ்சள் கிழங்குகள் ஒரு லக்ஷ்மி படம் போட்ட தட்டு கொடுத்து ஆசீர்வதித்து உங்கள் பெண்ணுக்கு நன்கு திருமணம் ஆகும் என்று கூறியது.

அருட்செயல் -3

மூன்றாம் அதிசயம்: நான் ஒருநாள் ஆர்யகௌடா சாலையில் வீட்டுக்கு நடந்து வரும்போது நடுவில் மரத்தடியில் உள்ள மாரியம்மன் சிலையை வணங்கிவிட்டு நகர்ந்தபோது பின்னால் இருந்து “நில்லுங்கோ ஸ்வாமி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஆஜானுபாகுவாய் நெற்றியில் பெரிய நாமம் போட்டுக் கொண்டு உயரமாக வெங்கடாசலபதி போன்றே அருகில் மங்களகரமான முதிய பெண்மணியுடன் என்னை நோக்கி வந்து “கவனிக்காமலேயே போறேளே” என்று கூறினார் அவர்.

தன் கையில் இருந்து ஒரு பக்கம் ஸ்ரீசக்ரம் ஒருபக்கம் மஹாலஷ்மி பொறித்த கனமான சின்ன பித்தளைத் தட்டும் துளசியும் குங்குமமும் கொடுத்து அனுப்பினார்.

நான் “ஏதாவது பணம் தரவேண்டுமா” என்று கேட்க, “ நானல்லவா உமக்கு பணம் தருகிறேன் ” என்று சொல்லி “ நல்லபடியா உம்ம பொண்ணுக்கு விவாகம் ஆகும் ஓய், கவலைப் படாம இரும் ” என்று சொன்னார்.

நான் நமஸ்கரித்துவிட்டு சிறிது பணம் கொடுத்ததும் மிகவும் வற்புறுத்தியதும் பெற்றுக் கொண்டனர். அவர் பெயர் லக்ஷ்மிநரசிம்மன் என்று அச்சடித்த விசிட்டிங் கார்டையும் கொடுத்தார்.

என் பெண்ணுக்கு மணமான இந்த ஏழு வருடத்தில் நான் இத்தம்பதியினரை மறுபடி பார்க்க முடியவில்லை. அவர் கொடுத்த விலாசம் உண்மை. ஆனால் அங்கு யாரும் இல்லை.

அருட்செயல் -4

அடுத்த மாதம் எங்கள் எதிர் வீட்டுக் காரர் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து உங்கள் பெண் திருமணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ரிடயர் ஆனபின் வாங்கிக் கொள்கிறேன் என்று கொடுத்தார். அந்த நண்பர் பெயர் லக்ஷ்மி நரசிம்மன்.

அருட்செயல் -5

என் மைத்துனர் எனக்கு பெரிய தொகை கொடுத்து, க்ரெடிட் கார்ட் கடன்களை முடித்து விட்டு, மீதியை கல்யாணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள், ரிடயர் ஆனபின் தாருங்கள் என்று தந்தார். அவர் பெயரும் நரசிம்மன் தான்.

இதற்குப் பின்னர் தஞ்சையில் சில நண்பர்களிடம் நான் கேட்டு வாங்கிய கடன்கள் சில லட்சங்கள்.

அருட்செயல் -6

பத்திரிக்கை அடித்ததும் முதலில் குலதெய்வத்துக்கு வைக்க வேண்டும்.

எங்கள் குலதெய்வம் லக்ஷ்மிநரசிம்மரின் கோவில் தஞ்சாவூர் அம்மாபேட்டையில் இருக்கிறது.

ஆனால் ஒரு சமயம் அக்கோவில் சிலை திருட்டுப் போனதால் சரிவர பூஜைகள் நடக்கவில்லை. புது சிலை வைத்து குடமுழுக்கு செய்யத் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கோவில் நிர்வாகம் யார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியவில்லை. எப்படிப் பத்திரிக்கையை குலதெய்வம் கோவிலுக்கு வைப்பது என்று அறியாமல் திண்டாடினோம்.

வேறு ஊர் கோவிலில் உள்ள நரசிம்மர் சன்னதியில் வைக்கலாம் என்று முடிவு செய்து இருந்தோம். பத்திரிக்கை அடிக்கக் கொடுத்து விட்டோம்.

இந்த சமயத்தில் பாங்க் ஆஃப் தஞ்சாவூர் பழைய ஹெட் ஆஃபீஸ் கட்டிடத்தில் ஒரு லோன்மேளா நடந்தது. ஈஸ்வரி நகர் கிளையும் தஞ்சாவூர் ஜங்ஷன் கிளையும் தஞ்சையில் நடக்கும் மேளாக்கலில் அதிகம் கடன் கொடுப்பவை.

மதிய நேரத்தில் கீழே இயங்கும் தஞ்சாவூர் ஜங்ஷன் ப்ராஞ்சுக்கு வந்தேன்.

அப்போது என் நண்பர் திரு பீட்டருக்குப் பதிலாக அங்கு நரசிம்மன் என்பவர் புதிதாக ABM ஆக வந்திருந்தார்.

விசாரிக்கும் போது அவர் ஊர் அம்மாபேட்டை என்றும் அவரது குடும்பம்தான் இந்தக் கோவிலை நிர்வகிக்கிறது என்றும் அறிந்தேன்.

அந்த வாரக் கடைசியில் அச்சாகி வந்திருந்த கல்யாணப் பத்திரிகைகளை திரு நரசிம்மன் அவர்கள் தன் காரில் என்னை அழைத்து சென்று அம்மாபேட்டையில் வேறு ஒரு இடத்தில் பாலாலயத்தில் இருந்த ஸ்வாமி சன்னதியில் வைத்து சில பத்திரிக்கைகளை முதலில் கொடுத்துவிட்டு வந்தேன்.

நரசிம்மர் என்ற மனிதர் எங்கள் குலதெய்வக் கோவில் நரசிம்மரிடம் என்னை அழைத்துச் சென்று முதல் பத்திரிக்கையை கொடுக்க வைத்தது நரசிம்மரின் ஆறாவது அதிசயம்.

ஆக இப்படி என் குலதெய்வமான நரசிம்மஸ்வாமி

• தானே எங்களுக்கு வாக்கு கொடுத்து,

• தானே நிதியை ஏற்பாடு செய்து,

• தானே தாம் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தி

• தானே முதல் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு என் பெண் திருமணத்தை

• தன் ஆசியில் எங்களைச் செய்யுமாறு ஆக்கினார்.

வீட்டு நிகழ்வுகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்கக் கூடாது என்பது என் கொள்கை. எனவே யாருக்கும் பத்திரிகை கொடுக்காமல் இருந்தேன்.

ஆனால் ஆஃபீசில் பேசிக் கொள்வதைப் பார்த்துவிட்டு பலர் நான் பத்திரிகை கொடுப்பேன் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

என் நண்பர் ஒருவர் “சார், நீங்க வந்து பிசினஸ் நல்ல வளர்ச்சி ஆகியிருக்கிறது, இதற்கு காரணம் உங்களோட மேனேஜ்மென்ட், உழைப்பு, நல்ல கஸ்டமர் சர்வீஸ்தான்.

“ஆனாலும் முக்கிய காரணம் கஸ்டமர்கள்தான். முக்கியமான கஸ்டமர்கள் 1000 பேரில் பாதிப்பேருக்காவது கொடுக்கணும். No gifts will be accepted அப்படின்னு பத்திரிகையில் போட்டுடலாம். உங்க பிரின்சிபிள் படி பரிசு எதுவும் வராது. மினிமம் 500 பத்திரிகை அடிக்கலாம், சார். நம்ம ப்ரஸ் ஃப்ரண்டு இப்போ உள்ளே இருக்கிறார், கூப்பிடவா” என்றார்.

வேண்டாங்க என்று மறுத்துவிட்டு, மிக முக்கியமாக நான் கருதிய ஐந்து கஸ்டமர்களுக்கு மட்டும் கொடுத்தேன்.

நிறைய கஸ்டமர்களுக்கு வருத்தம் தான். ஆனால் இது எனக்குப் பழகிப்போன ஒன்று.

என் பெண்ணுக்கு 2013 மார்ச்சில் சென்னையில் திருமணம் நடந்தது. எல்லாத் திருமண ஏற்பாடுகளையும் என் மனைவிதான் முழுக்க முழுக்கச் செய்தார்.

நான் 8 நாள் லீவ் போட்டுவிட்டு திருமணத்திற்குச் சென்று வந்தேன். சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரு பெரிய மண்டபத்தில் நடந்த அந்த்த் திருமணத்திற்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். திருமணம் மார்ச் மாதம் வைக்காமல் வேறு மாதத்தில் வைத்திருந்தால் பாங்க் மேனேஜர்கள் நிறைய பேர் வந்து இருப்பார்கள். மார்ச் மாதம் பலருக்கு லீவ் கிடைக்கவில்லை..

அருட்செயல் -7

எவ்வளவோ சோதனைகள் என் அலுவலக வாழ்வில்.

எனக்குப் பிடிக்காதவர் என்று யாருமே இல்லாதபோதிலும், என்னைப் பிடிக்காதவர்கள் வங்கியில் இருந்தனர்.

எனக்கு சரியான பதவி ஓய்வு கிடைக்குமா என்ற அச்சத்தை அவர்கள் கிளப்பி இருந்தனர். ஒரு சிறிய இழப்பை ஏற்படுத்தி, என்னை முறையாக பதவி ஓய்வில் MD, EDs, GMs, DGMs, AGMs, Officers, Staff என்று எல்லோரின் முன்னிலையில் எனக்கு ரெகுலர் ரிடையர்மெண்ட் பெற வைத்தது என் குலதெய்வத்தின் அருள்தான்.

எனக்கு வந்த ரிடையர்மெண்ட் தொகைகள் கொண்டு எல்லாக் கடன்களையும் எழுபத்தைந்து விழுக்காடு தீர்க்க இயன்றது.

அருட்செயல் -8

கடைசியாக வந்த சோதனை ஈஸ்வரி நகர் கிளையில் கொடுத்த ஒரு பெரிய கடன் கணக்கு தொடர்பாகத்தான்.

நான் 2014 செப்டம்பரில் ரிடையர் ஆகியும் எனக்கு பிரச்சினைகள் நிற்கவில்லை. அந்தக் கடன் 2016ஆம் ஆண்டு NPAயாக அறிவிக்கப் பட்டது.

2017 பிப்ரவரியில் அக்கடன் வழங்கும்போது நான் சில நிபந்தனைகளை செயல்படுத்தவில்லை என்று எனக்கு ஒரு நோட்டீஸ் வந்தது.

நான்கு ஆண்டுகளாக மன உளைச்சலை அளித்துவந்த இப்பிரச்சினை இந்த மாதம்தான் (June, 2021), ஒரு தண்டனையுடன் முடிவுக்கு வந்தது.

பண இழப்பு ஒரு வருத்தம் கொடுத்தாலும், மன உளைச்சல் இத்துடன் நின்றதே என்னும் ஒரு நிம்மதிதான் அதிகம். இதுவும் எங்கள் குலதெய்வத்தின் அருள்தான்.

என் வாழ்க்கையே ஒரு விசித்திர வாழ்க்கை. எத்தனையோ சோதனைகள், நான் என் அறிவில் தவறுகள் செய்யாமல் இருந்தும் கூட. என் பெற்றோர்கள் ஆசியும் என் குலதெய்வத்தின் ஆசியும்தான் என் கர்மபலனில் இருந்து என்னைக் காத்து வருகின்றன.

எப்போதும் திருமகளுடன் இருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளுக்கு வந்தனமும் நன்றியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02gREtGhKqntT9r8shzhXRJKCFiXtRAqk4NLjQAsLmq3WCGYPkixLMv6Lue6UQsYZ3l&id=100084865364947&mibextid=CDWPTG