
ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை தனது தாயை விரும்புவது ஆணிய தன்மை வெளிப்படும் லிங்கத்தை விரும்புவது போலானதுதான் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த விருப்பம்தான் தாய் மீதான வெறுப்பாக மாறுகிறது என்கிறார் ஃப்ராய்ட். தனக்கும் தாய்க்கும் உள்ள உடல் குறையாக அது பரிணாமம் பெறுகிறது என்கிறார் ஃப்ராய்ட்.
ஃப்ராய்ட்டுக்குப் பாலியல் செயல்பாடு என்பது மனித மறுஉற்பத்தி செயல்பாடாகவே தோன்றுகிறது. பெண்ணின் பாலியல் பரிணாமம் மறுஉற்பத்திக்கானதாகக் கட்டமைக்கப்படவேண்டியது என்பதே ஃப்ராய்டின் இலக்காக இருக்கிறது. பெண் என்ற உயிரி சமூகவயப்படுத்தப்பட்டு குடும்பம் என்ற நிறுவனத்தின் உற்பத்தி எந்திரமாக்கப்படும் உளவியலைத்தான் ஃப்ராய்ட் பேசுகிறார். இடிபஸ் சிக்கலின் அடிப்படையில் ஆணைப் போன்ற உடலைப் பெறாத ஏக்கம் கொண்ட மனித உயிரியாகப் பெண் உருவாவதாக ஃப்ராய்ட் வாதிடுகிறார்.
பெண்ணின் அடக்கப்பட்ட பாலியல் விருப்பம் குறித்து ஆய்வு செய்யாத ஃப்ராய்ட் அதனால் ஏற்படும் விளைவுகளை நோயாகப் பாவிக்கிறார். பாலியல் வெறுப்பு, இசிவு நோய் எனப்படும் ஹிஸ்டிரியா, மனப்பிறழ்வு போன்றவற்றால் பெண் பாதிக்கப்படுவதாக ஃப்ராய்ட் கூறுகிறார். இந்த உளவியல் ஆய்வு பெண்ணின் எந்த வகையான இயல்பைக் குறித்தும் பேசுவதாக இல்லை. பெண் ஓர் இருள் பிரதேசமாகவே இதுவரையிலான உளவியல் ஆய்வுகள் பாவிக்கின்றன.
கரன் ஹார்னி, மெலெய்ன் கிளைன், எர்னஸ்ட் ஜோன்ஸ் போன்றவர்கள் ஃப்ராய்டின் ஆய்வை ஏற்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த உளவியல் ஆய்வாளர்கள் பெண் உளவியல் குறித்த மாறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
