ஏன் உடற்பருமன் ஒரு பிரச்சினை அல்ல?/ஆர்.அபிலாஷ்

நீண்ட நாட்களாக உடற்பருமன் குறித்து எனக்கிருந்த தவறான எண்ணம் அது மரபணுக்களின் இயல்பினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும் வருவது என்பதே. ஏன் என்றால் உட்கார்ந்து உழைப்பவர்களே அதிகமாக பருமனாகிறார்கள். அவர்களிலும் ஒரு சிலரே சீக்கிரமாக எடை போடுகிறார்கள். வேறு சிலரோ மூன்று வேளையும் பீட்ஸா, பர்கர் எனத் தின்றாலும் ஒல்லியாகவே இருக்கிறார்கள். நான் இதைப் பற்றி படித்த போது இவர்களுடைய மூதாதையர் அவ்வகை உடலமைப்பு கொண்டவர்கள், அதற்கு அவர்கள் அன்று வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டதே காரணம் என மரபியல் ரீதியாகப் புரிந்து கொண்டேன். ஆனாலும் இது கூட ஓரளவுக்குத் தான் இப்பிரச்சினையை விளக்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகரங்களில் மக்கள் பெருங்கூட்டமாக பருமனாகி வருவதைப் பார்க்கிறேன். முக்கியமாக, பருமனாகிறவர்கள் மட்டுமல்லாமல் ஒல்லியாக இருப்பவர்களும் அதிகமாக நோய்வாய்ப்படுவதைப் பார்க்கிறேன். இன்று வெடுவெடுவென்று தோன்றியவர், சுறுசுறுப்பாக இயங்கியவர் நாளைப் பார்த்தால் இல்லை, மாரடைப்பு என்பதைப் பார்க்கிறோம்; எத்தனையோ பேர் இப்படி கண்ணிமைக்கும் போது மாய்வதை இன்று பார்க்கிறேன். நான் என் இளமை வரை இவ்வளவு நோய்களையும், பருமன் கொண்டவர்களையும் கண்டிருக்கவில்லை. ஆக, நாம் நகரங்களுக்குப் பெயர்வதற்கும், அதன் நீட்சியாக உணவருந்துதல் ஒரு நுகர்வுப்பழக்கமாக ஆனதற்கும் இதற்கும் ஒரு நேரடியான தொடர்பு இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்.

உடற்பருமன் உடலின் மற்ற பிரச்சினைகளைப் போல் அல்லாது வெளிப்படையாகத் தெரிகிறது; அது ஒருவிதத்தில் நல்லது. நாம் முயற்சியெடுத்து அதன் ஆதிமூலம் என்னவெனக் கண்டுபிடித்து சரி செய்தால் நமது ஆயுள் சில பத்தாண்டுகளாவது கூடும். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களோ – ஒழுங்கற்ற வாழ்க்கைக்குள் இருக்கும்பட்சத்தில் – வினாடி-முள் டிக் டிக்கும் ஒரு டைம் பாம்மை தம் உடம்புக்குள் வைத்திருக்கிறார்கள்.

பிரச்சினையின் மூலம் தான் என்ன?
ஆய்வுகள் சொல்வதன் படி முதற் பிரச்சினை வெளியுணவுகளே. உணவகத்தில் கிடைப்பவை 99% ஆரோக்கியத்திற்கு கேடானவை. அவை கீழ்த்தட்டு உணவகமோ உயர்த்தட்டு உணவகமோ அடிப்படையில் அவர்கள் உங்களுக்கு தருபவை உங்கள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமானவை அல்ல.
அடுத்த பிரச்சினை, நாம் முன்னெப்போதையும் விட துரித உணவுகள், மைதா, கோதுமை உணவுகளை இன்று அதிகமாக புசிக்கிறோம். பர்கர், சாண்ட்விச், பரோட்டா, பிரியாணி என எந்த உணவிலும் போதுமான காய்கறிகள், நார்ச்சத்து இல்லை. நவீன ஓட்டல் உணவுகளில் தயிர், பழைய சோறு போன்ற புரோ பயோட்டிங் சாப்பாடு கிடைக்காது. இதை ரொம்ப பழமையான, அருவருக்கத்தக்க, பிற்போக்கான உணவாக பார்க்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுக்க இவ்வுணவுகளையே அமிர்தமாக பார்க்கிறார்கள். நாம் பிட்ஸா, பர்கர் போன்ற குப்பைகளைத் தின்று நம் உடலை அழித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த கால் நூற்றாண்டுக்குள் உயர்த்தட்டு உணவகங்களில் பழைய சோறு / நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை ஸ்டைலாக பெயரிட்டு நமக்கு பரிமாறி 1000-2000 என காசை வாங்கப் போகிறார்கள் பாருங்கள். நமக்கு அப்போதும் தெளிவு வராது. ஏனென்றால் உணவு நுகர்வாகி விட்டது. உணவு ஒரு கொண்டாட்டம் ஆகிவிட்டது. உணவு ஒரு கேளிக்கை ஆகிவிட்டது. ஆனால் உலகில் எந்த மிருகமும் உணவை கடவுளாக பார்க்குமே அன்றி கேளிக்கையாக நோக்காது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது பீட்ஸா, பர்க்கர் சாப்பிடுவதில் பிரச்சினை அதிக கலோரிகள், கொழுப்பு அதிகம் என்பது மட்டுமல்ல என்பதே. அவற்றில் என்ன இருக்கிறது என்பதல்ல, என்ன இல்லை என்பதே பிரச்சினை – அவற்றில் நம் குடலில் வாழும் நல்ல நுண்ணுயிர்களை வளர்க்கும் புரோ பயோட்டிக் தன்மையோ, நார்ச்சத்தோ இல்லை என்பதே பிரச்சினை. உணவு வியாபாரிகள் நம் சுவை நரம்புகளைத் தூண்டி விட்டு சம்பாதிக்கவோ நோக்குவார்கள் அன்றி ஆரோக்கியத்தை வளர்க்கும் உணவை வழங்கி அல்ல. அதுவும் ஆரோக்கிய உணவு உங்கள் சமையலறையிலே இருக்கும் போது அவற்றிடம் இருந்து உங்களை விலக்கினாலே அவர்கள் சம்பாதிக்க முடியும். இந்தியாவின் உணவு சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட 3000 கோடிகள். இதை உருவாக்குவதற்காக நாம் அடகு வைத்தது நமது ஆரோக்கியத்தையே.

என் நண்பர் ஒருவர் தினமும் வலிப்பு வரும் தன் குழந்தைக்கு மாவுச்சத்தை உணவில் குறைத்தே அதை பெருமளவில் ஓரளவுக்கு சரி செய்துவிட்டதாக சொன்னார். வெளிநாடுகளில் இவ்வாறு தான் சர்க்கரை நோயையும், மனவளர்ச்சி குறைபாடுகளையும் சரி செய்வதாக சொல்கிறார்கள். நவீன உணவுகளால் ஏற்பட்டுள்ள நோய்களைப் பட்டியலிட்டால் இன்றுள்ள பெரும்பாலான நோய்கள் வந்துவிடும் என நினைக்கிறேன்.

அதனால் முதல் வேலையாக நாம் வெளியுணவை சாப்பிடுவதில்லை என உறுதியெடுக்க வேண்டும். வீட்டிலே எளிதாக சமைத்து எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வது நல்லது. அப்படி டப்பா கட்டிக்கொண்டு போனது ஒரு பழமையான, கட்டுப்பெட்டித்தனமான உணர்வை உங்களுக்கு அளித்தாலும் கவலைப்படாதீர்கள். வெளியே தின்னுகிறவர்கள் காலனுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள், வெளியே சாப்பிடும் ஒவ்வொரு நாளும் தம் வாழ்நாளில் ஒரு நாளை அவர்கள் குறைத்துக் கொள்கிறார்கள் எனப் பொருள். ஆனால் நீங்களோ ஒரு நாளை கூடுதலாக வாழ்கிறீர்கள்.
மூன்றாவது பிரச்சினை – ஓட்டல் உணவுகளை நாம் நம் சமையலறைகளில் பண்ண முயன்றது, விளைவாக மரபான உணவுகளை ஒழித்தது. கடந்த சில பத்தாண்டுகளில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உணவுகளை முயற்சித்து பார்ப்பது நம் அடுப்பங்கரையில் அதிகரித்து விட்டது. இது நம் ஆரோக்கியத்தை கொத்துபுரோட்டா போட்டுவிட்டது. ஆகையால், நாம் மரபான உணவுகளையே வீட்டில் சமைக்க வேண்டும். போரடித்தாலும் பரவாயில்லை, பிரைட் ரைஸ், நூடுல்ஸ், பீட்ஸா, சப்பாத்தியையோ, பிரெட்டை வைத்து உணவுகளை வீட்டில் செய்வதையும் தவிர்க்க வேண்டும். நம் தாத்தா, பாட்டி என்ன சாப்பிட்டார்களோ, நம் ஊர்களில் பழங்காலத்தில் என்ன உண்டார்களோ அதைப் பின்பற்றுங்கள்.
நான்காவது பிரச்சினை நமது சிறுதானியங்கள் ஒழிந்து அவ்விடத்தே சோறு வந்தது. அடுத்து அண்மையில் சோறின் இடத்தே கோதுமையும் மைதாவும், அவற்றாலான துரித உணவுகளும் வந்தது. அதனால் சிறுதானியங்களை உண்போம். அதுவும் நொதிக்க வைத்து உண்டால் இன்னும் நல்லது.
அடுத்து, நாம் மிக மிக குறைவாக தாவர உணவை உட்கொள்ளுவது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் நிச்சயமாக அசைவ உணவுகளின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. அது ஒரு கொண்டாட்ட முகமாக, அந்தஸ்தின் குறியீடாக மாறிவிட்டது. புரதச்சத்து வேண்டும் என கோரிக் கொண்டு நாம் சிக்கனையும் மட்டனையும் தினமும் புசிக்கிறோம். இதனால் அதனளவில் பிரச்சினை இல்லை – ஆனால் வெறுமனே, தினமும், கறியையும் சோறையும் சாப்பிடுவதே பிரச்சினை. ஏனெனில் கறிச்சோறு பீட்ஸா, பர்கரை விட மேலானதே என்றாலும் அதில் இரண்டு குறைகள் உள்ளன: அ) நார்ச்சத்து இல்லை. ஆ) புற்றுநோயைத் தூண்டும் சங்கதிகள் கறியில் உண்டு என ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் சொல்கிறார். குறிப்பாக, பௌத்திர நோயாளிகளுக்கு கறி உணவை நிறுத்தி விட்டு தாவர உணவருந்த வைத்தால் நோய் சரியாகி விடுவதாக சொல்கிறார். பௌத்திர நோயானது குடலின் ஆரோக்கியத்துடன் சம்மந்தப்பட்டது. குடலின் ஆரோக்கியம் அதிலுள்ள நல்ல நுண்கிருமிகளால் ஆனது. இந்நுண்கிருமிகளே நமது உடலுக்கு ரத்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியின்மை பிரச்சினைகள் வராமல் காப்பாற்றுகின்றன. இவையே புற்றுநோய் செல்களை ஆற்றல் கொண்டவை, இவை அழியும் போதே புற்றுநோய் குணப்படுத்த முடியாத இடத்துக்குப் போகிறது என நிக் லேன் தனது Power, Sex, Suicide நூலில் சொல்கிறார். ஆக, டாக்டர் பழனியப்பன் சொல்லும் ஆய்வு முடிவுகள் தெளிவாக இருக்கின்றன. நமது சமையலறையில் கறி வாரம் ஓரிரு நாட்களும், காய்கறிகள் மீத நாட்களில் இருப்பதும் நல்லது என டாக்டர் பழனியப்பன் சொல்கிறார். நாம் ஜீவகாருண்யத்தை ஜீவன்கள் மீதல்ல நம் மீது காட்டவே இதை செய்ய வேண்டும். முக்கியமாக இந்த பிரியாணி வெறியைக் குறைக்க வேண்டும்.

6) இதற்கு அடுத்து, நேரம். நேரம் மீதான கட்டுப்பாட்டை இழந்ததே நமது ஆரோக்கியம் இவ்வளவு சீர்கெடக் காரணம். குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி எழுவது மிக முக்கியம் என்கிறார்கள். இரவு ஏழு மணிக்குள் உணவை முடித்துவிடுவது, பத்து மணிக்குள் தூங்கி விடுவது ஒரு காலத்தில் மிக சாதாரணமான நடைமுறையாக இருந்தது. இன்று அதை ஒரு உணவியலாளரோ மருத்துவரோ நமக்கு வலியுறுத்தினாலும் பின்பற்ற மிக சிரமமாக இருக்கிறது. ஆனால் இதிலும் நாம் நம் பெற்றோரையும், தாத்தா, பாட்டியையும் பின்பற்றியாக வேண்டும். அல்லது குறைந்தது நம் வீட்டில் உள்ள நாய், பூனையையாவது பின்பற்றலாம்.

7) மணியடித்தால் உணவருந்தி பழக வேண்டும். பிக்பாஸ் வீடு இதற்கு சிறந்த உதாரணம் – எந்த டயட்டையும் பின்பற்றாமலே, உடற்பயிற்சி இல்லாமலே அங்கிருக்கும் பங்கேற்பாளர்கள் சுலபத்தில் எடை குறைப்பதை பார்க்கிறோம். நேரத்து உணவருந்துவதும், ஓட்டல் உணவை சாப்பிடாததுமே காரணம்.

8)முடிந்தளவுக்கு நம் மூதாதையர் எப்படி சாப்பிட்டார்களோ, எதை சாப்பிட்டார்களோ அதை உண்ண முயல வேண்டும். ஏனென்றால் நமக்குள் இருக்கும் நல்ல நுண்ணுயிர்கள் மரபார்ந்து நம்மிடம் வரக் கூடியவை. அவை ஒரு குறிப்பிட்ட உணவுக்கும், வாழ்க்கை முறைக்கும் பழகி இருக்கும். நாம் அதை ஒரேயடியாக நவீனம் எனும் பெயரில் மாற்றக் கூடாது. பஞ்சாபியரின் உணவுப் பழக்கத்தை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு எல்லா நோய்களும் வரும். அவர்கள் உங்களைப் போல சாப்பிட்டால் உடல் கோளாறுகள் ஏற்படும்.

9) ஆறு வேளை உணவருந்துவதை நான்காக குறைக்கலாம். ஸ்நேக்கிங் எனப்படும் அவ்வப்போது சிறுதீனி உண்ணும் பழக்கத்தை விட்டொழிப்பது நல்லது. சாப்பிடும் போதும், மாவுச்சத்து குறைவான, நார்ச்சத்து அதிகமான உணவுகளையே தேர்வு செய்ய வேண்டும். ஒரு உணவு நம் ரத்த சர்க்கரையை உயர்த்தாததெனில் அதுவே நல்ல உணவு. வேக வைத்த / பச்சை காய்கறிகள் உள்ளிட்ட தாவர உணவு அதிகமாகவும், முட்டை, சிக்கன் உள்ளிட்ட கறி உணவுகள் குறைவாகவும் எடுத்துக் கொண்டால் நம் ரத்த சர்க்கரை குறைவாகவே உயரும்.

10) 12-14 மணிநேரமாவது தினமும் விரதம் இருக்கலாம். இதை நேரக் கட்டுப்பாட்டுக்குள்ளான உணவருந்துதல் (time restricted feeding) என்கிறார்கள். எடைக் கட்டுப்பாட்டுக்கு என்றல்ல, முழுமையான ஆரோக்கியத்தை ஏற்படுத்தவே இதை செய்ய வேண்டும். ஏனென்றால் விரதத்தினால் நம் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.

11) எடையைக் குறைப்பதற்காக என நாம் உடற்பயிற்சி நிலையம் போகக் கூடாது. எடை குறைப்பு அல்ல, உடல்நிலையை மேம்படுத்துவதுமே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு மேற்சொன்ன காரியங்களை செய்ய வேண்டும். அல்லாமல் வெறுமனே டிரெட் மில்லில் ஓடினாலோ டம்பெல்ஸ் தூக்கினாலோ பயனிருக்காது. நிச்சயமாக எடை குறையாது. உடல்நிலையும் மேம்படாது. மறந்துவிடாதீர்கள் – உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி சிறிதளவே முக்கியம் (10%). உணவும், ஒழுங்கான கட்டுப்பாடான வாழ்க்கைமுறையுமே பெருமளவு முக்கியம் (90%).
நாம் சாலையில் போகும் பருமனான ஒருவரைப் பார்த்ததும் தின்னு தின்னு தூங்கி உடம்பு போட்டுட்டாப்ல என நினைக்கக் கூடாது. அவர்கள் ஒழுங்காக தின்றிருந்தால் உடல் பெருத்திருக்காது. அவர்கள் செய்ய வேண்டியது உணவைக் குறைப்பதோ உடற்பயிற்சி நிலையம் போவதோ அல்ல. வாழ்க்கையை ஒழுங்குக்குள் கொண்டு வருவதே அவர்களுக்குத் தேவை.

ஆனால் உடற்பயிற்சியின் நோக்கம் எடையைக் குறைப்பது அல்ல. மோசமான ஆரோக்கியமுள்ளோருக்கு ஒரு பிரச்சினை உடலில் போதுமான அளவுக்கு தசைகள் இல்லாததும், அதற்குப் பதிலாக கொழுப்பு அதிகமான இடத்தைப் பிடிப்பதுமே. நம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்துவிட்டு நாம் முக்கியமாக செய்ய வேண்டியது தசைகளை வளர்ப்பது. தசைகளின் அளவு உடலில் கூடும் போது வளர்சிதை மாற்றம் வேகமாகி இளமை நீடிக்கும், நோய்கள் குறையும், ஆயுள் கூடும். இதற்காகவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

12) அதிகமாக மனதுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஓய்வாக வைத்திருப்பதும், அமைதியையும் மகிழ்ச்சியையும் நாடுவதும் ஆரோக்கியத்துக்கு அவசியம் என்கிறார்கள். ஏனென்றால் நாம் அதிகமாக பதற்றம் கொண்டு நிம்மதி இழந்தால் நமது குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகள் இறந்துவிடும் என்கிறார்கள். இதில் ஒரு நல்ல விசயம் என்னவெனில் இந்த நுண்ணுயிர்களை வளமாக நாம் வைத்திருந்தால் பிரச்சினைகளை கூலாக எதிர்கொள்ளும் ஆற்றல் நம் மனதுக்கு வந்துவிடும், ஏனெனில் நமது குடலே நமது இரண்டாவது மூளையே, நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களே நம் மூளை மற்றும் நரம்பணுக்களின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கின்றன.

இதையெல்லாம் செய்தாலே நமது பெரும்பாலான உடற் கோளாறுகள் தாமாக சரியாகி விடும் என நினைக்கிறேன். நாம் பொதுவிடத்திலோ உறவினர் இடையிலோ உடற்பருமன் கொண்டோரைப் பார்த்தால் இரக்கப்படாமல், உடற்கேலி பண்ணாமல் அவர்கள் அதிக உணவினால் அல்ல மோசமான உணவுகளாலும், சரியாக நேரத்துக்கு உணவருந்தாததாலும், தூங்காததாலுமே இப்படி இருக்கிறார்கள் என யோசிக்க வேண்டும். அதே போல கோட்டோவியம் போலத் திரிபவர்களைக் கண்டாலும் அவர்களுக்குள் உள்ளுக்குள் ஆயிரம் ஓட்டை உடைசல் இருக்கும் எனப் புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் என்பது தோற்றம் அல்ல. நம்முடல் எடை அதிகரிக்கும் போதும் நாம் எப்படி அதைக் குறைக்கலாம் என்றல்லாமல் நம் உணவுப்பழக்க, அன்றாட கால ஒழுங்கை மீட்பது எப்படி என முழுமை வாழ்வியல் சார்ந்து யோசிக்க வேண்டும்.