பொன்னம்பலத்தின்  போஸ்ட்மார்ட்டெம்/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

 

R3  காவல் நிலையம்,

அசோக் நகர்  

புதிதாய் இன்ஸ்பெக்டர்  பொறுப்பேற்றிருக்கும்  

ரமேஷ் பாபு, அவருடைய காவல் நிலைய விசாரணைக்கு வந்த பிரபல தொழில் அதிபர் பொன்னம்பலத்தின் 

மர்ம முறை மரண   வழக்கை,    தன் திறமைக்குச்  சவாலாய்   எதிர் கொண்டார். 

சாதாரண தொண்டை-நோய் தொற்றுக்காக  அனுமதிக்கப் பட்டிருந்தவருக்கு ஏற்பட்ட திடீர் மரணத்தால்   அந்த பிரபல தனியார் மருத்துவ மனையில்  அவருக்கு அளித்த  

சிகிச்சை முறையில் திருப்தி  கொள்ளாது   அவர் 

இறப்பிற்குச் சரியான  காரணம் தெரியும் வரை  பாடியை’  பெற்றுக் கொள்ள மறுக்கும் அவரின் மகன் சதீஷ் ,  மருமகள் மேகலா  மற்றும்   பங்காளிகள் ஒரு  புறம் ….

பொன்னம்பலம்  மாநில ஆளுங்-கட்சிக்கு மிக  நெருக்கமானவர் என்பதால் வழக்கை உடனே  விசாரித்து  முடிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கும்  உயர் அதிகாரி மறு புறம் …….

இதற்கிடையில் இச் செய்திக்கு  சுவை  சேர்த்து பரபரப்பாய்  மக்களுக்கு  வெளியிட  

மருத்துவ மனை நுழை வாயிலில்   கேள்விக் கணைகளுடனும்    கேமிராவுடனும்  குழுமியிருக்கும் பத்திரிகை/ ஊடக  நண்பர்கள்….இவர்கள் …

பின்னணி என்ன ?

2

சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு …

தொண்டை நோய்  தொற்றுக்குத்  தான் எடுத்துக்  கொண்ட மருத்துவம் (self medication) பலனளிக்காமல் போகவே   தன் 

குடும்ப டாக்டர் தன்வந்த்ரி …

எம்.பி.பி.எஸ். ஸை செக் அப்பிக்கிற்கு தன்  வீட்டுக்கே   வரவழைத்திருந்தார் பொன்னம்பலம் ….

“நாக்கை  நீட்டுங்க”

 பொன்னம்பலம்   நாக்கை நீட்ட… 

“ம்ம்ம் ….கொஞ்சம் இருமுங்க”

என்றார் டாக்டர் 

சற்று இருமிக்  காட்டினார் பொன்னம்பலம்  

“எனக்கு தெரிஞ்சு   உங்களுக்கு கெட்ட பழக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை இருந்தாலும்…..உறுதிப் படுத்திக்க கேக்கிறேன் …நீங்க  ஸ்மோக் பண்ணுவிங்களா ?” 

“இல்லை..”

” இதுக்கு  முன்னே  எப்பவாவது? அதாவது  உங்க 

காலேஜ் நாட்கள்ள பிரண்ட்ஸோட  அப்படி இப்படின்னு   ?

“எப்பவும்  கிடையாது….டாக்டர்… எனக்கு அந்த வாடையே ஆகாது”

“கூல் டிரிங்க்ஸ்   … ஐஸ் வாட்டர் ஐஸ் க்ரீம் இதுகள அடிக்கடி  விரும்பி   சாப்பிடுவீங்களா ?”

” இது நியாயமான கேள்வி …அதெல்லாம் ஒரு காலம் ….  என்  வாலிப  வயசு….. எனக்கு  ஐஸ் கிரீம்னா ரொம்ப பிடிக்கும் …ரெண்டு கப் ஐஸ் கிரீம்  வாங்கிக் குடுத்துட்டு சொத்தையே எழுதி வாங்கிடலாம்னு என் ஒயிப் கூட  விளையாட்டா   சொல்லுவா …அந்த அளவுக்கு உசிரு …கோடை, குளிருன்னு சீசன் பேதம் பாக்காம எப்போ வேண்ணா சாப்பிடுவேன்.. ..பொழுது போகலேன்னா ‘மாலு’ க்கு காரை ஓட்டி கிட்டு போய்   புதுப் புது ‘பிளேவரா’  தேடிப் பிடிச்சு  டேஸ்ட் பண்ணுவேன்  …

ஆனா சமீபத்துல  என் ஓய்ப் இறந்து போய், என்னோட ஹெல்த் கேர் முழுசும்  என் மருமக மேகலா   கண்ட்ரோலுக்கு  வந்ததுக்க ப்புறம்  அதெல்லாம்   கட்டாயிடிச்சி..

மேகலாவுக்குத்தான்  என் ஹெல்த் மேல எவ்வளவு அக்கரை?  நேரத்துக்கு சாப்பாடு, நேரத்துக்கு சுகர், பீ பி மாத்திரை குடுக்கறது …’ஆர்கானிக் டயட்’ .அப்படி இப்படின்னு அவளோட 

சர்வீசை  பாராட்டிக்கிட்டே  போகலாம் ….  ஒரு ‘டிபிக்கல்’ நர்ஸை போலன்னா  என்னை கவனிச்சுக்குறா ..?

‘கோல்ட் ஐட்டம்ஸ்’  ஒத்துக்காதுன்னு அதுகளை  என்  கண்லயே காட்ட மாட்டா ..இதுல நான் அடிக்கடி  எங்கே .சாப்பிடறது ?”  

“சோ….. அவங்க  உங்கள  கண்ட்ரோல் பண்ணலேன்னா … நீங்க உங்க இஷ்டப் படி  சாப்பிடுவீங்க அப்படித்தானே  ..?”

“அப்படி நேரிடையா  ஒத்துக்க  முடியாது ..இருந்தாலும் மனசுல சபலம் இல்லேன்னு  மறுக்கவும்  முடியாது ..

உண்மையைச் சொன்னா சாப்பாட்டு  விஷயத்துல எனக்கு ‘ஸெல்ப் கண்ட்ரோல்’ ரொம்பக்  கம்மி..   மத்தவங்க என்னை  கண்ட்ரோல் பண்ணினாலும் எனக்கு கொஞ்சம்கூட  பிடிக்காது “

என்று தன்னைப் பற்றி டாக்டருக்கு விரிவாய்  தெளிவு படுத்தினார் பொன்னம்பலம் ! சொல்லும்போது முகத் தோற்றம்  மிகவும் சீரியசா இருந்தது.

“சாரி சார் …நான் 

யதார்த்தமாத்தான் கேட்டேன்”   

என்று பொன்னம்பலத்தின் நீண்ட  சொற்பொழிவை நிறுத்தி வைத்து  தன் பரிசோதனையை மேலும்  தொடர்ந்தார் டாக்டர்

”  மூச்சை நல்லா இழுத்து விடுங்க …”

அப்படியே செய்தார்.

பொன்னம்பலத்தின் தொண்டை,   நுரையீரல் இவைகளை   நன்கு பரிசோதித்து முடித்த டாக்டர் 

“உங்களுக்கு தொண்டையின்   உணவுப் பாதை(food path) யில கடும்   நோய்-தொற்று வந்து, உணவுப்  பாதை ரொம்பவே  பாதிக்கப் பட்டுருக்கு 

அதனால ..”

“அதனால … ..?”

”  ‘சிறப்’ பும் சில  மாத்திரைங்களும் எழுதித்    தரேன் .. ஒரு மாசம் தொடர்ந்து  எடுத்து கிட்டு  வாங்க… சரியாயிடும் …. ஆனா  .. இந்த ஒரு மாசமும்  கோல்ட் ஐட்டம்ஸ நீங்க தொடவே கூடாது 

அப்பத்தான் மருந்து வேலை செய்யும் ..பச்சை தண்ணி குடிக்கக்கூடாது…. மருமக கிட்டே   கேட்டு எந் நேரமும்   வெந்நீரே  குடிங்க..வீட்டுல   …உங்களுக்குன்னு  பிரத்தியேகமா  பிளாஸ்கில எப்போவும்  வெந்நீர் போட்டு வைக்க சொல்லுங்க….ஓகே ?”

“ஒகே ….இதை வாங்கிங்கங்க  “

என்று சொல்லி இரண்டு ஐநூறு  ரூபாயய் நோட்டுக்களை  டாக்டரிடம் நீட்டினார் 

3

‘சிட்டி’  யை விட்டு சற்று தள்ளி அமைந்த அந்த  பங்களாவிற்கு  

இரண்டு கான்ஸ்டபிள்களுடன்  ரமேஷ் பாபு ஜீப்பில் வந்து  இறங்கினார்.  

இன்ஸ்பெக்டர் ஜீப்பை பார்த்தவுடன் மேகலா 

“குட் மாணிங் இன்ஸ்பெக்டர் ..  ..மாமாவோட   போஸ்ட்மார்ட்டம் ரிப்போட் தயாரா ?  அவர் இறப்புக்கான  சரியான காரணம் தெரிஞ்சதா ?”

என்று மெல்லிய குரலில் கேட்டாள் .

பெற்ற தந்தையைப்  போல  தன் மீது பாசம்  காட்டிய  பொன்னம்பலத்தின் பிரிவால்  அழுதழுது பாவம் அவளது கண்கள்   உலர்ந்து முகம் வாடி இருந்தது  .

“போஸ்ட் மார்ட்டம்  ரிபோர்ட் கெடைச்சுடுச்சு.

இறந்த அன்னைக்கு…..  அதாவது முந்தா நாள் ராத்திரி   அவர் டின்னர் முடிச்சு  தண்ணி குடிச்ச கொஞ்ச நேரத்துல தொண்டையின்    உணவுப்  பாதை    ‘பிளட் வெஸ்ஸல்ஸ்’ சிறுகச்  சிறுக  அறுபட்டு இரத்த ஓட்டம் தடை பட்டு  இதய துடிப்பு  நின்னு  உயிர் பிரிஞ்சுருக்குன்னு ரிப்போட் சொல்லுது ..  

‘பாடி’  இன்னும் கொஞ்ச நேரத்துல  வந்து சேர்ந்துடும்  .. 

தயவு செஞ்சு நீங்களோ உங்க ஹஸ்பண்டோ பிரச்னை   பண்ணாம அதை ஏத்து கிட்டு  மேல   ஆக வேண்டியத  பாருங்க….

 …அப்பத்தான் நாங்க கேஸை  ‘பர்தரா’  இன்வெஸ்டிகேட் பண்ணி   இது எப்படி  நடந்ததுன்னு  கண்டு பிடிச்சு உங்களுக்கும்  எங்க  மேலிடத்துக்கும்  சொல்ல  முடியும் ….”

இன்ஸ்பெக்டர் வார்த்தைகளில் வேகம்  விவேகம் இரண்டும் கலந்திருந்தது. 

“அப்போ  உங்களை பொறுத்தவரை  இது இயற்கையான சாவு  இல்லே …அப்படித்தானே ?”

“இப்போ  உறுதியா சொல்ல முடியாது…..அது உறுதியாகறதுக்கு    

 இது விஷயமா   உங்களையும் தேவைப் பட்டா   உங்க ஹஸ் பண்டையும் ‘பார்மலா’ என்கொயர் பண்ண வேண்டியிருக்கு…  தயவு செஞ்சு கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணுங்க  …  … “

“ஓகே  இன்ஸ்பெக்டர் ..எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் ..”

என்றாள் மேகலா  கண்களைத்  துடைத்துக் கொண்டே.  .

4

“உங்க கணவருக்கும் உங்க மாமா விற்கும் நடுவிலே உறவு  எப்படி ?”

இக் கேள்விக்கு மவுனம் சாதித்தாள்.

” புரியல ?  அவங்க அப்பா-பிள்ளை அந்தரங்க  உறவு பத்தி கேக்கறேன்  ..

மறுபடியும் மவுனம் தான் பதிலாய் வந்தது  

“சரி …நான் நேரிடையாகவே விஷயத்துக்கு வர்றேன்  ..

உங்க மாமா இறந்த அன்னிக்கோ அதுக்கு முன்போ  அவங்க ரெண்டு பேருக்கும்  இடையே ஏதாவது வாக்கு வாதம் நடந்துச்சா ?” 

“சொல்றேன் இன்ஸ்பெக்டர்..

 …ஆனா அதுக்கு முன்னே   எங்க  பேமிலியைப் பத்தி சொல்றேன்  …

என் மாவாவோட கோடிக்கணக்கான சொத்துக்கு  

ஒரே சட்ட,  இரத்த வாரிசு என் ஹஸ்பண்ட் தான்.

என் ஹஸ் பண்ட்  ஒரு சுகவாசி…..  ஜாலியாக பொழுதைக் கழிக்க நினைப்பவர் … மாமா வோட பிசினஸ்சிலியோ இந்த வீட்டு நிர்வாகத்திலியோ கொஞ்சமும்   ஆர்வம் இல்லாதவர்.

பொறுப்பில்லாம ஜாலியா பொழுதைக் கழிச்சு கிட்டிருந்த  இருந்த அவரை  மாமா தன்னுடைய  பிசினஸ்ஸை கத்துக்கிட்டு முன்னுக்கு  வரும்படி  எத்தனையோ முறை  வற்புறுத்தி இருக்கிறார்…ஆனா  அதை கொஞ்சம் கூட காதிலேயே போட்டுக்க மாட்டார்   என் ஹஸ்பண்ட்..

 மாமாகிட்டே ‘டைரெக்ட்’  டா பணம் கேட்டா ஆயிரம் குறுக்கு கேள்வி கேப்பாருன்னு அவர்  பேரைச் உபயோகிச்சு  ஆபிஸ் மேனேஜரிடம் தனக்கு வேணும் போதெல்லாம்  பணம்  வாங்கிப்பார் … ‘பிரண்ட்ஸ்’ சோட ஊர் சுத்துவார் …டிரிங்க்ஸ் பண்ணுவார் .. பணத்தை தண்ணியா  செலவு பண்ணுவார்.”

“அதைப் பத்தி நீங்க   கேட்டதில்லையா ?”

“மாமா கேட்டாலே பலன் இருக்காது ….இதில நான் கேட்டா…?  …அதனால நான் இன்னி வரைக்கும்  கேட்டதே இல்லை”

“உங்க அத்தை ?”

“என் அத்தையும்  புள்ள   மேல வச்சிருந்த கண் 

மூடித்தனமான  பாசத்தால கண்டிச்சு கேக்க மாட்டாங்க ..மேலும்  மாமா  அவரைக்   கண்டிக்கும்போதெல்லாம் அவர் வாயை அடக்கி விட்டு  என் ஹஸ் பண்டுக்கே சப்போர்ட் பண்ணிப் பேசுவார்.

மாமா வைப் பொறுத்தவரை அவருக்கு பிறகு  அவரோட தொழில் வாரிசாக  தன் மகன் வரணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்….கனவு கண்டார் ..

ரீசென்ட்டா என் அத்தை  இறந்துட்டாங்க  .. இந்த சூழ் நிலையில என் ஹஸ்பண்டுக்கு,  தான் செய்யற தவறுகளுக்கு  நியாயம் கற்பிக்க துணையா ஒருத்தரும் இல்லே….இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி    மாமா,   அவர்  இறப்பதற்கு முந்திய நாள்  ராத்திரி  மகனோட  பொறுப்பில்லா நடவடிக்கை பத்தி அவரிடம் சாதாரணமா பேச்சை எடுக்க,  அது விஸ்வரூபம் எடுத்து ரெண்டு பேருக்கும் நடுவுல மிகக் கடும்   வாக்கு வாததில  முடிஞ்சுது …

மாமா முடிவாக  நீ உன்னோட பழக்க வழக்கங்களை மாத்திக்கலென்னா மேகலாவின்  எதிர்கால வாழ்க்கைக்கு மட்டும் கொஞ்சம் மிச்சம் வச்சுட்டு பாக்கியெல்லாத்தையும் அதாவது  இந்த வீடு,  பேக்டரி  பூராவையும்  கோவிலுக்கு உயில்  எழுதி வச்சுடுவேன்…உன்னை திருத்த எனக்கு வேற வழி தெரியல ….என்ன சொல்றேன்னு  சத்தம் போட்டு மிரட்டி னார்.

இந்த வார்த்தைகள் என்  ஹஸ்பண்ட் மனசை டைரெக்ட்டா தைக்கவே 

“அதையும் பாத்திடலாம்”

அப்படின்னு சத்தம் முகம் சிவக்க  டேபிள் மேலே தன் கைக்கு பக்கத்தில் 

இருந்த பிளாஸ்கை கோபமா  தட்டி விட்டுட்டு  ரூமை விட்டு வெளியே வந்தார்…”

“அதற்கு பின் என்ன நடந்தது ?”

“நான் ..  மாமா ரூமுக்கு போய்  பிளாஸ்க எடுத்து டேபிள் மேலே நிமித்தி வச்சேன்…அப்போ  மாமா குடிக்க தண்ணி கேட்டார் .  நான் வழக்கம் போல .பிளாஸ்கிலே   இருந்து வெந்நீர் எடுத்து மாமாவுக்கு  கொடுத்தேன் “

என்று அன்று நடந்ததை ஒரு திரைக் கதை போல் அவள் சொல்லிக்  கொண்டிருக்கும்போது பொன்னம்பலத்து ‘பாடி’ அங்கே கொண்டு வரப்பட்டது ..

“சரிம்மா ..மிச்ச விசாரணையை  நாளைக்கு வச்சுக்கிறேன் ..எனக்கு கோர்ட்ல ஜட்ஜ் முன்னால ஒரு கேஸ்  அப்பியரென்ஸ்  இருக்கு.. ம்ம்ம்…இதோ உங்க மாமாவோட  ‘பாடி’ வந்தாச்சு …நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் …என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினார் ..

இன்ஸ்பெக்டர் வேண்டுகோளுக்கு இணங்க இறுதிச் சடங்கை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மகனும் மருமகளும் முடித்தனர்.

6

இன்ஸ்பெக்டர் கோர்ட் வேலையை முடித்து விட்டு   வீடு திரும்பிய போது    நன்கு இருட்டி விட்டது…லேசான தூறல்  வேறு …

 ஒரு ஷாம்பூ-குளியலைப் போட்டு விட்டு செல்போனில் ‘கூகிள் சர்ச்’ பண்ணிக்கொண்டு  கொண்டிருந்தவர்க்கு சட்டென்று  பொன்னம்பலத்தின் இறப்பின் காரணம்  பற்றி மூளையில்  சிறு  பொறி தட்டியதுதான் தாமதம் ..எதையோ கண்டு பிடித்து விட்டவர் போல் 

அது   லேட் நைட்டுன்னும்  பாக்காமல்   ஜீப்பில் ஏறி  பொன்னம்பலம் வீட்டை அடைந்தார்..

மேகலா,    நாளை வருவதாகச் சொன்னவர்  இன்னைக்கே மறுபடியும்  எதுக்கு வருகிறார்  என்று யோசித்து 

” இன்ஸ்பெக்டர் …..!.தப்பா நெனைச்சுக்கலேன்னா உங்க என்குயரி செஷனை நாளைக்கே  வச்சுக்கோங்க….எனக்கு ரொம்ப அசதியா இருக்கு … பிளீஸ் ..”

“சாரி மேடம்…நான் இப்போ அதுக்கு வரல்லே ..ஒருநிமிஷம்  மிஸ்டர் பொன்னம்பலம் உபயோகிச்ச பிளாஸ்கை  எடுத்துட்டு வரிங்களா ?

என்றார் .

பிளாஸ்க் வந்தது .

அதை லேசாக அசைத்துப்பார்த்து விட்டு அதை டேபிள் மீது கவிழ்த்தார் … ..அதில் பொன்னம்பலம் குடித்து விட்டு மிச்சம் இருக்கும் வெந்நீருடன் பொடியாய்  உடைந்து கலந்து இருந்த சிறு சிறு  ‘தெர்மோஸ்டாட்’ துகள்கள் கீழே சிந்தின.

“மேடம்….உங்க மாமாவோட இறப்புக்கு தகுந்த காரணம் கண்டு பிடிச்சிட்டேன்…அது  கொலை இல்லை .ஒரு சின்ன விபத்து . . .”

என்று சொல்லி ஒரு வெற்றிப் பெருமிதத்துடன்  மேகலாவைப்  பார்த்தார் இன்ஸ்பெக்டர்.