
மூலம் – கலில் ஜிப்ரான்
மொழியாக்கம் – தங்கேஸ்
கடலில் கலப்பதற்கும் முன்பு
அந்த நதி
பயத்தில் நடுங்கியதாக
சொல்லப்பட்டது
தான் பயணித்து வந்த பாதையை
அது ஒரு முறை மீண்டும்
திரும்பி பார்த்தது
அதோ தான் துள்ளிக்குதித்து சரிந்த
மலைச்சிகரங்கள்
ஓயாது வீசிய காற்றிடையே கடந்து
வந்த அடர்வனாந்தரங்கள்
வனாந்தரங்களில் மடியில்
அங்காங்கே மலைக்கிராமங்கள்…
ஆனால் இப்போதோ
அதன் கண்களுக்கு முன்னால்
காட்சியளிக்கிறது
கங்கு கரையற்ற கடல்
இனி மகா கடலுக்குள்
நுழைய வேண்டும்
கடலுக்குள் நதி நுழைவதென்பது
நிரந்தரமாய் காணாமல் போவது
என்று அர்த்தம்
ஆனாலும் வேறு வழி
தெரியவில்லை
நதியின் நியதி கடலில்
கலப்பது தானே
வந்த பாதை வழியே ஒரு போதும்
அது திரும்பி செல்லாது
நதி என்றில்லை யாவருக்கும்
அது தான் பொது
வந்த வழியே திரும்பி
செல்வதென்பது
ஒரு போதும் நமது
இருப்பில் இல்லை
இதோ இந்த நொடி இந்த நதி
கடலில் கலக்கும்
அசாதாரண முடிவை எடுக்கிறது
இல்லையென்றால் அச்சம்
அதை தின்றே தீர்த்து விடும்
கடலில் கலந்த நொடி தான்
இந்த நதிக்கு தெரியவரும்
தான் கடலில் கலப்பது
காணாமல் போவதற்கல்ல
கடலாவதற்கு என்று….
