வணக்கம் நண்பர்களே!/ஜெய பாஸ்கரன்

சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள், கடந்த 15 -5 -2023 ஆம் நாள் காலை
அலைபேசியில் என்னுடன் உரையாடிய போது,

‘அண்ணா இன்று பெரம்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்ற எனக்கு மிகவும் வேண்டிய பேராசிரியர் ஒருவரைப் போய்ப் பார்க்கப் போகிறேன்!’

என்று சற்று உடைந்த குரலில் சொன்னார்.

‘உனக்கு வேண்டியவர் என்றால் அவர் எனக்கும் வேண்டியவர்தான். நானும் உன்னுடன் வருகிறேனே!’ என்றேன்.

‘ஓ…. அப்படியா? வாங்கண்ணா.. வாங்கண்ணா!’ என்று மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் அவர் என்னை அழைத்தபோது ஏனோ அவரது குரல் மிகவும் கம்மிப் போயிருந்தது!

அன்று மாலை அவருடன் இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய உடனேயே, ‘மருத்துவமனையில் இருப்பது யாருப்பா? இயல்பாகக் கேட்டேன்.

ஆனால் அவர் இயல்பாகவோ தெளிவாகவோ உறுதியாகவோ இல்லை. கண்ணீர் முந்திக் கொள்ளாத படிக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

‘அண்ணா…. அவங்க பேரு பானுமதி. ‘ஆவடி மகாலட்சுமி கலை அறிவியல் கல்லூரி’ யில் தமிழ்ப் பேராசிரியர். அதே கல்லூரியில பேராசிரியரா இருக்கிற முனைவர் இஸ்பா மூலமா எனக்கு அறிமுகம் ஆனவங்க.. இன்னைக்கி உங்க மூலமாத்தான் அவங்களுக்கு ஒரு சின்ன மகிழ்ச்சியைத் தரப்போறேன்!’

‘என்னப்பா? என்ன மகிழ்ச்சி? என்னாச்சு அவங்களுக்கு?’

மேற்கொண்டு அவரால் பேசமுடியவில்லை.

பெரம்பூர் எஸ்.ஜி.மருத்துவமனைக்குள் நுழைகிறோம். தரைத் தளத்திலேயே ஓர் அறையில் கட்டிலில் உருக்குலைந்து படுத்திருக்கிறார், முனைவர் சு.பானுமதி.

அவருக்கு அருகில் நின்று அவருக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்துகொண்டிருக்கிறார், முனைவர் இஸ்பா. பானுமதியுடன் கல்லூரியில் பணியாற்றுகிற சக பேராசிரியர். அழுதழுது அவரது முகம் வீங்கிப் போயிருக்கிறது.

ராஜசேகரையும் என்னையும் பார்த்ததில் பானுமதிக்கு அப்படியொரு மகிழ்ச்சி!
‘ஐயா.. நீங்களே வந்துட்டீங்களே! ரொம்ப நாளா உங்களைத்தான் பார்க்கணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன்!’

பட படத்து எதையெதையோ பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் பானுமதி. அந்த அறையில் கல்லூரி மாணவியான அவரது மகளும் உறவுப் பெண்மணி ஒருவரும் துயரக் கலக்கத்தில் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது கைப்பையைத் திறந்து புத்தம் புதியதான, தயாரிக்கப்பட்ட சூடுகூட ஆறாத பத்து புத்தகங்களை வெளியில் எடுக்கிறார், ராஜசேகர்!

‘இந்தாங்க அண்ணா… இது பானுமதி எழுதிய புத்தகம். இந்த புத்தகத்தை இப்பவே இங்கயே நீங்க வெளியிடறீங்க.. இதை எழுதிய பானுமதியே வாங்கிக்கறாங்க!’

சொல்லி முடிப்பதற்குள் அழுகை பொங்கிக் கொண்டு வருகிறது அவருக்கு! நான் சற்றும் எதிர்பாராத வலிமிகுந்த தருணம் அது. நடுங்கும் கைகளால் நான் புத்தகத்தை வாங்கி மெதுவாக பானுமதியிடம் கொடுக்கிறேன். அவரது கண்கள் அகல விரிகின்றன. மகிழ்ச்சியில் அவரது உதடுகள் நடுங்குகின்றன.

‘அதுக்குள்ள தயாரிச்சிட்டீங்களா? அதுக்குள்ள தயாரிச்சிட்டீங்களா? ரொம்ப நல்லா வந்திருக்கு! அழகா இருக்கு!’

தலைப் பிரசவத்தில் பிறந்த தனது குழந்தையை முகர்ந்து மார்பில் ஏந்துகிற தாய்போல, அட்டையைத் தடவித் தடவி, புத்தகத்தை தனது மெலிந்த நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, முகம் முழுவதும் படர்ந்த புன்னகையோடு எங்களைப் பார்த்துக் கண் கலங்குகிறார், பானுமதி!

‘அம்மா .. நீங்க குணமடைஞ்சி நல்லபடியா வீட்டுக்கு வாங்க! இந்த நூலுக்கு மறுபடியும் பெரிய அளவுல ஒரு வெளியீட்டு விழா நடத்துவோம்! நாங்க முன்னெடுத்து எல்லா வேலையும் பார்த்துக்கறோம்.. எல்லாரையும் வரவழைவைப்போம்!’

சற்று அழுத்தமான குரலில் தெளிவாகச் சொல்கிறேன் நான்!

‘அப்படியா ஐயா… பத்து நாள்ள நான் வந்துடுவேன்.. இவ்வளவுநாளா நான்தான் உங்கள் மிஸ் பண்ணிட்டேன்! இந்த புத்தகத்தை எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவுங்க போட்டோவைப் போட்டுக் காணிக்கை செஞ்சிருக்கு! எங்க அப்பா இல்லை.. எங்க அம்மா பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. நீங்க இங்க என்னைப் பார்க்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு!’

ஒரு குழந்தையைப் போல பேசத் தொடங்கிய அவருக்குக் குரல் உடைகிறது!

‘விடுங்கம்மா.. இப்ப வந்துட்டேன்ல!’ அவரது நெற்றியில் அழுத்தமாகத் கைவைத்து ஆறுதல் சொல்கிறேன்.

தான் எழுதிய அந்த நூலின் மூன்று படிகளை எடுத்து எனக்கும் ராஜசேகருக்கும், இஸ்பாவுக்கும் அவரவர் பெயரை எழுதி கையெழுத்திட்டு, மட்டுமீறிய ஒரு பெருமிதம் முகத்தில் பொங்க எங்களிடம் தருகிறார் பானுமதி!

இலக்கியத்துக்கும் எழுத்துக்கும்தான் எத்தனை வலிமை?

நாற்பத்து மூன்று வயதேயான முனைவர் பேராசிரியர் சு.பானுமதி தஞ்சாவூரைச் சேர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவடி மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

இலக்கியங்கள் மீது அவருக்கு அப்படியொரு ஈடுபாடு! தொல்லியல், கல்வெட்டுகள்,சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் குறித்தெல்லாம் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு ஆய்வரங்க ஏடுகளில் எழுதித் தனது இலக்கியப் பேராற்றலை வெளிப்படுத்திய பெருமை முனைவர் பானுமதிக்கு உண்டு!

படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவரிடம், மனத்துக்குள் அழுதபடி நான் அளித்த/ வெளியிட்ட இந்த நூல்தான் அவரது முதல் நூல்!

‘இலக்கிய வளர்ச்சியில் கணையாழி இதழின் பங்களிப்பு’ (2000 -2006)

என்பது இந்நூலின் தலைப்பு! இது முனைவர் பட்டத்திற்காக அவர் ஆய்ந்தெழுதிய, அவருக்கு முனைவர் பட்டம் பெற்றுத் தந்த ஆய்வேடு.

ஆய்வு நெறியாளராக இருந்து இந்த அவரது ஆய்வைக் கரைசேர்த்திருப்பவர், பல நூற்றுக்கணக்கான மாணவிகளுக்குக் கற்பித்து அவர்களைக் கரைசேர்த்த பெருமைக்குரிய கல்வியாளர், அம்மா முனைவர் தி.கமலி அவர்கள்.

தம்பி ராஜசேகர் தமது, ‘கெவின் கார்க்கி பதிப்பகம்’ வாயிலாக தம்பி அ.சுபாஷ் அவர்களின் துணையோடு இந்நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்!

மருத்துவப் படுக்கையில் நொடித்திருக்கும் முனைவர் பானுமதிக்கு ஒரு சிறு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்கிற நோக்கில் அவசர அவசரமாக இரவு பகலாக ஓரிரு நாள்களில் தயாரிக்கப்பட்ட நூல்! அதே வேளையில் மிகவும் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட நூல்!

அந்த நூலும் அதைப் படைத்த ஆசிரியரின் தன்னம்பிக்கையும், அதன் உள்ளடக்கமும், அது என்னால் வெளியிடப்பட்ட அந்த மருத்துவமனைச் சூழலும் சேர்ந்து, என் முன் பல புத்தகங்களாக விரிந்தன என்றால், அது மிகையல்ல!

அன்று மாலை எடையற்ற ஒருவனாக அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்த நான், ஒரு பெரும் பாறாங்கல்லைப் போல கனக்கும் மனத்துடன் அங்கிருந்து வெளியே வந்தேன்.

‘ஏதாவது சாப்பிடுகிறீர்களா அண்ணா?’ என்கிறார் ராஜசேகர். ‘வேண்டாம் ராஜா…. இந்த நமது சந்திப்பு உன்னுடன் சேர்ந்து நான் உண்ண முடியாத சந்திப்பாகி விட்டது!’ தெளிவற்ற குரலில் விடை சொல்கிறேன் நான்.

இரு சக்கர வாகனத்தைச் செலுத்தியபடியே ராஜசேகர் என்னிடம் சொல்கிறார்,

‘எண்பது வயதைக் கடந்த, காஞ்சிபுரம் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற தெருக்கூத்துக் கலைஞரான எனது அப்பாவின் அனுபவங்களை அவரிடமே கேட்டுத் தொகுத்து ஒரு நூலாகத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத வகையில் என் அப்பாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. பிறகு அவசர அவசரமாக அந்த நூலை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் என் அப்பாவிடம் கொடுத்தேன். அந்த நூலைப் பார்த்து அதைத் தொட்டுத் தழுவிய நொடியில் இருந்து அவரது உடல் நிலை வேக வேகமாக நலம் பெறத் தொடங்கிவிட்டது. பிறகு காஞ்சிபுரத்தில் மேடையில் நடுநாயகமாக அவரை அமரவைத்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்க வைத்து அந்த நூலை வெளியிட்டோம். நீங்களும் அந்த விழாவில் பங்கேற்றுப் பேசினீர்கள்.

அதுபோல இந்த நூல் பானுமதியை குணமாக்கும் என்று எனக்கொரு எதிர்பார்ப்பு அண்ணா!’

நம்பிக்கையோடு சொல்லிவிட்டு தனது வாகனத்தைச் செலுத்துகிறார், ராஜசேகர்!

ஒளி மங்கிய அந்த இருளில், மௌனமாக நான் என் கண்களைத் துடைத்துக் கொள்கிறேன்!