பிடி கவிதையை
ஆர் வத்ஸலா
பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது.
ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே இரண்டு கைகள். ஒரே ஒரு மூளை. போதாக்குறைக்கு அதற்குள் இப்பொழுதுதான் கவிதை தோன்றுகிறது.
அன்பான கணவரிடம் சொன்னாள். “கவிதை எங்கே ஓடிப் போய்விட போகிறது” என்றார்.
உண்மையில் அது ஓடித்தான் போகும் என்று சொன்னால் அவர் முகம் சுண்டி விடும் என்பதனால் அவள் மௌனமாக சிரித்தாள்.
