மாவிலைத் தோரணம்/பிரதீபன்

       

வாசலில் யாரோ மாவிலை பறிக்க

அனுமதி கேட்கிறார்கள்;

அனுமதிக்க முடியாது என்று

என் கணவர் மறுக்கிறார்;

இருவர் பேச்சும் முன் அறையில்

இருக்கும் என் காதில் விழுகிறது;

இன்று  நேற்றா

ஆதியிலிருந்தே இவர் இப்படித்தான்;

கொஞ்சம் மாவிலை பறித்தால்

இவரின் சொத்தா குறைந்துவிடும்., எச்சிற் கையால்

காக்கா விரட்ட மாட்டார்,

அவ்வளவு பரந்த மனசு;

ஜன்னல் வழியே

எட்டிப் பார்க்கிறேன்;

ஓ, இந்தப் பெண்ணா!

இவளை முன்பே நானறிவேன்;

சற்றே தள்ளி இவர்கள்

சின்னதாகப் புது வீடு

கட்டியிருக்கிறார்கள்,

நாளை கிருஹப்பிரவேசம்;

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை

என்பதுபோல்

அளவாகவே  அவர்கள்

கிருஹப்பிரவேசத்திற்கு

நெருங்கியவர்களை மட்டும்

அழைத்திருப்பார்கள்;

அண்டை அயலில்

எங்கள் வீடு தவிர

வேறு எங்கும் மாமரம் இல்லை;

பாவம், எங்கே போவார்கள்?

சற்றே பொறுக்கலாம் என்று

அமைதியாகிறேன்;

மதிய உணவு உண்டு முடித்து

இவர் உறங்கப் போய்விட்டார்;

இப்போதைக்கு 

எழுந்திருக்க மாட்டார்;

முற்றத்திற்கு வந்து

பதினொரு மாவிலைகளைப்

பறித்துக்கொள்கிறேன்;

கயிற்றில் கோத்துத்

தோரணமாகச் செய்துமுடிக்கிறேன்;

பைக்குள் வைத்துக்கொண்டு

புதுவீடு நோக்கி 

நடந்து வருகிறேன்;

நல்ல வேளை,

அந்தப் பெண் தன்

வாசலில் நிற்கிறாள்,

மாவிலைத் தோரணத்தைக்

கையில் கொடுத்து

விவரம்  சொல்கிறேன்;

முகமலர்ந்து அவள்

என் கையைப்

பற்றிக்கொள்கிறாள்;

கிருஹப்பிரவேசத்திற்கு

வருமாறு அழைக்கிறாள்;

இன்னொரு நாள் வருவேன்

என்று உறுதி சொல்கிறேன்;

திரும்பி

என் வீடு  நோக்கி

நடந்து  செல்கிறேன்;

சில்லெனும் பூங்காற்று

மெல்ல என் முகத்தை

வருடிச் செல்கிறது.