வீடு/அன்ன பூரணி

“அப்பா! அப்பா! நா வரைஞ்ச படம் எப்டிப்பா இருக்கு?” ஆறாவது படிக்கும் அஸ்வின், தகர டப்பா போன்ற ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் தன் அப்பா மகேஷிடம் கேட்டான்.

“ம்.. தொந்தரவு பண்ணாத.. வேலையா இருக்கேன்ல..” என்று சிடுசிடுத்தான் மகேஷ். அஸ்வினின் முகம் சூம்பி விட்டது.

மகனின் சோர்வை உணர்ந்த அம்மா லட்சுமி,

“எங்க காட்டு!” என்று கேட்டுக் கொண்டே மகனிடமிருந்து அவன் வரைந்த படத்தை வாங்கினாள்.

“ம்ச்.. சும்மா இரும்மா..” என்று மகன் தன் அன்னையிடம் சிடுசிடுத்தான்.

ஆனால் மகன் வரைந்த படத்தைத் தன் கையால் தொட்டுப் பார்த்து மகிழ்ந்த லட்சுமி,

“சூப்பரா இருக்கு கண்ணு.. என்ன படம் வரைஞ்சிருக்க?” என்று ஆவலாகக் கேட்டாள்.

“ம்மா.. சும்மா இருன்னு சொல்றேன்ல்ல..” என்ற அஸ்வின் தன் அன்னையின் கையிலிருந்து படத்தை பிடுங்க முயன்றான்.

“கோச்சுக்காம சொல்லுடா ராஜா..” என்று கொஞ்சினாள் அம்மா.

“ம்மா.. நா சொன்னா மட்டும் உனக்கு புரியுமா? இல்ல பாக்கதான் முடியுமா?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மகன்.

“இது என்ன? பூவா? இல்ல மரம் வரைஞ்சிருக்கியா?” அம்மா விடாமல் கேட்டாள்.

“அதெல்லாம் எதுமில்ல.. என் பள்ளிக்கூடத்தில சொல்லிக் குடுத்த சயின்ஸ் பாடம்..” என்று முணுமுணுத்தான் அஸ்வின்.

“பொய் சொல்லாத.. இது உன் பள்ளிக்கூடத்தில சொல்லி குடுத்த சயின்ஸ் பாடம் இல்லன்னு எனக்கு தெரியும்..” என்றாள் லட்சுமி சிரித்துக் கொண்டே.

“அதெப்டி உனக்கு தெரியும்.. உன்னாலதான் பாக்க முடியாதே..” சந்தேகமாகக் கேட்டான் மகன்.

“இந்த படம் ஈரமா இருக்கு.. பள்ளிக்கூட பாடம்லாம் நீ பென்சில் வெச்சிதான வரைவ.. அம்மாவுக்கு கண்ணு தான் தெரியாது.. ஆனா தொட்டு உணர முடியும்ல..” என்று லட்சுமி சொல்ல மகன் மனம் நெகிழ்ந்தது.

“இது வீடு மா.. வீடு வரைஞ்சிருக்கேன்..” என்று மெல்லிய குரலில் கூறினான்.

“ரொம்ப நல்லா இருக்குடா செல்லம்.. பெரிய தளம் போட்ட வீடுதான..” என்று முகம் மலரக் கேட்ட அம்மாவிடம்,

“சின்ன கூர வீடுதான் ம்மா.. நம்ம கிராமத்தில இருக்க பாட்டி வீடு மாதிரி.. ஆனா கரண்ட் இருக்கு.. வீட்டு முன்னால நம்ம ப்ரூனோ நாய்குட்டி.. வீட்ட சுத்தியும் பச்சப் பசேல்னு தோட்டம்..” என்று தான் வரைந்த படத்தின் விவரங்களை மகன் சொல்லிக் கொண்டே போனான்.

“நல்லாருக்குடா.. சீக்கிரமாவே நம்ம ஒரு வீடு வாங்குவோம்..” என்றாள் லட்சுமி.

“ம்க்கும்.. இங்க சோத்துக்கே லாட்டரியாம்.. இதுல வீடு ஒண்ணுதான் கொறச்சல்..” என்று எரிந்து விழுந்தான் மகேஷ்.

“கோவப்படாதீங்க.. புள்ள தன் மனசில இருக்கற ஆசையைதான சொல்றான்..” என்று மகனுக்காக பரிந்து பேசினாள் லட்சுமி.

“சரி.. சரி.. லொட லொடன்னு பேசறத நிப்பாட்டிட்டு போய்ப் படுங்க.. காலையில டூட்டிக்கு போகணும்..” என்ற மகேஷ் தன் சைக்கிளை பத்திரமாக பூட்டி வைத்துவிட்டு வந்து தோளில் கிடந்த துண்டை தரையில் தூசி தட்டுவதைப் போல தட்டிவிட்டுப் படுத்தான்.

“நாம இன்னும் எவ்ளோ காலம்மா இந்த ஒத்த ரூம் இருக்க குடித்தன வீட்டுலயே இருப்போம்? எப்பம்மா எல்லாரையும் போல நல்லதா தனி வீட்டுல வாழுவோம்..” என்று ஏக்கத்துடன் கேட்ட மகனை தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்ட லட்சுமி,

“கவலப்படாதடா.. சீக்கிரமே நமக்கும் ஒரு நல்ல வழி பொறக்கும்.. அப்பாவுக்கு இந்த முறை பெரிய கான்ட்ராக்டர் வெளியூர் வேலை தரேன்னு சொல்லிருக்கார்.. அது கிடைச்சதுன்னா நம்ம கவலைல்லாம் தீர்ந்துடும்..” என்றபடியே மகனைப் படுக்க வைத்து தானும் படுத்தாள் லட்சுமி.

மகனும் தன் அன்னையின் பேச்சில் ஆறுதலடைந்து உறங்கத் தொடங்கினான்.

லட்சுமியின் கண்களில் ஔியில்லையே தவிர அவள் மனதில் ஔி மங்கவில்லை.

ஒரு நாள் அவளும் வீடு வாங்குவாள்.

♥♥♥♥♥

மாமனாரின் கண் பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருந்தேன்.. அப்போது சுற்றிலும் கண்ணில் பிளாஸ்த்ரியும் கருப்பு கண்ணாடியும் அணிந்தபடி நோயாளிகளைப் பார்த்ததும் இப்படி ஒரு கதை தோன்றியது.

2 Comments on “வீடு/அன்ன பூரணி”

    1. மிக மிக அருமை.
      சின்னச் சின்ன எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தான் கதைகளாக உருவாகின்றன.
      எழுதியவர் மிகவும் தன் சூழலை கவனிப்பவர் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.வாழ்த்துக்கள்.

Comments are closed.