ஈரம்/ஜெ.பாஸ்கரன்

.

அம்மா சொன்னதைக் கேட்காமல், ஏரியின் நடுவில் தில்லு முல்லு செய்து வீடு கட்டினான் பாண்டி. தகரக் கூரை, சுற்றிலும் தாழ்வாரம், நாலு பக்கம் தூண்கள் எனச் சுமாரான வீடுதான். இதற்கே நிறைய பேருக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது. ஆனாலும், அடுத்த அரசு வந்து இடித்துவிட்டாலும், நஷ்டம் அதிகமிருக்காது எனப் பாண்டி தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

அந்த வருடம் விடாது பெய்த மழையில் ஊரே வெள்ளத்தில் மிதந்தது. ஏரியில் வெள்ளம் போல் தண்ணீர் – ஊரே மிதக்கும்போது, பாண்டியின் சின்ன வீடு எம்மாத்திரம்? இரண்டு நாட்களாக கரண்ட் இல்லை, சாப்பாடு இல்லை. தாழ்வாரம் வரை மழை நீர் வந்துவிட்டது. எந்த நேரமும் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருந்தது.

மனிதனுக்கே ஒன்றுமில்லை, இதில் வளர்ப்பு நாய் வேறு. ஆனால் அது நன்றி மறவாதது. அமைதியாய் வீட்டைச் சுற்றி வந்தது. வெள்ளத்திலும் காவல்!

“ஏய் பாண்டி, வாடா. சீக்கிரம் வா. இந்த போட்டு ரெண்டு பேரத் தாங்கும்”.

சுற்றுமுற்றும் ஒரே தண்ணீர்க்காடு. மிரண்டு போயிருந்த பாண்டி, கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு, புது மனைவியை அவசரமாக இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

இரண்டு முறை போட்டையும், வீட்டையும் பார்த்துக் குரைத்தது மணி.

“இந்த நேரத்துல இது வேற தொல்லை” – போகிற போக்கில் மணியைக் காலால் எட்டி உதைத்துப் போனான் பாண்டி.

படகில் ஏறி, மனைவியுடன் பாதுகாப்பான இடம் நோக்கிப் பயணமானான் பாண்டி. ஒரு புள்ளியாய் மறைந்தது அந்தச் சிவப்பு நிற போட்டு!

தண்ணீர் சூழ்ந்த வீட்டையும், உள்ளே படுத்த படுக்கையாய்க் கிடக்கும் பாண்டியின் அம்மாவையும் பாது காக்க தூணருகில் நின்றுகொண்டிருந்தான் மணி, தன் சிறிய வாலை ஆட்டியவாறு!