தமிழிசை கண்ட தவப்பயன் … சீர்காழி கோவிந்தராஜன்/ஜெ.பாஸ்கரன்

தமிழ் வளர்த்த சான்றோர் – 67 வது நிகழ்வு:

தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். ‘சீர்காழி’ என்றாலே அவர்தான் என்னும் அளவிற்குப் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர். தமிழ் வளர்த்த சான்றோர் 67 நிகழ்வில், பேராசிரியர் வ.வே.சு. அவர்கள், சீர்காழியின் மகன், மருத்துவர் திரு சிவசிதம்பரம் அவர்களுடன் நடத்திய இசை கலந்த உரையாடல், தமிழின் இனிமையை மட்டுமன்றி, கோவிந்தராஜன் என்னும் மனித நேயப் பண்பாளரையும் மிகச் சரியாக அறிமுகம் செய்தது!

இன்று தமிழ் உச்சரிப்பில் போதிய கவனம் செலுத்தாமல், ’தமிழை வளர்ப்பது’ என்ற மாயத்தோற்றம் உருவாகி வருவதை வருத்தத்துடன் குறிப்பிட்ட வ.வே.சு. அவர்கள், சீர்காழி தன் பாடல்களில் சரியான தமிழ் உச்சரிப்பை எப்படிக் கடைபிடித்தார், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பயிற்சிகள் என்னென்ன என்பதைக் கூறியபோது, அரங்கமே வியப்பிலாழ்ந்தது. ‘கணீர்’ என்ற வெண்கலக் குரலில் அவர் இசைத்த ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’, ‘நீயல்லால் தெய்வமில்லை’, ‘நாள் என் செயும்?’, ‘அபிராமி அந்தாதி’, ‘சஷ்டி கவசம்’, ‘பிரபந்தங்கள்’, ‘சைவத் திருமுறைகள்’ போன்றவை பக்திக்கும், தமிழுக்கும், தமிழிசைக்கும் அவர் கொடுத்த கொடையல்லவா?

அன்றைய தமிழிசைச் சங்கம் ‘இசை மணி’ பட்டத்தையும், மத்திய அரசின் இசைக்கல்லூரி, ‘சங்கீத வித்வான்’ பட்டத்தையும் வழங்கின. கல்லூரி சென்று, இசையைப் பயின்று வாங்கிய பட்டங்கள் இவை என்பது சிறப்பு. பின்னாளில், தமிழிசையிலும், கர்னாடக இசையிலும் ஒரு தேர்ந்த கலைவல்லுனராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சீர்காழிக்கு இந்தப் பயிற்சிகள் அத்திவாரமாக இருந்தன என்றால் மிகையில்லை. சங்கரதாஸ் சுவாமிகளின் பாடாந்திரத்தில், நாடகக் கலைஞராகப் பயின்றதால், குரல் வளமும், உரத்துப் பாடும் பழக்கமும் வந்ததாம். தான் வசித்த செட்டித் தெருவின் கடைசீ வீட்டில் ‘பேய்’ நடமாட்டம் உண்டு என்ற ஒரு வதந்தி இருந்ததால், தன் பயம் போக, உரத்த குரலில் பாடிச் செல்வாராம்; அதுவே அவரது கணீர் குரலுக்குக் காரணமாம் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவாராம் சீர்காழி!

தியாகராஜர் ஆராதனையில், பாலமுரளிகிருஷ்ணா அவர்களுடன் முக்கியப் பங்காற்றியவர் சீர்காழி என்பது பலருக்கு செய்தியாக இருந்திருக்கக்கூடும்.

நாதஸ்வரக் கலைஞர் திருப்பாம்பரம் சுவாமிநாதப் பிள்ளை அவர்களிடம் இசை கற்றுக்கொள்கிறார். தமிழ் மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளுக்கு மெட்டமைத்தவர் திருப்பாம்பரம் சுவாமிநாதப் பிள்ளை – அவரிடம் கற்றுக்கொண்டதால், நாதஸ்வரப் ‘ஸ்வரக் கோர்வைகளை’ மிக எளிதாக சீர்காழி அவர்கள் பாடும்போது கையாள்வாராம்.

தன் கச்சேரிகள் எல்லாவற்றிலும், எல்லா பக்கவாத்தியங்களையும் வைத்துக்கொள்வது வழக்கம் – அது, அந்தக் கலைஞர்களை கவுரவிப்பது மட்டும் அல்லாமல், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்வதாகும் என்று சொல்வாராம் சீர்காழி.

1953ல் அபூர்வ கீர்த்தனம், ராகம்,தானம்,பல்லவி, அபூர்வ தியாகராஜ கிருதி என்ற மூன்று வகைப் போட்டிகளிலிலும் கலந்து கொண்டு, மூன்றிலும் முதற் பரிசு பெற்றவர் சீர்காழி – பரிசு வழங்கியவர் திரு ஜி.என்.பி. அவர்கள்!

சரவணபவானந்தா சுவாமிகளின் திருஅருட்பா சொற்பொழிவுகளில், சீர்காழி, திருஅருட்பாக்களைப் பாடுவாராம். தானம் அவசியம், நிதானம் அவசியம், சமாதானம் அவசியம், அன்னதானம் அவசியம் என்ற பாடலை (சுவாமி சரவணபவானந்தா அவர்களின் பாடல்) மிகவும் விரும்பிப் பாடுவாராம் சீர்காழி.

உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம், டி.ஆர்.பாப்பா, சீர்காழி இணைந்து படைத்த பக்திப்பாடல்கள் மிகவும் சிறப்பானவை – ‘சிவனுக்கிசைந்தது சிவராத்திரி’, ‘சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை இடையுடுத்தி’ போன்ற பாடல்கள் இவர்கள் படைத்தவையே.

பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எஸ்.டி.சுந்தரம், மருதகாசி (மாட்டுக்கார வேலா), சுரதா (அமுதும் தேனும் எதற்கு), கண்ணதாசன், வாலி போன்றவர்களின் பாடல்கள் சீர்காழியின் குரலில் இசையாக, சாகா வரம் பெற்றவை.

ஒற்றுப்பிழைகளின்றி, வல்லின, மெல்லின வேறுபாடுகளின் தெளிவுடன் அருமையான தமிழ்ப் பாடல்கள் மூலம் இனிய தமிழுக்கு சீர்காழி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது.

அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு இசையமைக்கும் போது, டி ஆர்.பாப்பா அவர்கள், 25 பாடல்களுக்குப் பிறகு நல்ல ராகங்களில் இசையமைக்க சிரமப் பட, வாய்ப்பை விடக்கூடாது என்கிற முனைப்புடன், தினமும் மயிலை கற்பகாம்பாளை வலம் வந்து, மீதிப் பாட்ல்களுக்கு இசையமைத்த செய்தியைச் சிவசிதம்பரம் பகிர்ந்துகொண்டார்.

மீ.ப.சோமசுந்தரம் போன்ற தமிழறிஞர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு, தெளிந்த பிறகே பாடல்களைப் பாடுவாராம் சீர்காழி – அவரது தமிழின்மீதான பற்று அத்தகையது! பெருமாள் கோயிலில் பிரபந்தங்களைப் பாடியது, தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் 14 பாடல்களில் தன் பாடல் ஒன்றை மட்டும் தேர்வு செய்தது எனப் பல செய்திகளை அன்று சிவசிதம்பரம் சொன்னார். ஓடம் நதியினிலே, சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள், கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான், தேவன் கோயில் மணியோசை, வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம், காதலிக்க நேரமில்லை, சின்னஞ்சிறு பெண் போலே, எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் போன்ற பாடல்களில் சில வரிகளைச் சிவசிதம்பரம் பாடிய போது, அவர் அப்பாவின் குரல், bhaவம் எல்லாம் அரங்கதில் உள்ளவர்களை பரவசப் படுத்தின.

2002ல் சீர்காழி அவர்களின் வரலாற்று நூலை, திரு அப்துல் கலாம் அவர்கள் ராஷ்டிரபதி பவனில் வெளியிட்டு மகிழ்ந்தாராம். ‘கோவிந்தராஜன் பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றாராம் கலாம்.

சிவசிதம்பரம் தனக்குப் பிடித்த பாடலாக, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைப் பாடினார். ‘வஞ்சகன் கண்ணனடா’ என்ற கண்ணதாசன் வரிகளைக் கச்சேரிகளில் பாட மாட்டாராம் சீர்காழி – கண்ணனை வஞ்சகன் என்று தான் சொல்ல மனமில்லை என்பாராம்! ‘வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ ‘வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என்று. பாடி முடித்து விடுவாராம்! அவரது கண்ணன் பக்திக்கு வேறு என்ன சொல்ல?

இறக்கும் தருவாயிலும், காரில் செல்லும்போது, லஸ் விநாயகர் கோயிலைக் கடக்கும் போது, “முருகா, முருகா.. உலகம் வாழ்க, வாழ்க” என்று சொல்லியபடியே தன் இறுதி மூச்சை விட்டார் என்ற செய்தியை சிவசிதம்பரம் சொன்ன போது அரங்கமே நெகிழ்ந்திருந்தது.

மருத்துவக் கல்லூரியில் சிவசிதம்பரம் எனக்கு மூன்று வருடங்கள் ஜீனியர். முதலாண்டு பாட்டுப்போட்டியில், ‘சாட்டைக் கையில் கொண்டு காளை ரெண்டு’ என்ற அப்பாவின் பாட்டினைப் பாடி முதற்பரிசு பெற்றார்! இன்றும் அதே குரலுடன், தன் அப்பாவைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட விபரங்கள், அவரது அன்பினையும், மரியாதையையும், குரு பக்தியையும் வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது.

ஒரு சிறப்பான தமிழ் வளர்த்த சான்றோர் நிகழ்ச்சியை வழங்கியதற்காக, திரு வ.வே.சு., திராவிடமாயை சுப்பு, ஆடிட்டர் ஜேபி, ஆர் ஆர் சபா ஆகியோருக்கு வாழ்த்துகள்!

நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வரும் வரையில், “உலகம் சம்நிலை பெற வேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்” என்ற பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் காதில் ஒலித்த வண்ணம் இருந்தது!