கொடுப்பினை/அன்னபூரணி

“டொக்! டொக்!”

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மெல்ல கண் விழித்தாள் பார்வதி.

அனிச்சையாய் அவள் பார்வை சுவர்க் கடிகாரத்தின் பக்கம் போக, கடிகாரம் நள்ளிரவு 2.35 என்று காட்டியது.

‘இந்த நேரத்தில யாரா இருக்கும்?’ என்று நினைத்தபடியே மெதுவாய் எழுந்து வந்து மின் விளக்கைப் போட்டாள்.

கதவின் அருகே வந்து,

“யாரு?” என்று குரல் கொடுத்தாள்.

“நாந்தான்!” என்று வெளியிலிருந்து வந்த குரலை அவளால் அடையாளம் காண முடியவில்லை.

“யாருங்க? அர்த்த ராத்திரியில வந்து நாந்தான்னா.. யாருன்னு புரியும்.. பேரை சொல்லுங்க..” என்றாள் அதட்டலாய்.

“ம்ச்.. நாந்தான்னா புரியலையா.. கதவத் தெறங்க!” என்று அதிகாரத்துடன் பதில் வர, மிரண்டு போனாள்.

‘இவனா? இவன் எதுக்கு இப்ப வந்தான்?’ என்று பயமும் எரிச்சலும் ஒன்று சேரத் தோன்றியது அவளுக்கு.

வேறு வழியின்றி கதவைத் திறந்தாள்.

கதவை முழுதும் திறந்து விடாதபடி அவள் லேசாகத் திறக்கும் போதே அவசரமாக உள்ளே நுழைந்து அதை தாழிட்டான் அவன்.

“ஒரு வாட்டி நாந்தான்னு சொன்னா உங்களுக்கு புரியாதா? உடனே தொறக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டவன் அங்கிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான்.

“என்ன இந்த அகால நேரத்தில வந்திருக்க?” கேள்வி கேட்டாள்.

“வர வேண்டிய சூழ்நிலை.. சரி சரி.. சாப்பிட ஏதாவது இருந்தா குடுங்க.. ரொம்ப பசி..” என்றபடியே அறையின் மின்விசிறியைப் போடும்படி செய்கை செய்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் மின்விசிறியின் சுவிச்சை தட்டிவிட்டுவிட்டு சமையலறைக்குள் சென்று அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை அதன் மீது வைத்தாள்.

சில நிமிடங்களில் ஒரு தட்டில் கொஞ்சம் எண்ணை குழைத்த மிளகாய்ப் பொடியுடன் சூடான மூன்று தோசைகளை அவன் முன்னே கொண்டு வந்து வைத்தாள்.

அவன் வேக வேகமாக தோசையைப் பிய்த்து வாயில் அடைத்துக் கொள்வதிலேயே அவனுடைய பசி அவளுக்குப் புரிந்தது.

வேகமாகச் சென்று இன்னும் இரண்டு தோசைகளைச் சுட்டு எடுத்து வந்தாள்.

அதையும் அவன் மறுக்காமல் வாங்கி உண்டான்.

மேலும் தோசை வேண்டுமா என்பது போல அவள் பார்க்க, கையாலேயே வேண்டாம் என்று மறுத்துவிட்டு எழுந்து சென்று கைகளை நன்றாக கழுவிக் கொண்டான்.

‘நல்ல வேளை! சாப்பிடதான் வந்திருக்கான்.. வேற எதும் கேக்கல..’ என்று அவள் மனதுக்குள் எண்ணும் போதே,

“பீரோ சாவி எங்கயிருக்கு? வழக்கமா வெக்கற இடத்திலதானே?!” என்று கேட்டு அவளை அதிர வைத்தான்.

“அது எதுக்கு உனக்கு?” என்று அவள் அவசரமாகக் கேட்பதை காதில் போட்டுக் கொள்ளாமல், அவன் அவளுடைய பீரோ சாவியைத் தேடியெடுத்து பீரோவைத் திறந்து நிதானமாக அதை ஆராய்ந்தான்.

பீரோவில் காஞ்சிப் பட்டும் பனாரஸ் பட்டும் நிறைய சில்க் காட்டன் புடவைகளும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கீழ்தட்டில் சில பருத்திப் புடவைகள் இருந்ததைப் பார்த்ததும் அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“நீ செய்யறது கொஞ்சமாவது நல்லா இருக்கா? நா ஏதோ வர பென்ஷனை வெச்சி காலத்தை ஓட்டிகிட்டிருக்கேன்.. என்கிட்ட நீ நெனக்கிற அளவுக்கு பெரிய பணம் எதுமில்ல..” என்று அவள் அவனைத் தடுக்க முயன்றாள்.

“உங்க பணம் யாருக்கு வேணும்? உங்க ஈன புத்தி இன்னும் மாறவேயில்லல்ல.. ஹூம்.. அந்த கடவுள் அருளால என் ஜூஸ் கடை நல்லா ஓடுது.. என் தேவைக்கு நா சம்பாரிச்சிக்கறேன்.. உங்களுக்கு பணம் தேவைப்பட்டா சொல்லுங்க.. நா தரேன்..” என்று அவளை, புழுவைப் பார்ப்பது போல பார்த்து ஏளனமாகக் கூறியவன், கீழ்த் தட்டிலிருந்து ஒரு காட்டன் புடவையை உருவினான்.

“இன்னிக்கு எங்கம்மா கையால சாப்பிடணும்னு தோணிச்சு.. வந்தேன்! சாப்பிட்டேன்.. கொஞ்ச நாளா தூக்கம் சரியா வரல.. மனசுக்குள்ள ஏதோ பாரம் அழுத்தற மாதிரி இருந்துச்சு.. அம்மா மடியில படுத்தா தூங்க முடியும்.. அதுக்கு எனக்கு குடுப்பினை இல்ல.. அதான்.. அம்மா புடவைய கட்டிக்கிட்டாலாவது தூக்கம் வருதான்னு பாக்க இந்த புடவைய எடுத்துகிட்டேன்..” என்றவன் தான் கட்டியிருந்த ஜார்ஜெட் புடவையைக் களைந்துவிட்டு பீரோவிலிருந்து எடுத்த புடவையை அணிந்து கொண்டான்.

ஏதோ ஒரு வித நிறைவு தோன்றுவது போலிருந்தது அவனுக்கு.

அவள் முகம் அசூயையையும் வருத்தத்தையும் ஒன்றாகக் காட்டியது.

“அம்மா கையால சாப்பிடவும் அம்மா மடியில தூங்கவும் ஒரு குடுப்பினை வேணும்.. அது எனக்கு இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இது போதும்.. வேற எதுவும் எனக்கு வேண்டாம்.. இங்கியே தங்கிடவும் மாட்டேன்.. பயப்படாதீங்க..” என்றவன், தான் அவிழ்த்துப் போட்ட புடவையை அழகாக மடித்து எடுத்துக் கொண்டு, அணிந்திருந்த வெண்ணிற புடவையின் முந்தாணையை எடுத்து தன் தலையில் முக்காடிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வேகமாக வெளியேறினான்.

‘இவன் பாட்டுக்கு வந்தான்.. தின்னான்.. புடவைய எடுத்து கட்டிகிட்டு போய்ட்டான்.. இப்ப நாளைக்கு காலையில பக்கத்து வீட்டு ராஜம், வெவஸ்த்தையே இல்லாம கேப்பாளே.. உன் வீட்டுல நேத்தி நைட்டு லைட்டு எரிஞ்சிதே.. யார் வந்தாங்கன்னு கேப்பாளே.. என்ன பதில் சொல்லலாம்..’ என்று அவள் மனம் வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையாகிப் போன மகனை நினைக்காமல் தன்னைப் பற்றியே வெகு நேரம் யோசனை செய்து கொண்டிருந்தது.

♥♥♥♥♥

One Comment on “கொடுப்பினை/அன்னபூரணி”

Comments are closed.