கண்ணிலே தெரிவதென்ன/அழகியசிங்கர்

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் வெங்கட் இருப்புக்கொள்ளாமல் தவித்தான்.
35 வயதான வெங்கட்டிற்கு இவள்தான் தனக்கு மனைவியாக வர வேண்டுமென்று நினைத்தான்.

அவளைத் தொடர்ந்து சென்று மேலும் விவரங்களைச் சேகரிக்க அவனுக்கு அனுபவம் போதவில்லை.

பிறகு எங்கே அவளை இனிமேல் சந்திப்பேன் என்று யோசித்தான்.

அடுத்தநாள் ஆச்சரியம். அவன் அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்தாள். புதுசாக பணி புரிய வந்திருந்தாள்.

இன்னொரு ஆச்சரியம். அவனுக்கு உதவியாளராக அவள் சேர்ந்திருந்தாள்.

அன்று பணி முடிந்தபிறகு அவளை கொஞ்ச நேரம் இருக்க சொன்னான் வெங்கட்.

எல்லோரும் அலுவலகம் விட்டுப்போன பிறகு,
அவளிடம் தன் உள்ளக்கிடக்கையை தெரியப்படுத்த அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் சாதாரணமாக அவனைப் பார்த்து, “சார்
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியறது..நான் குஜராத்திப் பொண்ணு..உங்க வீட்டுல சம்மதிப்பாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க..”என்றாள்.

அதிர்ந்து விட்டான் வெங்கட்.