அழகின் சிரிப்பு/அன்னபூரணி

பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது அந்தக் காட்சி.

சாலமன் தன் காரை நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ரசிக்கவே ஆரம்பித்துவிட்டான்.

ஒரு நீல நிற சுடிதார் அணிந்த பெண் பூங்காவில் நின்றபடி தன் கைக்குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

இது ஒரு சாதாரணக் காட்சிதான். ஆனால் தனக்கு ஏன் இந்தக் காட்சி இத்தனை பிடிக்கிறது என்று அவனுக்குப் புரியவேயில்லை.

அந்தப் பெண்ணின் முகம் இத்தனை அழகாகவும் பிரகாசமாகவும் இருப்பதாலா அல்லது அந்தக் குழந்தை இத்தனை மகிழ்ந்து சிரிப்பதாலா எதனால் இந்தக் காட்சியை இத்தனை ரசிக்கிறோம் என்று அவன் குழம்பினான். ஆனாலும் அவனால் அவர்களை கண் கொட்டாமல் பார்ப்பதை நிறுத்த முடியவில்லை.

அவனுடைய செல் போன் சிணுங்கி அவன் கவனத்தை ஈர்க்க முற்பட்டது. ஆனால் அவன் அதை சட்டை செய்யவில்லை.

அந்தப் பெண் தன் குழந்தையை கொஞ்சுவதில் கூட ஒரு அழகு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

குழந்தையுடன் அவள் சிரிக்கும் போது அவளுடைய கண்களும் சிரித்தது அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருந்தது.

நாளை தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் தானும் தன் குழந்தையுடன் இப்படிதான் கொஞ்சி விளையாட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

இதற்காகவே அம்மாவின் நச்சரிப்புக்கு செவி சாய்த்து ஒரு கல்யாணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று கூட நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு குழந்தையுடன் சேர்த்து மனைவியையும் கொஞ்ச வேண்டும் என்று அடுத்தடுத்து அவன் கற்பனை விரிந்து கொண்டே போனது.

அப்போதுதான் அது நடந்தது.

யாரோ கைதட்டும் ஓசை கேட்டது.

குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த பெண் திரும்பிப் பார்த்தாள். அவளை நோக்கி கிழவி ஒருத்தியும் இளைஞன் ஒருவனும் நடந்து வந்தார்கள்.

கிழவி அந்தப் பெண்ணின் கையிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். அந்தக் கிழவிக்கு அந்த இளைஞன் பணம் கொடுக்க அவள் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டு அந்த சுடிதார் பெண்ணிடமும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“போட்டோஸ் எல்லாம் எப்டி வந்திருக்கு?” என்று அந்த நீலச் சுடிதார் பெண் கேட்க,

“எல்லாமே சூப்பரா ரொம்ப நேச்சுரலா வந்திருக்கு மேம்!” என்று சொல்லிக் கொண்டே அவளிடம் தன் கையிலிருந்த டேபை (Tab) காட்டினான் அந்த இளைஞன்.

‘கர்மம்! இது போட்டோ ஷூட்டா?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சாலமன், தன் தலையில் அடித்துக் கொண்டே தன் காரைக் கிளப்பினான்.

♥♥♥♥♥