
மேற்கே அதோ தெருவின்
முனையிலிருந்து
மெல்ல
நடந்து வருகிறார்
அந்தப் பழைய
வாணிகர்;
ஒருபக்கம் தோளைச்.
சாய்த்து,
ஒரு காலை
ஊன்றி ஊன்றி
நடந்து வருகிறார்;
தினமும் காலை நடை
முடிந்து
அவர் வீடு திரும்புகையில்
எட்டுமணி ஆகிவிடும்;
சொத்துக்கள் பலவும்
ஈட்டிய மிகுபொருளும்
பெண்கள் விஷயத்தில்
தொலைத்துவிட்டார்
இவர் என்று
ஊரில் பலரும்
பேசுகிறார்கள்;
மெல்ல மெல்ல
வாணிகம் படுத்துவிட
கடையை
எடுத்துவிட்டார்;
இழுத்துப் பறித்து
எப்படியோ
பெண்ணைக்
கரையேற்றிவிட்டார்;
பிள்ளையின்
பிழைப்புக்கும்
ஏதோ
வழிசெய்துவிட்டார்;
சொந்த வீடும்
கொஞ்சம் பணமும்
எஞ்சியிருக்கின்றன;
சோற்றுக்கும்
துணிமணிக்கும்
கவலையில்லைதான்
. முகத்தில்
அருளே இல்லை,
இழைத்த தவற்றை
நினைத்து நினைத்து
வருந்துகிறார் என்று
கால்கள் மெல்லச்
சொல்வதுபோல
கிந்திக் கிந்தி
நடந்து செல்கிறார்
அவர்.
