காத்திருந்தவள்/நாகேந்திர பாரதி

ஓவியம் : உமா பாலு 

‘அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போய் விட்டார்கள் .ஊர்ப் பெரியவர்கள் அவர்களை அடக்கம் செய்த பிறகு அந்த அக்காவுக்கு ஊரில் பூக்கடை வைத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவள் மறுத்து விட்டாள் . வெளியே வராமல் அந்த வீட்டிலேயே இருந்தாள் .ஒரு நாள் இரவு சில பேர் அவளி டம் சென்று வம்பு செய்ய அவர்களை அடித்து கடித்து விரட்ட அவளுடன் இருந்த அந்த நாயும் அவர்களைக் கடித்து விரட்ட அவர்கள் ரத்தக்காயத்தோடு வந்து சேர்ந்து ‘அவள் ஒரு பைத்தியம்’ என்றார்கள். அன்றிலிருந்து அந்த வீட்டிலிருந்து, இரவு நேரங்களில் அழுகுரலும் அந்த நாயின் ஊளைச் சத்தமுமே கேட்கும் .ஊர்ப் பெரியவர்கள் அவ்வப்பொழுது சென்று அவளுக்கு உணவு மட்டும் அங்கே வெளியே வைத்து விட்டு வருவார்கள் . அது பைத்தியம் .அங்கே போகாதீர்கள்’ என்றான் அந்த ஓடக்காரப் பையன்.
ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதான் சலீம். ‘பாத்திமா பைத்தியமா’. ஒரு வருடத்திற்கு முன்பு அவன் அப்பா பூக்கடை வைத்திருந்த அந்த ஏரிக்கரை எவ்வளவு பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது . எத்தனை படகு வீடுகள் தெப்ப வீடுகள் அந்த ஏரிக்கரை ஓரத்திலே எத்தனை பூக்கடைகள் . அவன் கடைப் பூக்களை படகிலே ஏற்றிக்கொண்டு சென்று ஏரியில் இருக்கும் வீடுகளுக்குக் கொடுத்து வருவது வழக்கம் . ஒரு நாள் இந்த வீட்டில் இருந்து வந்த அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு முதலில் தோன்றியது ‘இது ஒரு பூந்தோட்டம் ‘என்று. லேசாக விலகிய முகத்திரையில் தெரிந்த முகம் பூ. அதில் கருவண்டுகள் .கைகள் இரண்டும் பூக்கள். உடம்பு முழுவதுமே ஒரு பூந்தோட்டமாக வந்ததாக தெரிந்தது. ஒரு நாள் சொல்லிவிட்டான் .’பூந்தோட்டமே வந்து பூவை வாங்கிப் போகிறது’ என்று. ஒரு கணம் திரும்பியவள் முறைத்தாள் . மறுகணம் சிரித்தபடி முகத்திரையை முழுவதும் மூடிக் கொண்டு உள்ளே குதித்து ஓடி விட்டாள் . அதற்குப் பிறகு அவர்களின் பார்வை தொடர்ந்த து. ஒரு நாள் அவள் இவனுடைய பூக்கடைக்கு வந்து விட்டாள். தனது வாப்பாவிடம் ‘இந்த பூக்காரங்க கொண்டு வந்து கொடுக்கும் பூக்கள் எல்லாம் மிகவும் வாடி இருக்கின்றன. நானே சென்று பூக்களை வாங்கி வருகிறேன்’ என்று வந்துவிட்டாள் .
‘ நல்ல பூக்களாகப் பார்த்துக் கொடுங்கள்’ என்று அவனிடம் கேட்டாள் .’ என்னிடம் இருக்கும் பூக்கள் இவ்வளவுதான். உங்களுக்கு வேண்டுமானால் எங்கள் பூந்தோட்டத்தில் வந்து நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்’ என்று அழைத்துச் சென்றான். பூந்தோட்டம் .அதை ஒட்டிய மண்டபம். அங்கே அவர்கள் பேசிய கதைகள் . அவர்கள் வாழ்வில் நடந்த அத்தனையையும் ஒருவருக்கொருவர் சொல்லியே தீர வேண்டும் என்ற வேகத்தில் பேசினார்கள். வீட்டைப்பற்றி பேசினார்கள். சாப்பாட்டை பற்றி பேசினார்கள். பூக்களைப் பற்றி பேசினார்கள். ஏன் அவளுடைய நாயைப் பற்றியும் பேசினார்கள் . அந்த நாயை குட்டியாக வந்தது முதல் அவள் வளர்த்து வரும் விதம் பற்றியும் அவள் கண்களை விரித்துப் பேசிய போது அவளே அவனுக்கு ஒரு நாய்க்குட்டி போல் தெரிந்தாள் .
சில நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே ஒன்றும் பேசாமலே உட்கார்ந்து இருப்பார்கள். அவர்கள் கண்கள் பேசின . தொடர்ந்து அவர்கள் கைகளும் பேசின. ஒரு நாள் அந்த மண்டபத்தில் அவர்கள் .உடல்களும் பேசின .அந்த அனுபவத்தில் களைத்து இருந்த அவளை அணைத்தபடி படகுத்துறைக்கு அழைத்துச் சென்றான் அவன் .அதுவரை அவர்கள் வெளியே வரும்பொழுது வேறு வேறு திசையில் சென்று கொண்டிருந்தவர்கள். இன்று சேர்ந்து வந்ததை இரண்டு கண்கள் கவனித்தன . அவை பாத்திமாவின் அண்ணனின் கண்கள் .முஸ்தபாவின் கண்கள்.
மறுநாள் அவன் படகில் சென்று பூக்களைக் கொடுக்கும் பொழுது முஸ்தபாவின் குரல் கண்டிப்பாக ஒலித்தது.
. .’இனிமேல் இங்கே பூ கொண்டு வந்து கொடுக்க வேண்டாம் ‘.உள்ளறையில் இருந்து அந்த பூந்தோட்டத்தின் கருவண்டு விழிகள் கண்ணீரோடு கலந்து தெரிந்தன .வீட்டுக்குச் சென்று உம்மாவிடம் சொன்னான். ஆரம்பத்தில் மறுத்தவள் பிறகு அவனுடைய தொடர்ந்த பிடிவாத பேச்சின் பிறகு ஒத்துக்கொண்டாள் . மறுநாள் அங்கே சென்று அவளின் வாப்பாவிடம் பேசுவதாக இவனுடைய வாப்பா உறுதி கொடுத்தார். மறுநாள் தான் அது நடந்த து .
‘முஸ்தபா ஒரு பயங்கரவாதி’ என்று தெரிய வந்த ராணுவம் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து குண்டுமழை பொழிந்து சுற்றி இருந்த பல படகு வீடுகளையும் தெப்ப வீடுகளையும் நாசமாக்கி ,பாத்திமாவின் வீட்டுக்குள் நுழைந்து முஸ்தபாவைச் சுட்டு பிணமாக இழுத்துச் சென்ற நிகழ்வு நடந்தது, அதைத் தொடர்ந்து ஊரடங்கு ,உயிருக்குப் பயந்த சலீமின் பெற்றோர் உடனே இடத்தைக் காலி செய்து ராஜஸ்தான் ஜோத்பூருக்கு செல்ல முடிவு செய்து விட இவனும் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களுடன் சேர்ந்து சென்றான் .தொடர்ந்து வந்த செய்திகள் அந்த ஊரின் கலவரங்களையும் இந்த ஊரில் பல பயங்கரவாதிகள் இருக்கின்ற விஷயங்களையும் தெரியப்படுத்தி அந்த ஊரே ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரு வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் தளர்வு ஏற்பட்டுள்ளது. வந்துள்ளான் சலீம். ‘முடியாது சார் நான் போக முடியாது. நீங்க வேண்ணா போட்டை எடுத்துட்டு போங்க’ என்று அதிக பேரம் பேசினான் பையன் .அவனுக்கு அதிகப் பணத்தைக் கொடுத்து விட்டு அந்தப் படகை எடுத்துக் கொண்டு இவனே ஓ ட்டிச் சென்றான், அவன் கண்ணீர் வெள்ளமே அந்த ஏரி வெள்ளமாகத் தோன்றியது. ஏரியின் தண்ணீர் முழுக்க அவன் கண்ணீரால் நிரம்பியது போன்ற ஒரு பிரமை .
அங்கே சென்று ஓரத்தில் படகை நிறுத்தி விட்டு ஏறும் பொழுது , எப்பொழுதும் குரைத்துக் கொண்டு, ஊளை யிட்டுக் கொண்டு இருக்கும் அந்த நாய் மெல்லிய ஈன சுரத்தில் ஏதோ சொல்லிவிட்டு அவன் அருகே வந்து வாலையாட்டியது. அவன்உள்ளே சென்றான். உள்ளே அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்திருந்தாள் அவள் .தெரியும் அவளுக்கு .அவனது அந்த ஒரு நாள் உடம்பின் வாசனை அவள் மனமும் உடலும் நிரம்பி இருக்கிறதே. அவனை முழுதும் உணர்ந்து கொண்டவள் அல்லவா. வந்திருப்பவன் சலீம் என்று தெரிந்தும் அவள் திரும்பவில்லை ,
கிழிந்த உடைகளோடு கிழிந்த நாராகப் படுத்திருந்த அவள் நிலைமையை பார்த்து கண்ணீர் பொங்கியபடி அவள் அருகே சென்றான் . தொட்டான். திருப்பினான் . பளார் என்று விழுந்தது ஒரு அறை இவன் கன்னத்தில் .அவர்கள் கண்கள் சந்தித்தன.அவள் கண்களில் கோபம் .அவன் கண்களில் பரிதாப உணர்ச்சி . குற்றம் கலந்த உணர்ச்சி. அதோடு கலந்து வந்த அவன் கண்ணீர் மழை .அந்த கண்ணீரைப் பார்க்க பார்க்க அவள் கண்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிய , அவன் நொறுங்குவது போல் அவனை அவள் இறுகக் கட்டித் தழுவ அவன் தரையில் சரிய அவன் கன்னத்தில் முத்த மழை பொழிந்தவள் அவன் உதட்டருகே தன் உதட்டை ஒத்தி ‘வலிக்குதாடா’ என்றாள் . அவன் அவளை இறுகக் கட்டினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த, ஓரமாக நின்ற அந்த நாய், சற்றே வெட்கத்துடன் வெளியே சென்று தன் பின்னங்கால்களால் அந்த வீட்டுக் கதவை சாத்தியது.