குழந்தை/எஸ்.எல். நாணு

ஓவியர் கவிதா மாது

“பாப்பாவுக்கு என்ன வயசும்மா?”
பூக்காரம்மா கேட்டாள்.
“ஒண்ணே கால்..”
தயக்கத்தோடு சொன்னாள் ஹேமா.
“தங்க விக்ரஹம் மாதிரி இருக்குது.. கண்ணு பட்டுரப்போவுது.. வூட்டுக்குப் போய் திருஷ்டி சுத்திப் போடும்மா..”
தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கோவிலுக்குப் போனாள்.
அதிகம் கூட்டமிருக்கவில்லை என்றாலும் அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சுவாமியை விட அவள் தோளில் பொக்கைவாய் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்த குழந்தையையே அதிகம் பார்த்தார்கள்.
“எவ்வளவு க்யூட்டா இருக்கு”
ஒரு யுவதி ஹேமாவின் காதுபடவே தோழியிடம் சொல்லிக்கொண்டே கடந்தாள்.
”என்ன அழகு.. என்ன கலர்.. உன் பொண்டாட்டிக்கும் பொறந்திருக்கே.. அட்டைக்கரியா.”
இது ஒரு பெண்மணியின் அங்கலாய்ப்பு..
மேலும் அங்கே இருக்கப் பிடிக்காமல் ஒரு பிரதட்சணத்தோடு முடித்துக் கொண்டு கோவிலை விட்டு ஹேமா வெளியே வந்தாள்..
வழியில் அவளுடைய கல்லூரித் தோழி சுஜா எதிர்பட்டாள்.
சுஜாவுக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் அமையவில்லை. அந்த ஏக்கம் அவள் ஹேமாவின் குழந்தையைப் பார்க்கும் பார்வையிலேயே பளிச்.. இது ஹேமாவுக்கும் தெரியும்.. அதனால் அவளிடம் அதிகம் பேசாமல் அவசர வேலை என்று உடனே கிளம்பிவிட்டாள்.
“இனிமே நம்ம செல்லத்தை வெளில கூட்டிட்டுப் போகப்போறதில்லை.. அப்பப்பா.. எவ்வளவு கண்ணு.”
உடனே மை எடுத்து குழந்தையின் கன்னத்தில் ஈஷினாள். கையில் உப்பு எடுத்து குழந்தைக்கு திருஷ்டி கழித்தாள்.
”என்னங்க.. நம்ம செல்லத்தை நல்லாப் படிக்க வெக்கணும்.. இந்த உலகமே மெச்சும்படி அவ வரணும்:
கணவனிடம் கொட்டினாள்..
“ஹேமா.. பொறுமை.. அவசரப்படாதே.. அதுக்கெல்லாம் இன்னும் நிறைய டைம் இருக்கு.. இப்ப இவ குழந்தை.. நம்ம செல்லக் குழந்தை.. இந்தப் பருவத்தை இப்ப அனுபவிக்கலைன்னா அப்புறம் எப்பவுமே அனுபவிக்க முடியாது”
கணவன் சொன்னதைக் கேட்டு ஹேமாவும் ஆமோதித்தாள்.
“ஆமாங்க.. இப்ப விட்டா அப்புறம் எப்பவுமே அனுபவிக்க முடியாது.. கண்டிப்பா அனுபவிக்க முடியாது.. கண்டிப்பா அனுபவிக்க முடியாது”
புலம்பிக்கொண்டே கனவிலிருந்து விடுபட்டாள் ஹேமா..
ஹாஸ்பிடல் படுக்கையில் அவள் மட்டும் தனியாக..

நான்காவது முறையாக கருக்கலைந்த சோகத்துடன்..