
ஓவியம் : உமா பாலு
“அம்மா... அம்மா.... நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா... நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்.... சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்.... ப்ளீஸ்மா.... எனக்கு ஹெல்ப் பண்ணும்மா...” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.
“இருடா கண்ணா.... ஒரு அஞ்சு நிமிஷம், இதோ வந்துட்டேன்....” என்று சொல்லிக் கொண்டே விஸ்வம் அருகில் வந்து அமர்ந்தாள் சுமதி.
“அம்மா இந்த போட்டியில ஒரு வீடு வரையலாம்னு இருக்கேன்... நாம தான் இப்படி சின்ன ஃப்ளாட்டில் குடியிருக்கோமே... எனக்கு தனி வீடு எப்படி இருக்கும்னு தெரியாதுமா.... ஒரு ஐடியா கொடு என்றான் விஸ்வம்.
“இருடா கண்ணா.... இந்த மாதம் காலண்டரில் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் வரைந்த பெயிண்டிங் வந்திருக்கு.... அது ஒரு அழகான தனி வீடு.. அதை நான் தரேன், அதப் பாத்து நீ வரஞ்சு ப்ராக்டிஸ் பண்ணு சரியா...”.என்றாள் சுமதி. விஸ்வமும் குதித்துக் கொண்டே அவள் கொடுத்த காலண்டரில் இருந்த வீட்டைப் பார்த்தான். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. உடனே அதை வரைந்து பார்க்க ஆரம்பித்தான்.
ஆறாம் வகுப்பு படிக்கும் விஸ்வத்திற்கு எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். அவன் அம்மாவும் அவனுக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பாள். இந்த முறையும் போட்டியில் நான் முதல் பரிசு வாங்குவேன்மா என்று சொல்லிக் கொண்டே பள்ளி கிளம்பத் தயாரானான் விஸ்வம். சுமதியும் அவனை பள்ளிக்கு அனுப்பி விட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுக்கும் அந்த பெயிண்டிங்கில் இருந்த அழகிய அந்த சிறிய வீடு கண்முன் வந்து போய்க்கொண்டே இருந்தது. தனி வீடு வாங்குவது என்பது கனவில் கூட நடக்காதது. நாம ஏன் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் சுமதி.
மாலை விஸ்வம் பள்ளியிலிருந்து குதித்துக் கொண்டே வந்தான். ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, “அம்மா ஓவியப் போட்டியில் நான்தான் முதல் பரிசு வாங்கி இருக்கேன். நீ கொடுத்த ஐடியா தான் எனக்கு உதவியா இருந்துச்சு” என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டான். சந்தோஷத்தில் சுமதியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். “ரொம்ப சந்தோஷம்டா கண்ணா…. நீ பரிசு வாங்குவாய் என எனக்குத் தெரியும் என்றாள் சிரித்தபடியே.
“அம்மா நான் பெரியவனாகி நல்ல படிச்சு உனக்கு இதே மாதிரி நிஜமா வீடு வாங்கித் தரேன்” என விஸ்வம் சொன்னதைக் கேட்டு அவனுடைய கள்ளம் இல்லாத குழந்தைத்தனத்தை ரசித்தபடி அவனை ஆதரத்துடன் அணைத்துக் கொண்டாள் சுமதி.
