வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

தமிழ்ப் புத்தக நண்பர்கள் கூட்டங்களில்தான் அவரை நான் முதன்முதலில் சந்தித்தேன். பளிச்சென்று நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி நாள் வரை எழுதுவதை ஒரு கடமையாகவே நிறைவேற்றிவந்தார் என நினைக்கிறேன் – சென்ற வாரம் கூட அவரது கட்டுரை தினமணி நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்தது.

த.பு.ந. கூட்டம் தவிர, அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியதே அதிகம். அவரது கட்டுரைகள், கதைகள் பற்றியும், என கட்டுரைகள், கதைகள் பற்றியும் நாங்கள் பேசியிருக்கிறோம். மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அவரது விமர்சனப் பார்வை இருக்கும். தன்னிலை, படர்கை எழுத்து, எழுத்தாளரே தன் கருத்தைச் சொல்வது போன்ற எழுத்து என விமர்சித்து, மாற்ற வேண்டிய, தவிர்க்க வேண்டியவைகளைச் சொல்வார். அதில் ஒரு கரிசனம் இருக்கும் – அழுத்தம் இருக்கும். ஆனால் அறிவுரை போல் இருக்காது.

இயற்பெயர் லக்‌ஷ்மணன் – அவருக்கு மிகவும் பிடித்த ஜ.ரா.சு. சாரோ, நெருங்கிய நண்பர் சாருகேசி சாரோ ‘வாதூலன்’ எனப் புனைப்பெயர் இட்டதாகச் சொன்னார் என்று நினைக்கிறேன் – சரியாக நினைவில் இல்லை.

உடம்பு உபாதைகளைவிட, வீட்டில் எழுதவும் முடியாமல், வெளியே கூட்டங்களுக்குப் போகவும் முடியாமல் இருப்பதே அவரை மிகவும் துன்புறுத்தின என நினைக்கிறேன். “இன்னும் மூணு வாரமாவது ரெஸ்டில் இருக்கணுமாம்…”, “இப்ப பரவாயில்ல, கொஞ்சம் வீட்டுக்குள்ளயே நடக்க முடியறது” போன்ற வார்த்தைகளே இதற்குச் சான்று. அப்போதும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்களைக் கேட்பார் – அவர்களுடன் பேசுவதற்கு அவருக்கு நிச்சயமாக ஏதாவது இருக்கும். சிறுகதைப் போட்டிகளில் மிகவும் ஆர்வமுடன் பங்கு கொள்வார். முடிவுகள் வந்து விட்டனவா என்பதில் கவனமாக இருப்பார்.

சிறுவர் பத்திரிகையான ‘கண்ணன்’ மூலம் அறிமுகமாகி, சிறுகதைகள், நாடகம், பேட்டிகள் என பல பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கல்கி வளர்த்த சிரிப்பலைகள், ஆன்மிகம், பெண்கள் பிரச்சனை, பங்குச் சந்தை, குழந்தை வளர்ப்பு, சங்கீத நினைவலைகள், சிறுகதைகள் என பல புத்தகங்கள் எழுதியுள்ளார். தினமணி நாளிதழில், வங்கி, சமூகம், அரசியல் சம்பந்தமான கட்டுரைகள், நிகழ்கால மாற்றங்களைக் குறித்த விமர்சனமாகத் தெளிவாக இருக்கும்.

குவிகம் மின்னிதழில், அசோகமித்திரன் பற்றிய கட்டுரையை வாசித்தால், வாதூலன் என்னும் ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும். (அவரது ‘கலிபோர்னியா திராட்சை’ சிறுகதைத் தொகுப்புக்கு, அசோகமித்திரன் முன்னுரை எழுதியிருக்கிறார் என்பது வியப்பான தகவலாகச் சிலருக்கு இருக்கக் கூடும்). மற்றொரு சிறப்பான கட்டுரை ‘திரையுலகமும் எழுத்தாளர்களும்’.

“மூக்கு அடைத்திருக்கும் போது பலமான தும்மல் போட்டால் ஒரு relief ஏற்படுமே, அது போன்ற உணர்வு எனக்கு ஒவ்வொரு கதையையும் எழுதி முடித்த போது ஏற்பட்டிருக்கிறது” – என்கிறார் வாதூலன். அதுதான் அவரது படைப்புகள் குறித்து அவர் கொண்டிருந்த sincerity and seriousness. ‘சங்கீத நினைவலைகள்’ புத்தகத்தின் முன்னுரையில் தனக்கு சங்கீதம் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்வதிலாகட்டும், கட்டுரைகளைப் படித்து பச்சைக் கொடி காட்டிய சாருகேசியைப் பற்றியும், தன் அபிமான எழுத்தாளர்களான ஜ.ரா.சு., ரா.கி.ர. போன்றவர்களைப் பற்றி நன்றியுடன் நினைவு கூர்வதிலாகட்டும் வாதூலன் அவர்களின் வெளிப்படைத்தன்மைத் தெளிவாகத் தெரிகின்றது.

என் சிறுகதைத் தொகுப்பை வாசித்து, பாராட்டியதோடு, சில விமர்சனங்களையும் முன் வைத்தார். ஆச்சரியக் குறிகள் நான் அதிகம் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார் (இந்தக் கட்டுரையில் முற்றாகத் தவிர்த்திருக்கிறேன்). மேலும் கதாசிரியர்களை வைத்துக் கதைகளை எழுதாதீர்கள் என்றும் சொன்னார். ‘ஏன்’ என்று நான் கேட்கவில்லை.

10 நாட்களுக்கு முன்பாகத்தான் முகநூலில் அவரது “சங்கீத நினைவலைகள்” புத்தகம் பற்றி அறிமுகமாக ஒரு பத்தி எழுதியிருந்தேன். அவருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்தேன் (அவர் முகநூல் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன்). அது முடியாமல் போய்விட்டது.

சிலர் நம்முடன் இருக்க மாட்டார்கள், ஆனாலும் எப்போதும் நம் அருகில் இருந்து நம்மைக் கவனித்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவார்கள் – வாதூலன் அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.

.