
தனத்திற்கு தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. திருமணம் ஆகி இந்த எட்டு ஆண்டுகளில் அவளுடைய ஒரகத்திகள், நாத்தனார் அவள் பின்னால் அவளைப் பற்றி பேசுவதும் அவளை ஏளனமாக பார்ப்பதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தும் கூட தன்னை எல்லோரும் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக இப்படி ஒதுக்குகிறார்களே என்று உள்ளுக்குள் குமைந்தாள்.
தன் கணவனிடம் மெதுவாக ஒரு நாள் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏங்க நாம ஏன் ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கக் கூடாது ?” என்று கேட்ட மாத்திரத்தில் அவள் கணவன் திவாகர் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தான். அழுகையில் அவள் வாயடைத்துப் போய் விட்டாள்.
சில நாட்களுக்குப் பிறகு ஊரில் உள்ள ஒரு பிரபல மகப்பேறு மருத்துவரிடம் செல்ல ஒரு வழியாக அவள் கணவன் திவாகர் சம்மதித்தான். இருவரும் தனித்தனியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆரம்பத்திலிருந்தே திவாகரும் அவன் வீட்டில் உள்ள அனைவருமே தனத்தை குறை கூறிக் கொண்டே இருந்தனர். இன்று பரிசோதனை முடிந்து இருவரும் வெளியே வந்தனர். திவாகர் முகத்தில் ஈயாடவில்லை.
மௌனமாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். தனத்திற்கு எல்லாமே நார்மலாக இருக்கிறது என்ற ரிப்போர்ட்டை பார்த்தவுடன் திவாகருக்கு தலை சுற்றியது. தன்னிடம் தான் குறை இருக்கிறது என்ற உண்மையை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அன்று அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்தான். தனமும் அவனை தனியே விட மனமில்லாமல் ஆபீஸுக்கு லீவு சொன்னாள்.
ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். அவள் சமையல் அறையில் காய் நறுக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று திவாகர் அவள் முன்பு வந்து நின்று அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு ஓ என்று அழுதான். “தனம் என்னை மன்னித்துவிடு… நீ சொன்ன மாதிரியே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம்… நாளைக்கு அம்மாவிற்கு ஃபோன் போட்டு நான் எல்லா விஷயத்தையும் சொல்லிடறேன். எங்க வீட்ல இனிமே யாரும் உன்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டாங்க. நல்ல நாளாப் பார்த்து நாம போய் பிறந்து மூணே மாதமான ஒரு பெண் குழந்தையாப் பார்த்து தத்து எடுத்துக் கொள்ளலாம்”. காலில் விழாத குறையாக அவளிடம் மன்னிப்புக் கேட்டான் திவாகர்.
அவள் வீட்டு ஹாலில் மாட்டி இருந்த ஒரு குழந்தையை அணைத்தபடி இருந்த ஒரு பெண்ணின் படம் அழகாக அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
